காதிலே பூ சுற்றுகிறார் மோடி.
பார்ட்டிசிபேட்டரி நோட்(Participatory Note) என்றொரு நோட்டு இருக்கிறது. அது ரூபாய் நோட்டு அல்ல.
அந்த நோட்டில் தாவூத் இப்ராஹீம், ஹஃபீஸ் சையது அல்லது பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ போன்ற யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதிலே யார் முதலீடு செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கக்கூடாது என்பது தான் அதிலிருக்கக்கூடிய முக்கியமான முதல் விதி. அதை பாகிஸ்தானிலிருந்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நியூயார்க்கிலோ, வாஷிங்டனிலோ, இலண்டனிலோ அல்லது பாரீசிலோ அந்தப் பணத்தை முதலீடு செய்யலாம். வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors) வாயிலாக இந்தியாவில் இருக்கக்கூடிய BHEL அல்லது BSNL போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலோ அல்லது அம்பானி, அதானி நிறுவனங்களிலோ மூலதனம் போட முடியும்.
யார் அந்தப் பங்குகளை வாங்குகிறார்கள் என்று கேட்பதற்கான அதிகாரம் மோடி அரசுக்குக் கிடையாது. இப்படி அனாமதேயமாக மொட்டைக்கடுதாசியைப் போல யார் போடுகிறார்கள் என்றே தெரியாமல், அவன் கஞ்சா விற்பவனாக இருந்தாலும், விபச்சாரம் செய்பவனாக இருந்தாலும், ஆயுதக் கடத்தல் பேர்வழியாக இருந்தாலும் பாகிஸ்தான், அமெரிக்க உளவாளியாக இருந்தாலும், யார் வேண்டுமானாலும் இந்தியப் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய முடியும், அதை அரசாங்கம் சோதிக்க முடியாது என்ற ஒரு ஏற்பாட்டைச் செய்தது யோக்கியர் என்று பெயர் பெற்ற வாஜ்பாயியின் ஆட்சி. அவர் காலத்தில் தான் இந்த பார்ட்டிசிபேட்டரி நோட் என்ற மொட்டைக்கடுதாசி முதலீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்றைக்கும் இது அமலில் இருக்கிறது. “ தாவூத் BHEL-லிலோ, BSNL-லிலோ, கோல் இந்தியாவிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ முதலீடு செய்திருப்பார். அவற்றிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகையையோ (டிவிடெண்ட்) அல்லது விற்றுக் கிடைக்கக் கூடிய வெள்ளைப் பணத்தையோ தீவிரவாதிகளுக்க வினியோகிப்பது சுலபமா? இல்லை, பாகிஸ்தானில் ஒரு அச்சகம் வைத்து அங்கே ரூ.500 மற்றும் சிப் பொருத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளை அச்சடித்து, மூட்டையாகக் கட்டி, கழுதையின் முதுகில் ஏற்றி அதனை இமயமலையில் ஏற்றி அதற்குக் காவலாக இரண்டு தீவிரவாதிகளைப் போட்டு மலையின் மறுபக்கம் கொண்டுவந்து இந்திய பார்டர் செக்யூரிட்டி ஃபோர்சையும், கம்பிவேலிகளையும் தாண்டி, மூட்டைகளை இந்தப் பக்கம் தூக்கிப் போட்டு, இங்கேயுள்ள தீவிரவாதிகளிடம் பிரித்துக்கொடுத்து, அப்புறம் குண்டு வெடிக்கச்செயவது சுலபமா?
யாரிடம் கதை சொல்கிறார்கள் இவர்கள்? போதைமருந்து வியாபாரிகள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள், கருப்புப் பண முதலைகள் வரையில் எல்லா அயோக்கியர்களும் அடையாளம் தெரியாமல் முதலீடு செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பது உங்கள் அரசு. அப்படி வருகின்ற அந்நிய முதலீடு அதிகரிக்க அதிகரிக்க அதையே தன்னுடைய சாதனையாக மோடி சொல்லிக் கொள்கிறார். அதாவது கருப்புப் பணம் உள்ளே வருவதைத் தான் வளர்ச்சி என்று சொல்லுகிறார். ஆனால் இங்கே கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகவும், அதைப் பூமிக்கடியில் டிரங்குப் பெட்டிகளில் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அதைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் நமக்குக் காதிலே பூ சுற்றுகிறார் மோடி.
வினவு. தோழர் மருதையன்.
No comments:
Post a Comment