வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !
மோடியின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு அல்ல ..
கட்டாய வரி விதிப்பு, கண்காணிப்பு என்பது மட்டுமல்ல மக்களுடைய சேமிப்பு, சம்பளம், சிறு வணிகர்களிடம் புழங்கும் பணம் ஆகிய அனைத்தையும் வங்கிக்குள் கொண்டுவருவதுதான் இவர்களது நோக்கம். பணப் பொருளாதாரத்திலிருந்து வங்கிப் பொருளாதாரத்துக்கு மாற்றுவதன் மூலம் மக்களுடைய பணம் வங்கிக்கு செல்கிறது. அப்புறம், வங்கிப் பணம் மல்லையாக்களின் பணமாகிவிடும்.
மல்லையாவை மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். 2013 க்கும் 15 க்கும் இடையில் மட்டும் 29 அரசு வங்கிகள் 1,20,000 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன. அதானி, அம்பானி போன்ற முதலாளிகள் கடனுக்கு வட்டி கூடக் கட்டுவதில்லை. தொடர்ந்து வட்டி கட்டவில்லை என்றால் அதை வாராக் கடன் என்று கருத வேண்டும். அதனை தவிர்ப்பதற்காக, மீண்டும் அதே முதலாளிக்கு மேலும் கடன் கொடுத்து, அந்த கடன் தொகையிலிருந்தே வட்டியை வரவு வைத்திருக்கின்றன அரசுடைமை வங்கிகள்.
இப்படி வாராக்கடனை வரப்போகிற கடன் போல பொய்க்கணக்கு காட்டுகிறார்கள் வங்கி அதிகாரிகள். நீங்கள் பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டுவிட்டால் அது இளவரசி ஆகிவிடுமா என்று அரசு வங்கிகளின் தலைவர்களைக் கேட்டார் ரகுராம் ராஜன் இப்படித்தான் 2015 ஆம் ஆண்டு இறுதியில் வாராக்கடன் 4 இலட்சம் கோடி என்று வங்கிகள் பொய்க்கணக்கு காட்டினார்கள் அதனைத் துருவி ஆராய்ந்தவுடன், மூன்றே மாதங்களில் வாராக்கடன் 6 இலட்சம் கோடி என்ற கணக்கு வெளியே வந்தது.
பி.என்.பி பாரிபாஸ் என்ற நிதித்துறை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் எகனாமிக் டைம்ஸ் இல் வெளிவந்திருக்கிறது. இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 75 இலட்சம் கோடி. அவற்றில் 12 இலட்சம் கோடி கோவிந்தா, வாராக்கடன் என்கிறது அந்த அறிக்கை.
இதில் இந்தியாதான் ஆசியாவிலேயே முதலிடம். வாராக்கடன் கொரியாவில் 5.8, சீனா 6.66%, தாய்லாந்து 2.4%, இந்தியா 16.1%. அனில் அம்பானிக்கு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் 1,21,000 கோடி. அதற்கு ஆண்டு வட்டி 8299 கோடி. ஆனால் அனில் அம்பானியுடைய நிறுவனங்களின் ஒரு ஆண்டுக்கான விற்றுமுதலே வெறும் 9848 கோடிதான். இப்படி ஒரு சிறு தொழிலதிபரோ வியாபாரியோ கடன் வாங்க முடியுமா? விவசாயிக்கு கடன் கிடைக்குமா? ஒரு பத்தாயிரம் ரூபாய் வங்கிக் கடன் வாங்க நாம் என்ன பாடு படவேண்டும்? வாராக்கடன் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடித்த முதலாளிகளின் பெயரைக்கூட வெளியிட முடியாது என்று சொல்லும் மோடிதான் கருப்பு பண முதலைகளை ஒழிக்கப்போகிறாராம்.
பணப்பரிவர்த்தனையை நிறுத்துங்கள், வங்கிப் பரிவர்த்தனைக்கு வாருங்கள் என்ற அழைப்பின் பொருள், உங்கள் பணத்தை அம்பானி, அதானியிடம் கொடுத்து வையுங்கள், பத்திரமாக இருக்கும் என்பதுதான். இதோ, கீழே கிடக்கிற பணம் உங்களுடையதா பாருங்க என்று சொல்லி உங்களைக் குனிய வைத்து பிக்பாக்கெட் அடிப்பார்கள் நகர திருடர்கள். இதோ, உங்களுக்கு சேரவேண்டிய கருப்பு பணத்தை மீட்டுக் கொடுக்கப் போகிறேன் என்று உங்களுக்கு ஆசை காட்டி உங்கள் பணத்தை பிடுங்கி பனியா முதலாளிகளிடம் கொடுக்கிறார் மோடி.இதுதான் உண்மை.
பாகிஸ்தான் புழக்கத்தில் விட்டிருக்கும் கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய் என்கிறது ரிசர்வ் வங்கி. 2500 கோடி என்கிறது இன்டெலிஜென்ஸ் பீரோ கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிகளுக்கு போட்டிருக்கும் நாமத்தின் மதிப்போ– 12 லட்சம் கோடி. 400 கோடிக்காக தேசத்தையே தெருவில் நிறுத்தியிருக்கும் மோடி 12 லட்சம் கோடிக்காக அம்பானிகளை தெருவில் நிறுத்தி விசாரிப்பாரா?
இந்த உண்மையை எல்லாம் இருட்டடிப்பு செய்து விட்டு மோடிக்கு வக்காலத்து வாங்குகிறார்கள் மோடியின் அறிவுத்துறை கூலிப்படையான ஊடகங்கள் மோடியால் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் போகலாம் கருப்பு பண பேர்வழிகளுக்கு கொஞ்சமாவது நெருக்கடி வந்திருக்கிறதா இல்லையா என்று சாமர்த்தியமாக கேள்வி எழுப்புகிறார்கள்.
ஐயா, கொசு உற்பத்தியாகும் பண்ணை – கூவம் ஆறு கருப்பு பணம் உற்பத்தியாகும் இடம் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், ஊழல் அதிகாரவர்க்கம் அந்த கூவத்தை பாதுகாக்கும் மோடி, வீதி வீதியாக கொசுவுக்கு புகை போடுகிறார் இந்த மோசடியை அம்பலப்படுத்துவதா, அல்லது நாலைந்து கொசு செத்தாலும் நல்லதுதானே என்று பாராட்டுவதா?
பேராசிரியர். பிரபாத் பட்நாயக் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் ஊரில் ஒரு குற்றம் நடந்தால் போலீசார் குற்றத்தை புலனாய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது தெருவில் உள்ள மக்களையெல்லாம் ஸ்டேசனில் வைத்து அடித்து விசாரிக்க வேண்டுமா? எது கருப்பு பண குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டிய அணுகுமுறை என்று கேட்கிறார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை, விற்பனை வரித்துறை, ஆர்.டி.ஓ ஆபீஸ் அதிகாரிகள், சுங்கத்துறை, கலால் துறை அதிகாரிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் – எங்கெல்லாம் கருப்பு பணம் இருக்கும் என்று நமக்கு தெரிகிறது. ஆனால் பிரதமருக்கு தெரியவில்லையாம். நம்ப முடிகிறதா? போகட்டும். திருப்பூர் கன்டெய்னர் பிடிபட்டதே அந்தப் பணத்தின் கதை என்ன ? அன்புநாதன் கோடவுனில் கைப்பற்றப்பட்ட பணமென்ன உஜாலா வெள்ளையா? போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து 2500 கோடி பணத்தை கூரை வரை அடுக்கி வைத்திருந்த கேதன் தேசாய் என்பவன், அவன் மீது போடப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த உத்தமனை உலக மருத்துவ கவுன்சில் தலைவராக சிபாரிசு செய்யவில்லையா திருவாளர் மோடியின் குஜராத் அரசு. இந்த நாட்டில் கருப்பு பண பேர்வழிகளுக்காகவே ஒரு கட்சி உண்டென்றால் அது black money janata party தான். சேட்டுகளின் தாய்கழகமல்லவா பாரதிய ஜனதா சேட்டு என்றாலே, நம்பர் 2 வணிகம் என்பது நாடறிந்த உண்மையல்லவா?
பணப்பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்கு வா, வங்கிக்கு வா ன்னு கூப்பிட்டும் மக்கள் வரவில்லை. அவர்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐந்நூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும்? அதைத்தான் செய்திருக்கிறார் மோடி. இதோ, சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறு வணிகம் அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது. இது நிர்வாகத் திறமையின்மை என்று சிலர் மோடி அரசை விமரிசிக்கிறார்கள்.
இது நிர்வாகத் திறமையின்மையா, திட்டமிட்ட சதியா? முட்டாள்தனமா, முட்டாள்தனம் போலத் தெரிகின்ற அயோக்கியத்தனமா? புழக்கத்தில் இருக்கின்ற பணத்தில் 85% ஐ செல்லாது என்று அறிவித்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை நிர்வாகம் தெரியாத அடி முட்டாள் கூடப் புரிந்து கொள்ள முடியும். முகேஷ் அம்பானியின் முன்னாள் ஊழியரான ரிசர்வு வங்கி கவர்னருக்கும், அதானியின் இந்நாள் ஊழியரான மோடிக்கும் இது புரியாமலா இருக்கும்? எதற்காக வரிசையில் நின்று அல்லல் படுகிறீர்கள்? டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுக்கு மாறிக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை சொல்கிறது ரிசர்வ் வங்கி. ஏ.டி.எம் இல்லையென்றால் என்ன, பேடிஎம் (paytm)-முக்கு மாறிக் கொள்ளுங்கள் என்கிறது பேடிஎம் கம்பெனியின் விளம்பரம்.
நந்தன் நிலேகனி, Unique identification authority of india என்ற ஆதார் அட்டை திட்டத்தின் தலைவர். unified payment interface என்ற திறன்பேசி மூலம் வங்கி பரிவர்த்தனை நடத்தும் செயலி (App – ஐ) உருவாக்குவதில் பங்காற்றியவர். மக்கள் படும் துன்பத்தைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்.
“people will need to figure things out over the next few weeks because the dislocation that will happen when people will not have their notes and the retailer will not accept notes, they will realize that cash was thought of as such a friction-free thing. Now, they will suddenly find that it’s a nuisance. I think this will push people towards digital transactions.”
“அடுத்த சில வாரங்களில் மக்கள் முடிவு செய்தாகவேண்டும். கையில் ரூபாய் நோட்டுகள் இல்லையென்றால் என்ன ஆகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். கடைக்காரர்கள் பணத்தை வாங்க மாட்டார்கள். கையில் பணமாக வைத்துக் கொண்டு செலவிடுவதுதான் தொந்தரவு இல்லாத வழி என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணமாக கையில் வைத்திருப்பதுதான் தொந்தரவு என்று இப்போது புரிந்து கொள்வார்கள்.” இந்த சூழ்நிலை டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி (வங்கி – கடன் அட்டை) மக்களை நெட்டித் தள்ளும்.
மக்களுக்கு நேர்ந்த அசவுகரியத்துக்கு வருந்துவதாக மோடி சொல்கிறாரே அது உண்மையா, நிலேகனி சொல்வது உண்மையா? இது நிர்வாகத்திறமையின்மையா சதித்திட்டமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
மக்களை வங்கிக் கணக்கு என்ற வலையில் சிக்கவைத்து அவர்களுடைய சேமிப்பு பணத்தை அபகரித்து தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்குவது பெருமுதலாளிகளுக்கு வரிவிலக்கு, சிறு வணிகர்கள் முதல் சுயதொழில் செய்வோர் வரை அனைவருக்கும் வரி விதிப்பு, இதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்க வைக்க வங்கிக் கணக்கு. ஆதார் அட்டையையும் வங்கிக் கணக்கையும் இணைத்து மானிய வெட்டு. பணப் பரிவர்த்தனையிலிருந்து கடன் அட்டை பரிவர்த்தனைக்கு மாற்றுவதன் மூலம் சிறுவணிகத்தை மெல்ல அழிப்பது 4ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின் கண்காணிப்புக்கும் உட்படுத்துவது இதுதான் நந்தன் நிலேகனியின் டிஜிடல் இந்தியா, ரிலையன்ஸ் ஜியோவின் டிஜிடல் இந்தியா, மோடியின் டிஜிடல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம். அர்ஜென்டினாவில் இத்தகைய வங்கி நெருக்கடி வந்தபோது அதன் அதிபர் மக்கள் எழுச்சிக்கு பயந்து தப்பி ஓடினார். கிரீசில் மக்கள் போராட்டம் வெடித்தது. சேமநல நிதியை (PF) முடக்குவதாக மோடி கூறியவுடன் பெங்களூரூ நகரத்தை முடக்கியது படிப்பறிவு இல்லாத எளிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் எழுச்சி. அடுத்த கணமே பின்வாங்கியது மோடி அரசு. ஏமாந்தது போதும். கேள்வி எழுப்புங்கள்... பொங்கி எழுங்கள்...!
No comments:
Post a Comment