ஆழி செந்தில் நாதன்
Via facebook
2018-02-04
(நீள் பதிவு)
மா-லெ தோழர்கள் - மாவோயிஸ்ட்களுக்கு ஒரு சிந்தனை பரிசோதனை..
திரிபுராவில் சிபிஎம்மின் தோல்வியை முன்வைத்து, மார்க்சிய லெனினிய இயக்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த தோழர் எழுதியப் பதிவு ஒன்றை நேற்றிரவு பார்த்தேன். அந்தப் பதிவு சிபிஎம்மை விளாசித்தள்ளியது. சிபிஎம்மின் தவறுதான் பாஜக வந்ததற்கு காரணம் என்று கூறிய தோழர், தன்னுடைய தீர்வு என்று எதையும் முன்வைக்கவில்லை. பிரகாஷ் காரத்தின் தவறான முடிவுகள்தான் இன்று சிபிஎம்மை ஒழித்துக்கட்டுகிறது என்று மா லெ இயக்கப் பின்னணி கொண்ட தோழர்கள் சிலரும் கூறுகிறார்கள்.
நல்லது, நல்லது. இந்தியா பாசிச யுகத்தில் நுழைந்துகொண்டிருக்கிறது என்கிற அச்சத்தை இன்று இடதுசாரிகள் அனைவரும் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றாலும் இந்த உள்குத்து அரசியலுக்கு மட்டும் குறைவில்லை. சிபிஎம் நிச்சயம் விமர்சனத்துக்கு உட்படவேண்டியக் கட்சிதான் என்பதில் எனக்கும் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், அன்புக்குரிய எம்எல் தோழரே, நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?
இந்தச் சூழலுக்கு நாம் எந்த விதத்திலும் காரணம் இல்லையா? இந்தியா இவ்வளவு பாசிச நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இந்த வேளையில் எங்கே போய்விட்டார்கள் நமது மாவோயிஸ்ட் தோழர்கள்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஆதரவாளர்கள், இடதுசாரிகள், தேசிய இனப் பிரச்சினை பற்றி பேசுவோர் அனைவருக்கும் பொதுவாக இன்று ஒரு சிந்தனை பரிசோதனையை (thought experiment) முன்மொழிய விரும்புகிறேன். கொஞ்ச நேரம் ஒதுக்கமுடியுங்களா?
சிந்தனைப் பரிசோதனை பலவிதம். அதில் ஒன்று, “இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்” நாமே கேள்வி கேட்டு நாமே பதில் சொல்லமுனைவது ஒரு வகை. அந்த அடிப்படையில் இங்கே ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்: “இந்தியாவில் மாவோயிஸ்ட்கள் ஒரு தேர்தல் கட்சியைத் தொடங்கியிருந்தால், இன்றைய நிலை என்னவாக இருந்திருக்கும்?” என்பதுதான் அந்தக் கேள்வி.
இங்கே முன்வைக்கப்படும் விவரங்கள் முழுமையானதாகவோ துல்லியமானதாகவோ இல்லாமலிருக்கலாம். ஆனால் முன்வைக்கப்படும் வாதங்களை மட்டும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தப் பரிசோதனையைச் செய்யுங்கள்.
முதலில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இரு படங்களையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
*
இருபதாண்டுகாலமாக. குறைந்தபட்சம் 9 மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை ஒழிப்பதற்காக ஒன்றிய அரசு ஆபரேஷன் கிரீன்ஹண்ட் என்கிற நடவடிக்கையைத் தொடங்கியது. 2009 ஆம் ஆண்டு வாக்கில் 180 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு இருந்தது என அரசு கூறியது. இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் (காஷ்மீர் கூட அல்ல,) மாவோயிஸ்ட்களின் செந்தளப்பிரதேசம்தான் என மன்மோகன் சிங் அரசு கூறியது. ஏனென்றால் மாவோயிஸ்ட்களின் கையில், ஜார்கண்ட், பிஹார், சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்காணா, மகாராஷ்ட்டிரம், (கிழக்கு) உத்தரப் பிரதேசம். மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 180 மாவட்டங்கள் இருந்தன. இவற்றை Red Corridor என்று அரசும் ஊடகங்களும் கூறின.
பிறகு, ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த பத்தாண்டுகளில் இந்த மாநிலங்களில் இருந்த மாவோயிஸ்ட் செல்வாக்கு அடர்த்தியிலும் பரப்பளவிலும் குறைந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு 100 மாவட்டங்களுக்கும் குறைவான இடங்களுக்கு சுருங்கி. தற்போது இரண்டு மூன்று டஜன் மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு மண்டலம் நிதர்சனத்தில் இருக்கிறது.
இப்போது சிந்தனைப் பரிசோதனையைத் தொடங்குவோம்: மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு உயரத்தில் இருந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, 2008-2010 வாக்கில், அவர்கள் ஒரு நாடாளுமன்ற சனநாயகக் கட்சியை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்கி, அதைத் தேர்தலில் பங்கேற்கும்படி செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கட்சிக்கு மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி என்று தற்காலிகமாக பெயர்வைப்போம். அப்போது என்ன நடந்திருக்கும்.
அந்த 180 மாவட்டங்களில் மாவோயிஸ்ட்களுக்கு மக்கள் ஆதரவு அல்லது செல்வாக்கு இருந்தது என்பது உண்மையென்றால், சராசரியாக 200 நாடாளுமன்றத் தொகுதிகளில் மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி வெற்றி பெறுவதற்கான அல்லது இரண்டாமிடத்தில் வருவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். அதாவது, காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்து இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாவதற்கான வாய்ப்பை மாவோயிஸ்ட்கள் பெற்றிருந்திருப்பார்கள். 2014 இல் பாஜக அலை வடக்கே அடித்திருக்காது. இப்போது கேள்வி: தங்களுடைய செல்வாக்கு உச்சக்கட்டத்தில் இருந்தபோது எந்த சிந்தனை அல்லது சித்தாந்தம் அல்லது வியூகம் ஒரு தேர்தல் கட்சியைத் தொடங்குவதிலிருந்து மாவோயிஸ்ட்களைத் தடுத்தது? ஒருவேளை அன்று அவர்கள் ஒரு தேர்தல் கட்சியைத் தொடங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று இன்று உங்களுக்குத் தோன்றுகிறதா?
சிந்தனைப் பரிசோதனையைத் தொடர்வோம். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் பல ஆயுதக்குழுக்கள் விடுதலைப்போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. வட கிழக்கில் 2000களில்தான் அவை மெல்ல மெல்ல பலமிழக்கத்தொடங்கியிருந்தன. உல்ஃபா போன்ற அமைப்புகளும் வீழ்ச்சி அடையத்தொடங்கின. ஒருவேளை, வடகிழக்கில் உள்ள அமைப்புகளையும் காஷ்மீரில் உள்ள (குறிப்பாக ஹூரியத்தில் இருந்த மிதவாத போக்கினர், பாகிஸ்தானோடு சேரக்கூடாது ஆனால் தனிநாடு வேண்டும் என்பவர்கள், பிரிவு 370ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மட்டும் கோருபவர்கள்) அமைப்புகளையும் சுயநிர்ணய உரிமைக்கான அல்லது கூட்டாட்சிக்கான ஒரு கோரிக்கையின் அடிப்படையில் மாவோயிஸ்ட்கள் தங்களோடு இணைத்திருந்தால், என்ன ஆயிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். மாவோயிஸ்ட் தேர்தல் கட்சியும் இந்தக் ஆயுதக்குழுக்கள் சார்பான தேர்தல் கட்சிகளும் கைகோர்த்திருந்தால், என்ன ஆகியிருக்கும் என்பது இரண்டாவது கேள்வி.
காஷ்மீரில் ஆயுதப்போராட்டம் மேலும் வளரவில்லை. அத்துடன் அது பாகிஸ்தானின் ஆதரவோடு மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றா மாறிவிட்டது. பல அமைப்புகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மக்கள் போராட்டங்களோ தொடர்ந்து நடைபெறுகின்றன. மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிற தேர்தல்கட்சிகள் களத்தில் இல்லை. ஒருபக்கம் உமர் அப்துல்லாவின் கட்சி துரோகக் கட்சியாக அம்பலப்பட்டுநிற்கிறது. ஆனால் மறுபுறம்? பாஜகவுடனேயே கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கிறது மெஹ்பூபா முப்தியின் கட்சி! என்ன அவலம் பாருங்கள்?
ஒருவேளை காஷ்மீரிகளுக்கென ஒரு நியாயமான கட்சி உருவாகி அது மாவோயிஸ்ட்களுடனும் வடகிழக்கு கட்சிகளுடனும் இணைந்து ஒரு முன்னணியில் இருந்திருந்தால், வீரம்செறிந்த காஷ்மீரிகள் மெஹ்பூபாவையும் உமரையும் நம்புவார்களா?
இப்போது வடகிழக்குக்குச் செல்வோம். இன்றும் வடகிழக்கில் சில அமைப்புகள் தங்கள் விடுதலைக்கனவில் உறுதியாக இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை பலமிழந்துள்ளன. மீண்டும் தலைதூக்கமுடியாத அளவுக்கு அவை நலிந்துவிட்டன. முப்பது நாற்பது வருடம் போராடி முடிவுக்கு வராத நிலையில், மக்களும் சலித்துப்போய்விட்டார்கள். இளைய தலைமுறை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இதோ இங்கே அண்ணா நகர் நளாஸ் ஆப்பக்கடையில் சர்வர் வேலை செய்துகொண்டிருக்கிறது. அங்கே, பல அமைப்புகள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கின்றன. ஏதோ ஒரு செட்டில்மென்ட் வந்தால் போதும் என்கிற நிலைமையே இருக்கிறது. வேறு பல சந்தர்ப்பவாத அமைப்புகளோ அப்படியே பல்டி அடித்து பாஜகவுடனேயே கைகோர்க்கின்றன.
ஒருவேளை பத்தாண்டுகளுக்கு முன்பு – அதாவது ஆர்எஸ்எஸ் தன் இன்றைய வடகிழக்கு வியூகத்தை அமைக்கும் முன்பு – மாவோஸ்ட் தேர்தல் கட்சியும் வடகிழக்கின் ஆயுதக்குழுக்களின் தேர்தல் கட்சிகளும் கைகோர்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கேள்வி கேளுங்கள், பதிலை யோசியுங்கள்.
பஞ்சாபை எடுத்துக்கொள்ளுங்கள். வலுவான இடதுசாரி அரசியல் பிடிப்பு கொண்ட மக்கள் பஞ்சாபிகள். அங்கே சீக்கிய மதவாத அடிப்படையிலான காலிஸ்தான் போராட்டம் உருவாகி, வளர்ந்து, பிறகு அடக்கப்பட்டு, இப்போது அது பழங்கதை ஆகிவிட்டது. ஆனால் பஞ்சாபிகளுக்கான தேசிய அடையாள ஆர்வம் அடங்கவில்லை. சீக்கிய மத அடையாளத்தைக் கடந்து இந்துக்கள், ஏன் பாகிஸ்தானிலுள்ள முஸ்லீம் பஞ்சாபிகள்கூட, ஒற்றை பஞ்சாபி அடையாளத்தோடு இணைந்து நிற்கவேண்டிய அவசியத்தை இன்று உணர்கிறார்கள். ஒரு காலத்தில் பஞ்சாபிகளின் தேசிய அடையாளமாக கருதப்பட்ட அகாலி தளம் கட்சி இப்போது ஊழல் நிறைந்த கட்சியாக, குடும்பக்கட்சியாக, கார்ப்பரேட் எடுபிடியாக மாறிவிட்டது. பாஜக அந்தக் கட்சியோடு சேர்ந்து இப்போது அந்தக் கட்சியை விழுங்கி வளர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, முன்னாள் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த போராளிகள் பிரிவினை சாத்தியமில்லை என்று முடிவின் அடிப்படையில், அகாலிகளுக்கு மாற்றாக தேர்தல் களமிறங்கத்தொடங்கினார்கள். ஆனால் சரியான மாற்றுக்கட்சியை உருவாக்குவதற்கு பதிலாக குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்தார்கள். குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியைத் தேர்ந்தெடுத்து தங்களுடைய ஆதரவை அதற்கு வழங்கினார்கள். பஞ்சாபில் நடந்த கடந்த இரு தேர்தல்களில் வெளிநாடு வாழ் சீக்கியர்கள் ஆம் ஆத்மிக்கு பணமழையாக கொட்டி, அதைப் பயன்படுத்தி சீக்கிய அல்லது பஞ்சாபி அடையாளத்தைக் காப்பாற்ற முயன்றார்கள். பாஜக. காங்கிரஸ் போன்ற மற்றுமொரு அனைத்திந்தியக் கட்சிதான் ஆப் என்று தெரிந்தும் வேறு வாய்ப்பற்ற நிலையில் அந்த முடிவை அவர்கள் எடுத்தார்கள். ஆனால் பழைய காலிஸ்தான்வாதிகளின் இன்றைய அரசியல் மாற்றங்களைப் பற்றிய சந்தேகம் தொடர்ந்து நீடித்த நிலையில், ஆம் ஆத்மிக்கு அவர்கள் ஆதரவளிப்பதைப் பார்த்து பயந்த பஞ்சாபிலிருந்த இந்துக்கள் காங்கிரஸ், பாஜக பக்கம் நகர்ந்தார்கள். இவ்வாறாக இந்த குறுக்குவழி தோற்றுப்போனது.
சிந்தனைப் பரிசோதனையைத் தொடர்வோம்: ஒருவேளை பஞ்சாபிகள், மதச்சார்பற்ற பஞ்சாபி தேசியவாத தேர்தல்கட்சி ஒன்றைத் தொடங்கியிருந்தால், அந்தக் கட்சியோடு நமது கற்பனைக்கட்சியான மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி கைகோர்த்திருந்தால், எப்படி இருந்திருக்கும்? இந்தியாவை பல்வேறு தேசிய இனங்களின் சிறைச்சாலை என்று வர்ணிக்கும் மாவோயிஸ்ட்கள் நினைத்திருந்தால், இப்படி ஒரு பல்தேசியஇன கூட்டமைப்பை உருவாக்கமுடியாமல் போயிருக்குமா என்ன?
ஒருவேளை மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி 2000களில் தொடங்கப்பட்டிருக்குமானால், அவர்களுடைய செல்வாக்கிருந்த மாநிலங்களிலேயே மிக முக்கிய மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்கண்ட், பிஹார் தொடர்ப் பிரதேசத்தில் அது போட்டியிட்டிருக்குமேயானால், இன்று இந்த மாநிலங்களில் பாஜகவோ அதன் ஆதரவுக்கட்சிகளோ ஆட்சியிலேயே இருந்திருக்காது.
உண்மை என்னவென்றால், எங்கெல்லாம் மாவோயிஸ்ட்கள் தீவிரமான செயல்பட்டார்களோ அங்கெல்லாம் பிறகு பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது! சத்தீஸ்கர், ஜார்கண்ட் பெரிய உதாரணங்கள். மாவோயிஸ்ட்களின் “இரண்டுங்கெட்டான்” தேர்தல் நிலைப்பாடு, அவர்களுக்கே எமனாக மாறியது. ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக மாவோயிஸ்ட்களின் அடித்தளத்தைத் துடைத்தெறிந்தது. வாஜ்பாயி-அத்வானி காலத்துக்கு பிந்தைய நவீன பாஜகவின் முதல் வெற்றி “மாவோயிஸ்ட் மாநிலங்களில்தான்” நிகழ்ந்தது என்பதை மறவாதீர்கள்.
பரிசோதனையைத் தொடர்வோம்: மத்திய, கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு மாநிலங்களில் ஒருவேளை மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி முக்கியமான கட்சியாக மாறியிருக்குமானால், பாஜக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்காது. ஒரு வேளை வேறு மாநிலங்களில் இதே அளவுக்கு வெற்றியைப் பெற்று பாஜக பெரிய கட்சியாக இருந்திருந்தாலும், அதற்கு எதிரணியாக சிபிஐ, சிபிஎம்மும் இந்தியாவின் பிரதான மாநிலக் கட்சிகளும்கூட மாவோயிஸ்ட் தேர்தல் கட்சியோடு கைகோர்த்து நிற்கக்கூடிய வாய்ப்பு வந்திருக்கும். (காங்கிரஸ் தேவைப்பட்டிருக்காது) இந்தியாவின் தேர்தல் கள யதார்த்தமும் முற்றிலும் வேறானதாக இருந்திருக்கும்.
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களுக்கும் சிபிஎம்முக்கும் முரண்பாடுகள் வெடித்திருக்கலாம். ஆனால் பாசிச அபாயம் இருக்கும் நிலையில் எந்த இடதுசாரியும் உள்முரண்பாடுகளை பொருட்படுத்தமாட்டார். பிஹாரில் பழைய இடதுசாரிகளோடும் எம்எல் இயக்கத்தின் வேறு பிரிவினோரும் மாவோயிஸ்ட்கள் இணைந்து நின்றிருக்கமுடியும்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக, மற்றொரு வெளியில், ஜனதா பரிவாரக் கட்சிகளுக்கும் திமுக, அகாலிதளம், தேசிய மாநாட்டுக்கட்சி, திரிணமூல் போன்ற கட்சிகளுக்கும்கூட அந்த மாவோயிஸ்ட் தேர்தல் கட்சி “வியூகார்த்த ரீதியிலான” இளைப்பாறுதலைத் தரக்கூடிய கட்சியாக மாறியிருக்கமுடியும்.
பத்தாண்டுகளுக்கு முன்புவரை 200 நாடாளுமன்றத் தொகுதிகளில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையிலிருந்த மாவோயிஸ்ட்கள், இந்தியாவின் நாடாளுமன்ற சனநாயக முறையைப் பற்றி, இன்றைய உலகச்சூழல் மற்றும் ஆயுதந்தாங்கிய போராட்டத்தின் எல்லைகள் பற்றி சரியான முடிவுகளுக்கு வந்திருந்தால், இன்று இந்தியாவின் முகமே வேறோன்றாக இருந்திருக்கும். குஜராத் தவிர வேறு எங்குமே பாஜக நீடித்திருந்திருக்காது. மெல்ல மெல்ல இடதுத் திருப்பத்தை நோக்கி இந்தியா சென்றிருக்கும். ஆனால் இந்தியா இன்று விரைவாக வலதுத் திருப்பத்தில் நுழைந்தேவிட்டது.
செயத்தக்க செய்யாமையானும் கெடும்!
இங்கே நான் யாரையும் குறைகூறவில்லை. மாவோயிஸ்ட்கள் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று, நிறைய மேற்கோள்களுடனும் காரணங்களுடனும் வந்து, என்னை அடிக்காதீர்கள். இது ஒரு சிந்தனை பரிசோதனை. அவ்வளவுதான்.
இந்தச் சிந்தனைப் பரிசோதனையோடு சேர்த்து இறுதியில் மற்றுமொரு கேள்வியையும் பரிசீலியுங்கள். மாவோயிஸ்ட்களுக்கு நாடாளுமன்ற சனநாயகம் குறித்து நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நாடாளுமன்ற சனநாயகம் உண்மையான சனநாயகம் அல்ல. சரிதான்.
ஆனால் ஆர்எஸ்எஸ்ஸுக்கு மட்டும் நாடாளுமன்ற சனநாயகம் குறித்து நம்பிக்கை இருக்கிறதா?
https://m.facebook.com/story.php?story_fbid=10157137382524046&id=612219045
No comments:
Post a Comment