Wednesday, March 21, 2018

திராவிடம் vs தமிழ்த்தேசியம் : திட்டமிட்டு குழப்புகிற நண்பர்களுக்கு ஒரு பதில்

ஆழி செந்தில் நாதன்
2018-03-21
Via facebook

திராவிடம் vs தமிழ்த்தேசியம் : திட்டமிட்டு குழப்புகிற நண்பர்களுக்கு ஒரு பதில்...

திராவிட இயக்கம் பற்றி, பெரியார், அண்ணா பற்றி நான் எழுதும்போதெல்லாம் என்னுடைய நண்பர்கள் சிலர் நான் திராவிடத்தைத் தூக்கிப்பிடிப்பதாக சொல்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி ஒரு தோற்றம் எழுவது தவிர்க்க இயலாததாக இருக்கலாம்.

அதைப் போலவே தமிழ்த்தேசியம்தான் இனி, பழைய திராவிட இயக்க அரசியல் அல்ல என்று சொல்லும்போது இவன் தமிழ் இனவாதி - தமிழ் நாஜிகளின் ரகசிய ஆதரவாளன் என்று சொல்லி சில திராவிடக் கொழுந்துகள் என்னை இழிவுபடுத்துகின்றன.

நான் திராவிட இயக்கத்தை - சுயமரியாதை இயக்க காலத்திலிருந்து இன்றுவரையிலான காலத்தை - விமர்சித்து, ஏற்க வேண்டியதை ஏற்று தவிர்க்க வேண்டியதைத் தவிர்த்து நிராகரிக்கவேண்டியதை நிராகரித்து முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதையே வலியுறுத்திவருகிறேன்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பை நிராகரிப்பவர்களும் அதை தனது எதிரியாக சித்தரிப்பவர்களும் தமிழ்த்தேசியத்துக்கு எந்த நன்மையும் செய்பவர்கள் அல்ல. உண்மையிலேயே அவர்கள் தமிழ்த்தேசியத்தை வலுவிழக்கச் செய்பவர்கள். ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலான திராவிட அரசியல் என்பது உள்ளீட்டில் தமிழ் அரசியல்தான்.

ஆனால் அந்த திராவிட இயக்க அரசியலை நாம் ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டமாகவே பார்க்கிறோம். தமிழ்நாடு அந்த காலகட்டத்தைத் தாண்டிவந்துவிட்டது என்பதையும் உறுதியாகச் சொல்லிவருகிறோம்.

அதை நான் பின்-திராவிட (post-Dravidian) காலகட்டம் என்று அழைக்கிறேன். அதாவது திராவிட இயக்க அரசியல் காலகட்டதைத் தாண்டிச்செல்கிறோம் என்று அதற்குப் பொருள். நாங்கள் முன்வைக்கும் தமிழ்த்தேசியம் என்பது பின்-திராவிட தமிழ்த்தேசியம்.  இதை வெறும் கருத்தாக்கமாக இல்லாமல், வரலாற்றினூடாகவே அடைந்திருக்கிறோம். 2013 இலிருந்து இதைப்பற்றி நான் எழுதிவருகிறேன்.

ஆனால் எதிர்-திராவிட (Anti-Dravidian) தமிழ்த்தேசியத்தை நாங்கள் முற்றமுழுதாக நிராகரிக்கிறோம். அது வரலாற்றின் விளைபொருள் அல்ல. மாறாக தமிழ்த்தேசியத்தைப் பீடித்திருக்கும் சாதியவாத, பார்ப்பனீயச்சார்பு கருத்தியல். அது ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தின் பங்களிப்பை நிராகரித்து, ஆயிரக்கணக்கான நமது முன்னோடிகளை, அவர்களது போராட்டங்களை நிராகரித்து தமிழர்களை வரலாற்றுரீதியில் நிராயுதபாணிகளாக ஆக்கும் முயற்சி.

திராவிட இயக்கம், கருத்தாக்கம். கட்சிகள் குறித்து நாம் ஆயிரம் விமர்சனங்களைக் கொண்டிருக்கிறோம். தமிழ்த்தேசிய, தலித், இடதுசாரி முன்னுரிமைகளின் வழி அதன் வரலாற்றுத்தவறுகளை பலரும் விமர்சித்திருக்கிறார்கள். அதைப்போலவே இது நாள் வரையிலான தமிழ்த்தேசிய அரசியலையும் நாம் விமர்சனபூர்வமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

நான் பெரியாரைக் கடவுளாக்குகிற. திராவிட இயக்கத்தை விமர்சனமின்றி தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிற கும்பலைச்சார்ந்தவன் அல்ல. ஆனால் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் வியூகம்சார்ந்து அதை நாம் உள்வாங்கிக்கொள்ளவேண்டியத் தேவையையும் மறுப்பது என்பது முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும்.

2015க்கு முன்புவரை திராவிடம், தமிழ்த்தேசியம் தொடர்பான உரையாடல்களில் நான் அதிகம் பங்குபெற்றேன். முகநூல் சண்டைகளில் நிறைய பங்கேற்றேன். பிறகு சில போலித் திராவிட இயக்கவாதிகளுக்கும் போலித் தமிழ்த்தேசிய வாதிகளுக்கும் இடையிலான அந்தச் சண்டை வேறு உள்நோக்கங்களைக் கொண்டது என்பதை அறிந்து -விலகிவிட்டேன். அத்துடன் மொழியுரிமைத் தளத்தில் இருதரப்பினரையும் இணைக்கவேண்டியுள்ளது என்பதால் கடந்த மூன்றாண்டுகளில் வெளிப்படையான விவாதங்களைத் தவிர்த்துவந்தேன். வெளிப்படையாகத்தான் தவிர்த்துவந்தேனே தவிர உள் அரங்குகளில் மூச்சுமுட்ட விவாதித்துவந்திருக்கிறேன். இன்று திராவிட இயக்கத்தைத் தாண்டிய தமிழ்த்தேசியம் எப்படி இருக்கவேண்டும் என்கிற ஒரு கோட்பாட்டுப் புரிதல் பலருக்கு வந்திருப்பதில் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி.

இனி மீண்டும் விவாத களம் புகவேண்டிவந்திருக்கிறது. எத்தனை முறை எடுத்துச்சொன்னாலும் புரிந்துகொள்ளாமல் என்னை 'திருட்டுத் திராவிடன்' என்று கூறும் கூட்டம் ஒரு பக்கம், 'தமிழ் நாஜி' என்று கூறும் கூட்டம் இன்னொரு பக்கம். இந்த இரு தரப்பினரையும் இனி கொஞ்சம் அடித்துவிளையாடவேண்டியிருக்கிறது. இரு தரப்பிலும் உள்ள அயோக்கிய சிகாமணிகளின் தரங்குறைந்த விவாதக் கலாச்சாரத்தில் நான் இறங்கமாட்டேன், ஆனால் எல்லாப் பிரச்சினைகளையும் பற்றிய பொதுவான விவாதக் களத்திலேயே இறங்கிச் செயல்படவுள்ளேன்.

குறிப்பாக, இந்துத்துவ பாசிசம் உயர்ந்துவரும் இந் நேரத்தில் அரசியல் ரீதியில் தமிழ்த்தேசியம் செல்ல வேண்டிய பாதையை நாம் வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். 

தமிழ்த்தேசியத்தை நிராகரிக்கும் திராவிடவாதிகளுக்கு இங்கே எதிர்காலம் இல்லை. திராவிட இயக்கத்தை அங்கீகரிக்காத அதிலிருந்து பாடம் கற்காத தமிழ்த்தேசியவாதிகளுக்கும் இங்கே எதிர்காலம் இல்லை. இந்த இரு தரப்பினரையும் அம்பலப்படுத்தி தூக்கியெறியாவிட்டால் எங்களுக்கும் எதிர்காலமில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக என் நிலைப்பாடு இதுதான்: தமிழ்நாட்டில் தமிழின விடுதலை அரசியல், திராவிட இயக்க அரசியல், தலித் இயக்க அரசியல், இடதுசாரி அரசியல் ஆகிய நான்கின் வரலாற்றுப் பாதைகளை புரிந்துகொண்டு,  21 ஆம் நூற்றாண்டுக்கான புதிய தமிழ்த்தேசியத்தை நாம் முன்னெடுக்கவேண்டும். அது முற்போக்கானதாகவும் சமூக நீதி அடிப்படையிலானதாகவும் உழைக்கும் வர்க்கங்களின் நலன்களைப் பற்றியும் அமையவேண்டும்.

இந்த வரலாற்று யதார்த்தங்களை நிராகரிப்பவர்கள் ஒன்று முட்டாளாக இருப்பார்கள், அல்லது கடைந்தெடுத்த அயோக்கியர்களாக இருப்பார்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=10157198019174046&id=612219045

No comments:

Post a Comment