சம்புகன் கதை என்ன ?
சம்புகனின் கதையை முழுமையாக அறியமுடியவில்லை . அதைச் சொல்லவமுடியுமா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார் . அந்தத் தேடலின் பதிவாக இதோ சம்புகனின் கதை ஸ்ரீ வால்மீகி அருளிய இராமாயணத்தில் உள்ளபடி .
இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார்.
அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன்.
வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் .
"ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் .
ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் .
எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர்.
மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில் தர்மம் அழிகிறதா அப்படி என்ன நடந்தது என்று தேவலோக ஞானிகளையும் அழைத்து கேட்கிறார்.
அந்த ஆலோசனை சபைக்கு வந்திருந்த திரிலோக சஞ்சாரியான நாரதர் கூறினார்.
" ராமா உன் ஆட்சியில் நீ தர்மத்தை நல்லபடி காத்து வருகிறாயு .அப்படி இருந்தும் இந்த பிராமணப் பிள்ளையின் அகால மரணம் ஏற்பட்டுள்ளது என்றால் சனாதன தர்மத்தை மீறி ஏதோ செயல் நடந்திருக்கலாம் ".
மேலும் இராமன் விளக்கம் கேட்க நாரதர் கூறினார் .
" சூத்திரர்கள் யாரேனும் வேதம் தவம் இவற்றில் ஈடுபட்டிருக்கலாம் . சூத்திரர்கள் கற்பதும் தவம் செய்வதும் கலியுகத்தில்தான் நடக்கும் .. இந்த யுகத்தில் நடக்காது . அவ்வாறு நடந்தால் அது தர்மத்திற்கு எதிரானது .அதைத் தேடி தடுத்து நிறுத்தினால் இந்த பிராமணப் பிள்ளை பிழைக்கும் "என்றார் நாரதர்.
உடனே தன் வில் அம்பு வாள் சகிதம் புறப்பட்ட இராமன் தான் திரும்பி வரும்வரை அந்த சிறுவனின் சடலம் கெட்டு விடாமல் மருந்துத் தைலங்களை பெரிய பாத்திரத்தில் நிறைத்து அதில் அந்த உடலைப் பாதுகாத்து வரும்படி ஆணையிட்டான் .
கோபத்துடன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி பல திசைகளையும் பார்த்துக் கொண்டு வந்த இராமன் சரயு நதிக் கரையில் வியக்கத்தக்க தேஜஸுடன் ஒருவர் தலைகீழாக நின்று உக்ர தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு விமானத்தை இறக்கி அவர்.அருகில் சென்று
" தவசிரேஷ்டரே நீர் யார்? எதற்காக இந்த தவம் செய்கிறீர்கள் ?" என்று கேட்க
தவநிலையில் இருந்தபடியே அந்த தவசி சொல்கிறார் .
"என் பெயர் சம்புகன் . நான் சொர்க்கத்திற்கு செல்வதற்காக இந்த உக்கிர தவம் புரிகிறேன் ." நீங்கள் யார் ?
என்று கேட்கிறார் சம்புகன் .
நான் ஸ்ரீ ராமச்சந்திரன் . இத்தவம் செய்யும் செய்யும் நீர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர் ? பிரா மணரா அல்லது ஷத்திரியரா ? வைசியரா இல்லை சூத்திரரா சொல்லுங்கள் என்று கேட்க ,
சம்புகன் கூறினார் ஸ்ரீ ராமச்சந்திர பிரபு நான் உம்மைக் கண்டது என் பேறு .
நான் " சூத்திர யோனியில் பிறந்தவன் "
என்றார் சம்புகன்.
அதைக்கேட்டவுடன் ஒரு நொடியும் தாமதிக்காது ராமன்
" அப்படியானால் நான் என் கடமையைச் செய்ய வேண்டும் ""
என்று கூறியபடி தன் பளபளக்கும் வாளை உருவி சம்புகனின் தலையை சீவினான் .
சம்புகனின் தலை வேறு உடல் வேறாக விழுந்த உடன் வானுலகில் இருநது தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பெய்தனர் .
அதே நேரத்தில் தைலக் கொப்பறையில் வைக்கப்பட்டிருந்த பிராமண சிறுவனின் சடலம் உயிர் பெற்று அச்சிறுவன் எழுந்தோடி வந்தான் .
அவனைக் கண்ட அந்த பிராமணர் மகிழ்ந்து இராமனை வாழ்த்தினார் .
இவ்வாறாக ஸ்ரீ இராமர் தனது ஆட்சியில் தர்மத்தை நிலை நாட்டினார்.
இதுவே சம்புகன் கதை .!!
#தோழர்_அருள்மொழி ❤️❤️
No comments:
Post a Comment