Monday, March 12, 2018

பியதோர் தஸ்தொயேவ்ஸ்கி....

பியதோர் தஸ்தொயேவ்ஸ்கி....

பிரபலமான இந்த ரஷ்ய எழுத்தாளரைப் படிக்காமல் இறந்து போய் விடாதீர்கள். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இங்கு அவரைப் புதியதாய் படிக்க நினைப்பவர்களுக்கு அவரின் புத்தகங்களை எந்த வரிசையில் படிப்பது என்று வரிசைப் படுத்தித் தருகிறேன். எளிமையில் இருந்து கடினம் நோக்கி என்ற அடிப்படையில் இதைச் சொல்கிறேன். படித்துவிட்டுத் திரும்பிப் பார்க்கும் போது இந்த வரிசையே எனக்கு உகந்ததாய் தோன்றியது.

1. The idiot.

2. The gambler.

இவை ஒரு அறிமுகமாய் இருக்கும். அவரை மேலும் படிக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்க உங்களுக்கு உதவக் கூடும். இதில் " The idiot " புத்தகத்தில் எல்லாவிதத்திலும் நல்லவனாய் இருக்கும் ஒருவனை கட்டமைக்க முற்படுவார் தஸ்தொயேவ்ஸ்கி. மனிதனின் சுய நலமே அவனை உள்ளிருந்து வழி நடத்துகிறது என்ற கருத்துடையவன் நான். ஆனால் மாறாக, ஒரு மனிதனின் " நல்ல தன்மை " உள்ளிருந்து மேலும் மேலும் பொங்கி வருகிறது, அப்படி ஒரு முழு நாயகனை என்னால் படைக்க முடியும் என்ற சவாலுடன் தஸ்தொயேவ்ஸ்கி இந்த புத்தகத்தை எழுதியிருப்பார். படித்துப் பாருங்கள். இரண்டாவது இந்த " The gambler " . அடிப்படையில் ஒரு சூதாடியைப் பற்றிய புத்தகம். தஸ்தொயேவ்ஸ்கியும் ஒரு பிறவி சூதாடியாய் இருந்ததால் வெகு லாவகமாய் இந்த புத்தகத்தை எழுத முடிந்தது. பணம் கட்டி சீட்டு விளையாடும் பழக்கமிருந்த எனக்கு ஒரு சூதாடியின் உள்ளத்தையும் எழுத்தையும் நெருங்கிப் பார்க்க முடிந்தது.

3. Crime and punishment.

4. Karamazov Brothers.

இவை இரண்டும் அவரது புகழ் பெற்ற புத்தகங்கள். இலக்கியத்தின் உச்சம் என்று சொல்லலாம். இப்போது தமிழிலும் கிடைக்கின்றன. Crime and punishment சினிமாவாகவும் வந்துவிட்டது. நான் எப்போதும் நினைப்பதுண்டு, Karamazov Brothers படிக்க உங்களை தயார் படுத்தும் புத்தகமே Crime and punishment. இதை படித்துவிட்டு அதைப் படியுங்கள். Karamazov Brothers இல் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கு கடவுளை நேரில் கொண்டு வந்து காட்டுவார். கிராம்ஸி சொல்லுவாரே, ஒவ்வொரு மனிதரும் தத்துவவாதியே என்று, அதை முழுதும் உணர Karamazov Brothers படிக்க வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு வித தத்துவப் போக்கை உணர்த்துவது. இதில் எந்த தத்துவப் போக்கின் பின்னால் தஸ்தொயேவ்ஸ்கி ஒளிந்துள்ளார் என்று கண்டுபிடிப்பது கடினம்.

5. Notes from the under ground.

இது தஸ்தொயேவ்ஸ்கியின் தத்துவ உச்ச கட்டம். அவரது எழுத்தின் சாறு. புரிந்து கொள்ள சவால் விடும் புத்தகம். படித்துப் பாருங்கள், நீங்கள் தஸ்தொயேவ்ஸ்கி என்ற பிரம்மாண்டத்தைப் படிக்கிறீர்கள் என்ற பெருமிதத்தை உணர்வீர்கள். நெருக்கி விடுவார்.

மேலே உள்ள ஐந்து புத்தகங்களை அவரின் முக்கிய படைப்புகளாய் சொல்லலாம். இன்னொரு புத்தகம் குறித்தும் சொல்கிறேன். The possessed என்ற புத்தகம். அவர் காலத்தில் பெரிதும் பேசப்பட்ட NIHILISM என்ற தத்துவப் போக்கை எதிர்த்து எழுதப்பட்ட புத்தகம். வரிந்து கட்டிக் கொண்டு NIHILISM த்தை எதிர்த்து எழுதியிருப்பார். அரசியல் நோக்கு முதன்மைப் பட்டதால் புத்தகத்தின் இலக்கியத் தன்மை குறைந்து விட்டதை எளிதில் உணர முடியும். படிக்கும் போது அங்கங்கு வெளிப்படும் தஸ்தொயேவ்ஸ்கி என்ற பிரம்மாண்டம் தரும் வெளிச்சத்தை ஆதாரமாய்க் கொண்டு தொடர்ந்து பயணிக்க வேண்டியிருக்கும். எப்படா முடியும் என்ற சலிப்புடனேயே படிக்க வேண்டியிருந்தது.

அவரின் மற்ற கதைகள் சிறு கதைத் தொகுப்புகளாய் வந்துள்ளன. அதில் சில முக்கியமான படைப்புகள். ஒரு கதை முதல் இரவு தடைபடுவதை மையமாய் வைத்து நகைச்சுவையாய் எழுதப்பட்ட கதை. பெயர் மறந்து விட்டேன். சிறு கதைகள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். தமிழில் கிடைக்கும்.

ஆங்கிலப் பதிப்புகள் வாங்கும் போது சற்று கவனமாய் எழுத்தின் அளவைப் [ Font size ] பார்த்து வாங்குங்கள். பெரிய புத்தகங்கள் சின்ன எழுத்து கொண்டு படிப்பது மிகவும் கடினம். இணையம் மூலம் வாங்கும் போது இது ஒரு பெரிய சிக்கல். டாகின்ஸ் எழுதிய " Extended Phenotype " புத்தகத்தை இணையம் மூலம் ஆர்வமாய் வாங்கி, அதன் சிறிய எழுத்துக்கள் படிக்க விடாமல் செய்ததால் படிக்காமல் வைத்துள்ளேன்.

No comments:

Post a Comment