Saturday, March 3, 2018

சாதிச்சான்றிதழ் வேண்டாமா?

Vijay Bhaskarvijay
Via facebook
2018-03-03

/நான் ஒரு தலித்.

பெண்.

திருமணம் ஆகவில்லை.

வருங்காலத்தில் என் பிள்ளைகளை ஜாதியற்றவர் என்று அறிவித்து ஜெனரல் கேட்டகிரியில் பள்ளியில் சேர்க்கலாம் என்றிருக்கிறேன்.
அப்படி ஒரு வாய்ப்பு பள்ளிகளில் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. /

இப்படி ஒருவர் Sarahah வில் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.

தயவு செய்து இது மாதிரியான சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளை செய்து விடாதீர்கள்.
பிற்படுத்தபட்டோர் மற்றும் தலித் சமூகத்தினர் யாரும் இங்கே முன்னேறவில்லை.

பெரிய பெரிய பதவிகளில் இங்கே யாரும் இல்லை.
அதில் அனைத்திலும் சம உரிமை கிடைக்கும் வரை ”ஜாதி சான்றிதழ்” இங்கே தேவை.
பலர் இங்கே சாதி சான்றிதழை இல்லாதவன் முன்னேற என்று நினைத்து வருகிறார்கள். அப்படி அல்ல. அது சம உரிமைக்கானது.
ஒரு கரும்பு இருக்கிறது அதை ஒரு சாதி மட்டும் கடித்து தின்று கொண்டிருக்கிறது. இல்லை இது அனைவருக்குமானது என்று பகிர்ந்து கொடுப்பதுதான் இடப்பங்கீடு.

தமிழ்நாட்டின் Chief Secretary என்றொரு பதவி இருக்கிறது. அது ஒரு கரும்பு. அதை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் பல ஆண்டுகளாய் சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கரும்பை அனைத்து சாதியினரும் சுவைக்க வேண்டும்தானே. அங்கேதான் ஜாதி சான்றிதழ் தேவை. அது தலித்களின் உரிமை.

இடப்பங்கீட்டை குற்ற உணர்வோடு அனுபவிக்கச் சொல்வது இந்த பார்ப்பனிய சமூகத்தின் தந்திரம். அதில் விழுந்து விடாதீர்கள். எக்காலத்திலும் ஜாதி சான்றிதழ் எடுக்காமல் மட்டும் இருந்து விடவே செய்யாதீர்கள். சாதி ஒழிப்பை பண்பாட்டில் காட்டுங்கள். பார்ப்பனிய பழக்க வழக்கத்தை ஒழியுங்கள். ஜாதி பார்க்காலம் திருமணம் செய்யுங்கள். ஜாதி பார்க்காமல் உதவி செய்யுங்கள்.
பண்பாட்டு அளவில் சாதியை ஒழிக்காமல் புற அளவிலான சாதி சான்றிதழ் போன்றவற்றில் விட்டுக் கொடுக்காதீர்கள்.

பார்ப்பனர்களின் தந்திரமே அதுதான். சாதி சான்றிதழ் பற்றிய ஒரு குற்ற உணர்வை படித்து முன்னேறிய தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரிடம் வளர்ப்பது. அதன் மூலம் இடப்பங்கீடு சிஸ்டத்தை ஒழிப்பது.
அப்படியானால் பார்ப்பானும் தலித்தும் ஒன்றாகிவிடுவார்களா ?

இல்லை பார்ப்பனர்களுக்கு இந்து மதம் இருக்கிறது.

பார்ப்பன மதத்தின் பழக்க வழக்கங்களை ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களிடம் புகுத்துவது மூலம் பண்பாட்டு அளவில் அவர்கள் மேலேயே இருக்க வேண்டும்.

அதிகாரத்திலும் மேலே இருக்க வேண்டும். இதுதான் அதிகார வர்க்கத்தின் திட்டம்.

எக்காலத்திலும் சாதி சான்றிதழ் எடுக்காமல் மட்டும் இருக்காதீர்கள்.

குறிப்பாக தலித் சமூகத்தினர் கட்டாயம் எடுத்து விடுங்கள்.

தலித்தியம் சமூகநீதி போன்றவற்றை இந்திய அளவில் புரிந்து கொள்ள என் யோசனை இதுதான்.

1.முதலில் திராவிட சிந்தனையை புரிந்து கொள்ளுங்கள். பெரியார் திடலுக்கு ஒரு விசிட் அடியுங்கள். அங்கே ஒரு நூலகம் இருக்கிறது. அதனுள் நுழைந்து ஒரு மணி நேரம் வாரம் ஒருமுறை எதாவது ஒரு புத்தகத்தைப் படியுங்கள். பெரியாரைப் படியுங்கள்.
இதன் மூலம் பார்ப்பனியத்தின் தீமையை அதிகாரத்தை புரிந்து கொள்வீர்கள். மூன்று மாதம்
படிக்க ஒரளவுக்கு பார்ப்பனியத்தின் தீமையை புரிந்திருப்பீர்கள்.

2.அதன் பிறகு அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள். அம்பேத்கரும் பார்ப்பனியத்தை சாடியிருப்பார். இன்னும் நுணுக்கமாக எடுத்துக் காட்டி இருப்பார். எதற்காக தாழ்த்தபட்டவர்களுக்கு இடப்பங்கீடு என்று மிக மிக விவரமாக சொல்லி இருப்பார். அதை முழுக்க படியுங்கள். கோட்டுர்புரம் லைப்ரரி சென்றால் தமிழ்மொழி பிரிவில் அம்பேத்கர் புத்தகங்கள் அனைத்தும் படிக்கலாம். அவர் எழுதிய நீலப் புத்தகம் மட்டுமே படியுங்கள்.

3. இந்த இரண்டையும் படித்த பிறகு ஒரு அறிவையும் தெளிவையும் அடைந்த பிறகு ”குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” போன்றவற்றின் எளிய வடிவ கம்யூனிச புத்தகங்களைப் படியுங்கள். சமூகத்தையும் அதோடு கலந்திருக்கும் பொருளாதாரத்தையும் மானுடவியல்பூர்வமாக அலசும் கம்யூனிசப் புத்தகங்களை படியுங்கள். இந்த வர்க்க ஏற்றத்தாழ்வு பார்வை அவசியம் தேவை. உலக முதலாளித்துவ சதி தத்துவத்தை புரிந்து கொள்வது அவசியம்.

4. காந்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். மதச்சார்பின்மை பார்வை, சிறுபான்மையினர் மதத்தினர் நலம் போன்றவற்றில் காந்தியின் பார்வையை துல்லியமாக புரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் சாதி ஏற்றத்தாழ்வு விசயத்தில் காந்தியை நிராகரித்து அம்பேத்கர் பெரியாரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

5. பெரியார் சொல்லிட்டேன், அம்பேத்கர் சொல்லிட்டேன், கம்யூனிஸப் புத்தகங்கள் சொல்லிட்டேன், காந்தி சொல்லிட்டேன் அடுத்து சுற்றுச் சூழலுக்காக போராடுபவர்கள், விவசாயத்திற்காக நடக்கும் போராட்டம் போன்றவற்றின் அவர்கள் சொல்லும் விஷயங்களையும் படியுங்கள்.

6. தொடர்ந்து அறிவியலை கற்றுக் கொண்டே இருங்கள். புள்ளி விபரங்களை அவ்வபோது படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஆறு பாயிண்டுகளையும் ஒருவருடம் எடுத்து முடித்து விட்டால் ஒரளவுக்கு உங்களுக்கு சமூகநீதி பார்வை வந்திருக்கும். நீங்கள் யார் பக்கமும் சாய மாட்டீர்கள். இது கமலின் மையம் அல்ல. புரிந்து கொள்வதினால் வரும் மய்யம்.

இந்த நிலையை அடையும் போது நீங்கள் கெத்தாக உணர்வீர்கள். அது அறிவு கொடுத்த கெத்தாக இருக்கும்.

இதற்கடுத்து இரண்டு முக்கிய கட்டங்கள் இருக்கின்றன.

ஒன்று பெளத்தத்தை புரிந்து கொள்வது. அம்பேத்கர் சொன்ன பெளத்தத்தை புரிந்து கொள்வது. பண்பாட்டு ரீதியில் அது எவ்வளவு முக்கியம் என்று புரிந்து கொள்வது.

இரண்டு மக்கள் போராட்டத்தை புரிந்து கொள்வது. ஒவ்வொரு சிறு அநீதிக்கும் போராட்டத்தில் இறங்கும் கம்யூனிஸ்ட்கள் போன்றோரின் அந்த தைரியத்தையும் வீரியத்தையும் கவனிப்பது. அதை ஆராய்வது.

இவ்வளவையும் நீங்கள் அறியும் பட்சத்தில்தான் சமூகநீதி பார்வையோடு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஆகையால் முழுமையாக் சமூக நீதியை புரிந்து கொள்ளாமல் சாதி சான்றிதழ் வேண்டாம் என்றெல்லாம் தயவு செய்து முடிவு எடுக்காதீர்கள்.

இது 1+1 = 2 என்ற கணக்கு அல்ல. இது Triple Integeration செய்யும் சிக்கலான கணக்கு.

-

https://m.facebook.com/story.php?story_fbid=10213410333725878&id=1625704159

No comments:

Post a Comment