Wednesday, March 21, 2018

நபிகளார் முன்வைத்த "ஏகத்துவம்"

Lafees Shaheed
Via Facebook
2016-Jul-19

நபிகளார் முன்வைத்த "ஏகத்துவம்" என்பது வெறுமனே ஓர் மத நம்பிக்கை மட்டுமே அல்ல. கற்புலனாகாத நம்பிக்கையை வலியுறுத்தல் செய்யும் தத்துவ விசாரம் கொண்டவர்களுக்கான கருத்தியல் அல்ல, இஸ்லாத்தின் ஏகத்துவம்.

அப்படி இருந்திருந்தால் நபிகளாருக்கு முந்தியே குறைஷியர்களுக்கு மத்தியில் ஏகத்துவத்தை முன் வைத்து, தூய்மையான சடங்காசாரங்களால் தம்மை சமூகத்தை விட்டு விலகிய நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த ஹனீப்கள் எனப்படும் ஓரிறை நம்பிக்கையாளர்களை குறைஷிய அதிகார வர்க்கம் தமக்கு சவால் என்று கண்டு அவர்களை களையெடுத்திருக்கும்.

ஆனாலும் இப்ராஹீமிய ஓரிறை வணக்க மரபின் நீட்சியான ஹனீப்களை பல்தெய்வ வணக்க மக்கா குறைஷியர்கள் சகித்துக் கொண்டே வாழ்ந்தனர்.

ஆனால் இறைத்தூதர் முஹ‌ம்ம‌த் (ஸல்) அவர்கள் கொண்டு தூதுத்துவம் அப்படியான "மதம்" சார்ந்த விடயங்களை மட்டுமே விவாதிக்க கூடியதல்ல. மாறாக:

*அதுவொரு "விடுதலை இறையியல்"*

*ஒர் தீவிரமான கட்டமைப்பு மாற்றத்தையே அன்றைய குறைஷிய சமூகத்தின் சட்டகத்தில் அது வேண்டி நின்றது.*

*அராபிய சமூகங்களின் விளிம்பு நிலை மாந்தர்களான பெண்களையும், அடிமைகளையும் கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியாக அது அரவணைத்தது.*

*அரசியல் அராஜகத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.*

*பொருளாதார பிரச்சினைகளில் தலையிட்டது*

இதுதான் நபிகளாரின் "ஏகத்துவம்" பொதிந்திருந்த, அதிகார வர்க்கம் தமக்கு எதிரான விழுமியங்கள் என்று கருதிய அம்சங்கள்.

இன்றைய உலகிலும் இஸ்லாத்தை ஓர் விடுதலை இறையியல் சார்ந்த மார்க்கமாக, அரசியல் போராட்டங்களின் மூல தத்துவமாக, பொருளியல் திட்டமாக முன்வைப்பவர்களையே நிலவும் சமூக அமைப்பின் அதிகார வர்க்கங்கள் தமக்கு சவாலாக கருதுகின்றன.

ஷெய்க் ஹஸன் அல் பன்னாவின், மெளலானா மெளதூதியின், ஸெய்யித் குத்பின் வாழ்வையும் பணியையும் மரணத்தையும் கூர்ந்து கவனித்து பாருங்கள்.

அதிகாரம் எதற்கு அஞ்சுகிறது என்று புரிந்து கொள்வீர்கள்.

No comments:

Post a Comment