Monday, March 12, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 13

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
Via facebook
2018-03-06

கோவில் உண்டியல் காணிக்கைகளை அதிகாரிகள் எடுத்துக்கொள்கிறார்களா? - பகுதி 13
----------------------------------------------------------------
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பு ஒன்று ஒளிபரப்பானது. அதாவது, ஒரு கோவிலைக் குறிப்பிட்டு அந்தக் கோவிலில் உண்டியலில் காணிக்கையாக விழும் பணத்திற்கு எந்தக் கணக்கும் வைக்கப்படுவதில்லை; விழும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை கோவிலின் அதிகாரிகளே எடுத்துக்கொள்கிறார்கள் என்று கூறியது அந்தத் தொகுப்பு. அதற்கு ஆதரவாக, கோவிலுக்குச் சொந்தமான கடையை ஆக்கிரமித்து கடையை வைத்திருப்பவரின் 'பைட்' வேறு. அந்த செய்தித் தொகுப்பை பார்த்த யாரும் அடுத்த முறை கோவிலில் காணிக்கையை செலுத்துவதற்கு முன்பாக ஒரு கணம் யோசிப்பார்கள்.

உண்மையில், கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை அப்படி கோவிலின் அதிகாரிகளே எடுத்துக்கொள்ள முடியுமா? உண்டியல் காணிக்கைகள் என்ன ஆகின்றன?

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களில் உள்ள உண்டியல்களை எண்ணுவதற்கு பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு கோவிலிலும் உண்டியல்களைத் திறப்பதற்கு பல்வேறு கால அளவுகள் இருக்கின்றன. பெரும்பாலும் மாதம் ஒரு முறை அல்லது உண்டியல் நிறையும் காலத்தைக் கணக்கில்வைத்து உண்டியல்கள் திறக்கப்படும். தவிர, எல்லாக் கோவில்களின் உண்டியல்களும் பசலி ஆண்டின் இறுதியில் அதாவது ஜூன் மாத இறுதியில் கண்டிப்பாக திறக்கப்படும்.

2 லட்ச ரூபாய்கு குறைவாக வருமானம் உள்ள கோவில்கள், அறநிலையத் துறையின் ஆய்வாளர் அல்லது சரக ஆய்வர் முன்னிலையில் திறக்கப்படும். இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள கோவில்கள், அறநிலையத் துறையின் துணை ஆணையர் அல்லது அதற்கு மேற்பட்ட படிநிலையில் உள்ள அதிகாரி அல்லது வேறு பெரிய கோவிலின் இணை ஆணையரின் முன்னிலையில் திறக்கப்படும். 

கோவில் உண்டியல்கள் எல்லாவற்றுக்குமே இரண்டு பூட்டுகள் இருக்கும். ஒன்று அந்த உண்டியலிலேயே அமைந்திருக்கும் பூட்டு. மற்றொன்று வெளியில் பூட்டப்படும் பூட்டு. இவற்றின் சாவியில் ஒன்று கோவிலின் நிர்வாக அதிகாரியிடமும் மற்றொன்று கோவிலின் தக்காரிடம் (Fit person) இருக்கும். அல்லது நிர்வாக அதிகாரி மற்றும் இணை ஆணையரிடம் இருக்கும். அல்லது இணை ஆணையரிடம் மட்டும் இருக்கும். இது கோவிலின் வருவாய், நிர்வாகப்படி நிலை ஆகியவற்றைப் பொறுத்தது.

உண்டியல்களின் பூட்டுகள் எல்லாமே துணியால் சுற்றப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்த பூட்டுகளுக்கான சாவியும் துணியால் சுற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கும். இரு இடங்களிலிருந்து சாவிகள் கொண்டுவரப்பட்டு, எல்லா அதிகாரிகள், அறங்காவலர்கள் முன்னிலையில் அவை பிரிக்கப்படும்.

இதற்குப் பிறகு, முதல் உண்டியல் திறக்கப்பட்டு அவற்றில் இருக்கும் காணிக்கை டிரெங்க் பெட்டி ஒன்றுக்கு மாற்றப்படும். எந்த உண்டியல், எந்த டிரெங்க் பெட்டி, எத்தனை மணிக்கு திறக்கப்பட்டது என்ற விவரங்கள் ஒரு பதிவேட்டில் குறிக்கப்படும். அந்த டிரெங்க் பெட்டி நிறைந்தவுடன் அது பூட்டப்பட்டு, அடுத்த பெட்டி கொண்டுவரப்பட்டு காணிக்கை நிரப்பப்படும். அந்தத் தகவலும் பதிவேட்டில் ஏறும். இப்படியாக ஒரு உண்டியல் காணிக்கை முழுவதும் பெட்டியில் ஏற்றப்பட்டவுடன் அந்த டிரெங்க் பெட்டிகள் காணிக்கை எண்ணும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்படும்.  அது பெரும்பாலும் எல்லோரும் பார்க்கக்கூடிய வகையில் அமைந்த மண்டபமாக இருக்கும்.

அந்த மண்டபத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை கொட்டப்படும். அங்கே கோவிலின் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் (பெரிய கோவிலாக இருந்தால்) இருப்பார்கள். காணிக்கையை எண்ணுவதற்கு தன்னார்வலர்கள், பக்தர்கள் வரவேற்கப்படுவார்கள். அவர்களது விவரங்கள் வாங்கப்பட்டு, காணிக்கையை எண்ணுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். முதலில் நோட்டுகள் தனியாகவும் காசுகள் தனியாகவும் பிரிக்கப்படும். பிறகு அவை எண்ணப்படும்.

ஒவ்வொரு வகை நோட்டும் பிறகு கட்டாக கட்டப்பட்டு, அங்கிருக்கும் வங்கி அதிகாரியிடம் கொடுக்கப்படும். அந்த வங்கி அதிகாரியிடம் எத்தனை கட்டு கொடுக்கப்பட்டது என்ற விவரம்கூட பதிவுசெய்யப்படும். இப்படியாக எல்லாப் பணமும் எண்ணி முடித்த பிறகு, மொத்தப் பணமும் வங்கி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு, கோவிலின் கணக்கில் வரவுவைக்கப்பட்டதற்கான சலான் கோவிலின் அதிகாரியிடம் அளிக்கப்படும். அந்த சலான் எண் கோவிலின் உண்டியல் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டவுடன் உண்டியல் எண்ணும் நடைமுறைகள் முடிவுக்கு வரும்.

இந்த உண்டியலில் விழுந்த உலோகங்கள் ஒரு நகை ஆசாரியின் மூலம் பிரிக்கப்பட்டு தங்கம், வெள்ளி, தாமிரம் என வகைப்படுத்தப்பட்டு, எலெக்ட்ரானிக் தராசின் மூலம் நிறுத்து கோவிலின் கணக்கில் வைக்கப்படும். நகைகள் விழுந்திருந்தால் அவையும் பதிவுசெய்யப்படும்.

இதற்குப் பிறகு மற்றொரு நாளில் ஆசாரி, கற்களை சோதிக்கும் நிபுணர் ஆகியோர் அழைத்துவரப்பட்டு உலோகத்தின் தரம் சரிபார்க்கப்படும். நகைககளில் உள்ள அரக்கு,மெழுகு போன்றவை நீக்கப்படும். இந்த நகைகளில் உள்ள கற்கள் total internal reflection முறையில் விலை உயர்ந்த கல்லா அல்லது சாதாரண கல்லா என்பது அறியப்பட்டு தரம் பிரிக்கப்படும்.
இவ்வாறு பிரிக்கப்பட்ட தங்கம், ஆகியவை பிறகு மும்பைக்கு பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டு உருக்கி, பிஸ்கட்களாக மாற்றப்படும். அவை கோவில் கணக்கில் வரவில் வைக்கப்படும்.

இந்த விவரங்கள் எல்லாம் உண்டியல் பதிவேடு, காணிக்கைப் பதிவேடு, நகை பதிவேடு என பல்வேறு பதிவேடுகளில் பல்வேறு அதிகாரிகளின் ஒப்புதலுடன் பதிவுசெய்யப்படும். அதேபோல, உண்டியல் பணத்தை எண்ணியவர்களின் கையெழுத்துகளும் வாங்கப்படும்.
இந்த நடைமுறைகள் எல்லாமே வெளிப்படையாக, எல்லோரும் பார்க்கும் வகையிலேயே நடக்கும்.

பெரும்பாலான கோவில்களில், என்றைக்கு உண்டியல் பணம் எண்ணப்படும் என்ற விவரங்கள் முன்கூட்டியே பலகையில் எழுதிவைக்கப்படுவதும் உண்டு. அன்றைக்கு விருப்பமுள்ளவர்கள் சென்று ஆண்டவனின் பணத்தை எண்ணும் திருப்பணியில் ஈடுபடலாம்.

இதைப் படிக்கும்போதே களைப்பு ஏற்படுகிறது அல்லவா? அறநிலையத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் இதுதான் நடைமுறை. 'திருட்டு' திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்ட இந்த விதிமுறைகள்தான் கோவில் காணிக்கை, உடையவருக்குச் சேர்வதை உறுதிசெய்கின்றன.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத, சிதம்பரம் நடராஜர் கோவில், சங்கர மடம் ஆகியவற்றில் காணிக்கைகள் எப்படி எண்ணப்படுகின்றன என்பதை விவரம் தெரிந்த யாராவது பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு: சிதம்பரம் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் உண்டியல் வருவாய் என்று சொல்லப்பட்டது. கோவில் நிர்வாகம் 2009ல் அறிநிலையத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதும் சில மாதங்களிலேயே மாத உண்டியல் வருவாய் 18 லட்சமாக இருந்தது.

அப்படியானால், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வந்ததும் பக்தர்கள் அதிக காணிக்கை செலுத்தினார்களா? இல்லை, அவர்கள் எப்போதும் போலவே காணிக்கை செலுத்தினார்கள். என்ன நடந்திருக்கும் என்பதை நாமே யூகித்துக்கொள்ளலாம்.

2014ல் இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து நீங்கியது.

(H Rajaதான் டிரென்டிங் என்பதால், அவரது ப டம் ஒரு எஃபெக்டிற்காக)

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1200507546747637&id=100003652096964

No comments:

Post a Comment