முரளிதரன் காசி விஸ்வநாதன்
Via facebook
2018-02-23
மடாதிபதியின் மர்ம மரணம்; புதிய மடாதிபதியின் மகத்தான லீலைகள் - பகுதி 11
-----------------------------------------------------------------------------------
அறநிலையத் துறையும் அரசியல்வாதிகளும் இணைந்து கோவில்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று தொடர்ந்து ஒரு அவதூறு பரப்பப்பட்டுவருகிறது. மடாதிபதிகளிடமும் முக்கியப் பிரமுகர்களிடமும் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தால் இதுபோல செய்யமாட்டார்கள்; பக்திமயமாக, பூஜைமட்டுமே நடக்கும் என்று சொல்கிறார்கள். இந்த வாதத்தைக் கேட்டால், "மடம்னா கொலை நடக்காதா?" என்ற தசாவதார படத்தின் வசனம் சிலருக்கு நியாபகம் வரலாம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சி.எம். ராமச்சந்திர செட்டியார் என்பவர் சென்னை மாகாண அறநிலையத் துறையின் ஆணையராக இருந்தார். அப்போது மாகாணம் முழுவதும் பயணம் செய்து, கோவில்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தினார் இவர். கோவில்களையும் மடங்களையும் நிர்வகித்துவந்த தர்மகர்த்தாக்களும் அர்ச்சகர்களும் எப்படியெல்லாம் கோவில்களை கொள்ளையடித்தார்கள் என்பதை அவர் கண்டுபிடித்தார். இவற்றில் சில சுவாரஸ்யமான திருட்டு மற்றும் கொலைகளை, சிறுகதைகளின் வடிவில் ஒரு புத்தகமாக எழுதினார். அந்தப் புத்தகத்தின் பெயர் கோவில் பூனைகள். மிகவும் பழைய அந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் கோவில்களும் மடங்களும் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா? இதோ முதல் கதை.
சிதம்பரத்தில் நடந்த கதை இது. அந்த ஊரில் உள்ள பெரிய கோவிலை ஒட்டியுள்ள மடம் அது. இப்போதைக்கு அதன் பெயரை திருஞானப் பிரகாச மூர்த்தி மடம் என்று வைத்துக்கொள்வோம். 25வது பட்டம் பெற்ற மடாதிபதியின் காலத்தில் இந்தக் கதை நடந்தது. அவர் வயது முதிர்ந்த கிழவர். உடல்நலமும் மோசமாக இருந்தது. அவர் எப்போதடா சாவார் என்று சிஷ்யகோடிகள் காத்திருந்தார்கள். சிலர் ஜோதிடம்கூட போய் பார்த்துவந்தார்கள். சிலர் மட்டும் அன்போடு அவரிடம் நடந்துகொண்டார்கள். இவர்கள், மடாதிபதியிடம் அன்போடு இருந்ததற்குக் காரணமே, அவர் சிவலோக பிராப்தி அடைவதற்கு முன்பாக, தன் காவி உடையையும் முத்திரையையும் தங்களிடம் தந்து தன்னை அடுத்த மடாதிபதியாக அறிவித்தால் மடத்துச் சொத்தை அனுபவிக்கலாமே என்ற நல்ல எண்ணம்தான்.
இந்த நிலையில், பெரும் வசீகரம் கொண்ட இளைஞர் ஒருவர் திடீரென மடத்திற்கு வந்து சேர்ந்தார். மூத்தவருக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. இளைஞரும் மடத்திலேயே தங்கிவிட்டார். இதற்குப் பிறகு, திடீரென மூத்தவரின் உடல்நலம் சற்றுத் தேறியது. இதை சிஷ்யகோடிகள் விரும்பவில்லை. இயல்புதானே.
ஒரு நாள் மடத்திற்கு ஜோதிடர் ஒருவர் வந்தார். அவர் புதிதாக வந்த இளைஞருக்குத் தெரிந்தவர் போல இருந்தது. இருவரும் தனிமையில் சிறிது நேரம் பேசினர். பிறகு, மற்ற சிஷ்யர்களையும் அழைத்த ஜோதிடர், சாமியார் வெகுகாலம் உயிரோடு இருக்க மாட்டார் என்று கூறினார்.
இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, புதியவருடன் மூத்தவர் தனித்திருந்தார். அப்போது திடீரென அவரது அறையிலிருந்து 'அரகர சம்போ மகாதேவா' என்ற சத்தம் கேட்டது. உடனே சிஷ்யகோடிகள் மூத்தவரின் அறைக்கு ஓடினர். அங்கே மூத்தவர், தன் பீடத்திலேயே தூங்குபவரைப் போல இருந்தார். கண்கள் மேலே செருகியிருந்தனர். அவர் முன்பாக, புதியவர் வணங்கியபடி அமர்ந்திருந்தார். அவர் மீது காவி மேலாடையும் தாழ்வடமும் சின்முத்திரையும் இருந்தன.
புதியவருக்கு பட்டம்கட்டிவிட்டு, மூத்தவர் சிவபதவியடைந்தார் என பலரும் கருதினார்கள். ஆனாலும் சிலருக்கு மூத்தவரின் மரணம் குறித்து சந்தேகம் இருந்தது. சிலர் அரசுக்கு மொட்டைக்கடுதாசியும் போட்டார்கள். ஒரு பலனும் இல்லை. ஆகவே, சத்தமில்லாமல் இளையவருக்கு ஆதரவாக காலம்கழிக்க முடிவுசெய்தார்கள்.
புதிதாக பட்டம் பெற்ற இளைய மடாதிபதி, ரொம்பவும் கூரிய மூளையை உடையவர். மடத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்தபோது, தான் எதிர்பார்த்த அளவுக்கு மடத்திற்கு வருவாய் இல்லை என்பது புரிந்தது. நிலமெல்லாம் நீண்டகாலக் குத்தகையில் இருந்தன. குத்தகைக்காரர்கள் பத்தாண்டு பாக்கி வைத்திருந்தார்கள். நெருக்கிக் கேட்கவும் அச்சமாக இருந்தது. வழக்குத் தொடுக்கவும் தயங்கினார். ஆனால், யாரையும் பகைத்துக்கொள்ளாமல், இரண்டு ஆண்டுகளில் தன் பதவியை நிலைப்படுத்திக்கொண்டார் புதியவர்.
அதன் பிறகு, வருமானத்திற்கு புதிய வழியைத் திட்டமிட்டார் புதியவர். சில சிறந்த பொற்கொல்லர்களை வேலைக்கு அமர்த்தி, மடத்தில் இருந்த தங்கம், வெள்ளி ஆகியவற்றை உருக்கி பல திருவாபரணங்களைச் செய்தார். அவற்றை சிதம்பரம் பெருமானுக்குச் சாத்துவதாக பெரிய, பெரிய விளம்பரங்களைச் செய்தார். இதையடுத்து பணக்காரர்கள் சிலர், தாமும் அந்தத் திருப்பணியில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்கள். சிலர் காணிக்கைகளும் தந்தார்கள். திருவிழா வெற்றிகரமாக முடிந்தது. செலவழித்த பணத்தைவிட அதிக பணம், காணிக்கைகளில் கிடைத்தது.
பிறகு இந்தப் பழக்கத்தைத் தொடர ஆரம்பித்தார் புதியவர். ஒரு பணக்காரச் செட்டியாருக்கு கடிதம் அனுப்புவார். சிதம்பரம் பெருமானுக்கு வைரம் பதித்த மோகனமாலை சாத்த வேண்டும். 10 ஆயிரம் ஆகும் என்பார். செட்டியாரம் பணத்தைத் தருவார். மடத்தின் பட்டறையிலேயே நகை செய்யப்பட்டு, குறிப்பிட்ட நாளில் பெருமானுக்கு செட்டியார் முன்னிலையில் சாத்தப்படும். அன்று திருமுழுக்கும் நடைபெறும். அதற்கும் செட்டியாரிடம் பணம் வாங்கப்படும்.
இந்த நகை இருக்கிறதே, அது செய்யப்படும்போது சுத்த தங்கத்தில் செட்டியார் முன்பு செய்யப்படும் என்பது உண்மைதான். ஆனால், கோவில் சாற்றப்படுவது அந்த நகைதானா என்பதை யார் சோதிப்பது? இப்படியாக, கோலாகலமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார் புதியவர்.
இப்படியிருக்கும்போது, ஒரு நாள் கரு. பெரு. அரு. சாமிச் செட்டியார் என்பவர் பெருமானுக்கு மாலை சாற்றுவதாக வேண்டிக்கொண்டு, மடத்திற்குச் சொல்லி அனுப்பினார். நகை செய்ய வழக்கம்போல பத்தாயிரம் ஆகும் என்று மடத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. செட்டியாரும் பணத்தைக் கொடுத்துவிட்டார்.
பிறகு, செட்டியாருக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால், தனக்காக செய்யப்பட்ட நகையை தான் பார்ப்பதற்காக, தன் வேலைக்காரனிடம் கொடுத்தனுப்பும்படி மடாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். மடாதிபதியும் அங்கிருந்த ஒரு பெரிய தங்க மாலையை எடுத்து, நன்றாக மெருகேற்றி வேலைக்காரனிடம் கொடுத்தனுப்பினார். செட்டியாருக்கு ஒரே மகிழ்ச்சி, பத்தாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு பெரிய மாலையா என்று குளிர்ந்துபோனார். உடனே தனக்குத் தெரிந்த ஆசாரி ஒருவரை அழைத்து அந்த மாலையில், தன் பெயரை மிகவும் சிறிய எழுத்தில் பொறித்துவிட்டார். பிறகு வேலைக்காரனிடம் நகையைக் கொடுத்து மடத்தில் கொடுக்கும்படி சொல்லிவிட்டார். நகையை திரும்பப் பெற்றுக்கொண்ட மடாதிபதி, செட்டியார் அதில் தன் பெயரைப் பொறித்ததைக் கவனிக்கவில்லை.
செட்டியாருக்கு உடல் நலமானவுடன், பெருமானுக்கு நகை சாற்றுவது தொடர்பாக ஊரெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த நகைசாற்றும் வைபவம் இருக்கிறதே, அது எப்போதும் இரவு 10 மணிக்கு மேல்தான் நடக்கும். அப்போதுதான் கூட்டம் வராது என்பது புதிய மடாதிபதியின் கணக்கு.
அதன்படியே நகை சாற்றப்பட்டது. ஆனால், சுவாமியின் திருமேனியில் நகையைப் பார்த்த செட்டியார் திடுக்கிட்டார். இந்த நகை தான் முதலில் பார்த்த நகையைப்போல இல்லையே என்று யோசித்தார். பிறகு அடுத்த நாள் கோவிலுக்கு வந்து, அர்ச்சருக்கு சிறிது பணத்தைக் கொடுத்து, அந்த நகையை தன்னிடம் காட்டச் சொன்னார். அர்ச்சகரும் எடுத்துக்காட்டினார். அதில் தன் பெயரைச் தேடினார் செட்டியார். பெயர் இல்லை. ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொண்டார் அவர்.
ஆனால், மனிதர் விடவில்லை. காவல்துறையிடம் புகார் அளித்தார். பெரிய திருட்டு என்பதால், காவல்துறை ஒரு சிறந்த துப்பறியும் நிபுணரை அனுப்பியது. அவரும் சிதம்பரம் வந்து, மடத்தின் மூலமாக நகை சாற்றப்பட்ட கோவில்களுக்கு எல்லாம் சென்று, அந்த நகைகளைச் சோதித்தார். எல்லாம் போலி.
புதிய மடாதிபதியை பிடித்து விசாரிக்க மடத்திற்கு வந்தார் அந்தக் காவல்துறை அதிகாரி. மடத்தின் எல்லாப்புறங்களிலும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். உள்ளே வந்த அதிகாரி, புதியவரை எங்கே எனக் கேட்டார். அவர் தன் அறையில் பூஜையில் இருப்பதாகவும் யாரும் செல்லக்கூடாது என்றும் சிஷ்யகோடிகள் தெரிவித்தனர். பூஜை நீண்ட நேரம் நீளவே, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தால் யாரும் இல்லை.
பிறகுதான் அந்த அறையில் இருந்த ரகசியக் கதவு மூலமாக ஆசாமி வெளியேறியிருப்பது தெரியவந்தது. பிறகு அவரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அன்றோடு இந்தத் திருவாபரணத் திருப்பணி முடிவுக்கு வந்தது.
(தொடரும்)
https://m.facebook.com/story.php?story_fbid=1193452967453095&id=100003652096964
No comments:
Post a Comment