முரளிதரன் காசி விஸ்வநாதன்
Via facebook
2018-02-26
ஜெயலலிதா காலத்தில் அழிக்கப்பட்ட மகத்தான கோவில் சுவரோவியங்கள் - பகுதி 12
---------------------------------------------------------------------------------------------
1995ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிகப் பெரிய அளவில் குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக் குடமுழுக்கு விழா பணிகளின் போது கோவில் மிகப் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டது. எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து கறுப்பு வெள்ளையாகக் காட்சியளித்த அந்தக் கோவில், 1995க்குப் பிறகுதான் வண்ணமயமாக ஒளிர ஆரம்பித்தது. இதற்கான பணிகள் 1992ல் துவங்கி, 1995ல் முடிவுக்கு வந்தன.
ஜெயலலிதா ஆட்சியின் போது நடந்த இந்த புதுப்பிக்கும் பணிகளின்போது மிகப் பெரிய தவறு ஒன்று நடைபெற்றது. கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தைச் சுற்றியுள்ள வடக்கு பிரகாரச் சுவற்றிலும் கிழக்கு பிரகாரச் சுவற்றிலும் திருவிளையாடல் புராணக் கதைகலைச் சித்தரிக்கும் ஓவியங்கள் நாயக்கர் காலத்துப் பாணியில் வரையப்பட்டிருந்தன. இந்த ஓவியங்களில் திருவிளையாடல் புராணம் காமிக்ஸ் வடிவில் தொடர் சித்திரங்களாக இடம்பெற்றிருக்கும். மிக மிக அழகாகவும் நுணுக்கமாகவும் வரையப்பட்ட இந்த ஓவியங்கள், நூற்றாண்டுகள் கழித்தும் வண்ணம் மங்காமல் மகிழ்ச்சியளித்துக்கொண்டிருந்தன.
கோவிலுக்கான திருப்பணிகளின்போது, இந்த ஓவியங்களின் மீது எவ்வித வரலாற்று உணர்வும் கலை உணர்வுமின்றி சுண்ணாம்பு அடிக்கப்பட்டுவிட்டது. இந்த ஓவியங்களின் காலம்கூட யாருக்கும் சரியாகத் தெரியாது. மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலிலும் அழகர் கோவிலிலும் இதே பாணியிலான 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்கள் இருப்பதால், இந்த ஓவியங்களும் அதே காலகட்டத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இப்படி சுண்ணாம்பு அடித்து அழிக்கப்பட்ட ஓவியங்கள் போக, தற்போது ஒரே ஒரு ஓவியம் மட்டும் மேற்கு பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எதில் உள்ள மண்டபத்தின் விதானத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை ராணி மங்கம்மாள் கண்டு களிக்கிறார். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், ஈசானன், வாயு, குபேரன் போன்ற எண்திசைக் காவலர்களும் மீனாட்சி அம்மனுடன் போரிட்டு தோற்ற காட்சியும் பெருமாள், மீனாட்சியை சுந்தரேஸ்வரருக்கு தாரைவார்த்துக்கொடுக்கும் காட்சியும் மங்கம்மாளுக்கு செங்கோல் வழங்கும் காட்சியும் மிக அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. இதே ஓவியத்தில் படைத் தளபதி ராமப்பையர், விஜயரங்க சொக்கநாதர், ஆகியோர் அம்மனை வணங்கி நிற்கிறார்கள். கீழே அவர்களுடைய பெயர்கள் தமிழிலும் தெலுங்கிலும் எழுதப்பட்டிருக்கின்றன. எனவே இந்த ஓவியங்கள், ராணி மங்கம்மாள் காலத்தில் (1689-1706) வரையப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
1996ல் கருணாநிதி தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த தமிழ்க் குடிமகன் முயற்சியில், இந்த ஓவியங்களை மீண்டும் வரையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிரண்டு ஓவியங்கள் வரையப்பட்ட நிலையில், அந்த முயற்சி வெற்றிகரமாக தொடரப்படவில்லை.
பல கோவில்களில் இதுபோல, சிற்பங்கள் சிதைக்கப்பட்டன. ஓவியங்கள் பாதுகாப்பில்லாமல் அழிந்தே போயின. ஆனால், இப்போது இந்து அறநிலையத் துறை இம்மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. கோவில் புனரமைப்பு மற்றும் திருப்பணி தொடர்பாக ஆலோசனை வழங்க மத்திய, மாநில தொல்லியல் துறைகளிலிருந்து 22 வல்லுனர்கள் தேர்வுசெய்யப்பட்டு, குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கையின் படியே இப்போது திருப்பணிகள் நடக்கின்றன.
இதேபோல பழமையான சுவரோவியங்கள் உள்ள 50 கோவில்களில் அந்த ஓவியங்களைப் பாதுகாக்கவும் புதுப்பிக்கவும் குழு ஒன்று செயல்பட்டுவருகிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் ராஜகோபுர சுவரோவியங்கள், திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி கோவில் ராஜகோபுர சுவரோவியங்கள், காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவில் வெளிப்பிரகார சுவரோவியங்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், 2015ல் நடந்த திருப்பணியின்போது, நாயக்கர் கால சுவரோவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுவருகிறது.
இந்த அதிர்ஷ்டம் மீனாட்சி அம்மன் கோவில் ஓவியங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது பெரும் சோகம், இழப்பு.
(தொடரும்)
படம்: படத்தில் இருப்பது மீனாட்சியம்மன் கோவிலில் எஞ்சியிருக்கும் நாயக்கர் கால ஓவியம்.
https://m.facebook.com/story.php?story_fbid=1195624927235899&id=100003652096964
No comments:
Post a Comment