Sunday, March 25, 2018

கம்பன் படம் பிடிக்கும் ஒழுக்கம்

கம்பன் படம் பிடிக்கும் ஒழுக்கம்

அனுமனை இராவணனிடம் அகப்பட்ட சீதையிடம் தூது அனுப்புகிறான் இராமன்.

"தன் மனைவி சீதை எப்படி எப்படியெல்லாம் இருப்பாள்? அவளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி?" - என்பது பற்றி இராமன், தூது செல்லும் குரங்காகிய அனுமனிடம் கம்பன் கூறும் காட்சி இதோ:

வாராழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள் தன்
தாராழிக்கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும் பாந்தமும் பணி வென்றோங்கும்
ஓராழித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?

இராமபிரான் சொல்கிறார் அனுமனிடம்:
"தக்கவனே, என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் (மார்பகங்கள்) நிறைந்த குடம் போன்றன! அவளுடைய அல்குலோ (பிறப்புறுப்பு), சீரான வட்ட வடிவமான கடலுக்கு உவமை" என்று.

உலகிலே உள்ள, எந்தப் பித்தனும் வெறியனுங்கூடத் தன் மனைவியின் கொங்கையையும் மறைவிடத்தையும், வேறொருவனிடம் வர்ணிக்கமாட்டான்.

அங்ஙனம் வர்ணிக்கும் கதாநாயகனை எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக் கவியும் சித்திரிக்கவில்லை. ஹோமர் முதற் கொண்டு பெர்னாட்ஷா வரையிலே எடுத்துப் பாருங்கள்! மதனகாமராஜன் கதை முதற்கொண்டு மன்மத விஜயம் என்பன போன்ற காமக்கூத்து ஏடுகளையும்கூடப் பாருங்கள்.

சீதையின் உள்உறுப்புகளைக் கண்டுபிடிக்கும் வேலையை பிரம்மச்சாரியாகிய அனுமனிடம் ஒப்படைக் கிறான் கணவனாகிய இராமன்!

என்னதான் கற்பனைவளம், இலக்கிய ரசனை என்றாலும் இப்படியா?

கம்பரசத்திலிருந்து..
#அண்ணா

No comments:

Post a Comment