என்ன செய்தார் ராமர்? எதற்காக ராமராஜ்யம்?
ராம ரத யாத்திரை இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை கொண்டு வர நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி என்ன சிறப்பான ஆட்சியை ராமர் செய்து விட்டார். ராம ராஜ்ஜியத்தில் கட்டப்பட்ட அணைகளின் எண்ணிக்கை எவ்வளவு? அவரது ஆட்சிக் காலத்தில் எத்தனை பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டன? என்பதை ரத யாத்திரை நடத்துபவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.
(1) குறைந்தபட்சம் அனைத்து சமூக மக்களுக்கும் சமநீதி வழங்கப்பட்டதா ராமருடைய ஆட்சியில்?
ராமாயணம், உத்தர காண்டத்தில் பிராமணரல்லாத சம்பூகன் கடவுளை வேண்டி தவம் இருந்ததற்காக இதே ராமரால் கொலை செய்யப்படும் நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது.
பிராமணரல்லாதோருக்கு கடவுளை வணங்கும் உரிமை கூட இல்லாத ராமருடைய ஆட்சி எவ்வாறு சிறந்ததாக இருந்திருக்க முடியும்.
மாறாக இராவணனுடைய ஆட்சியோ, விபீஷணனுக்கு அரசன் தவறிழைக்கும் போது இடித்துரைத்து எதிரியோடு கூட சென்று சேரும் உரிமையை வழங்கி இருந்தது.
(2) பெண்களுக்கான உரிமையும் பாதுகாப்பும் இராமராஜ்ஜியத்தில் எவ்வாறு இருந்தது?
தன் மனைவி மீது சந்தேகம் வந்தால் மனைவி தீக்குளிக்க வேண்டும் என்ற நிலையில் தான் இராமராஜ்ஜியத்தில் பெண்களின் நிலை இருந்தது. அந்த பெண்ணுக்கு இதில் உடன்பாடு இல்லையென்றாலும் கூட தன் தரப்பு விவாதத்தை எடுத்துரைக்கும் உரிமைகூட பெண்களுக்கு வழங்கப்பட வில்லை.
ஆனால் இராவணனின் ஆட்சியிலோ, ஒரு பெண்ணுக்கு ஒரு ஆடவனின் மீது காதல் வந்தால், அதை தைரியமாக சென்று அந்த ஆணிடம் தெரிவிக்கும் அளவு சுதந்திரமும் (சூர்ப்பனகை), கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கும் உரிமையும் (மண்டோதரி) வழங்கப் பட்டு இருந்தது.
(3) விஞ்ஞான வளர்ச்சி இராமரின் ஆட்சியில் எவ்வாறு இருந்தது?
சீதையை கொண்டு போக முடிவு செய்த இராவணன் பறக்கும் விமானத்தில் வந்து பறந்து தூக்கி சென்றான். மீட்க சென்ற இராமரோ குரங்குகளின் உதவியோடு கல்லாலான பாலத்தை கட்டி கொட்டிருந்தார். இதுதான் இராமரின் ஆட்சியில் அதிகபட்ச விஞ்ஞான வளர்ச்சி.
ஆக எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கிய இராவணனின் ஆட்சிதான் தற்போதைய தேவையே தவிர, ஒன்றுக்கும் உதவாத ராமனின் ஆட்சி அல்ல.
- மனோமகன்
No comments:
Post a Comment