Tuesday, December 20, 2016

தீபாவை அருகில் சேர்த்திருந்தால், பத்து வருடம் முன்பே ஜெ அப்போல்லாவில் அட்மிட் ஆகியிருப்பார

Sengovi guru
Via Facebook
2016-Dec-20

என்னைப் பெற்றவர், தனது சொந்த சித்தப்பா-சித்திக்கு என்னை தத்துக்கொடுத்தார். அவர்களின் மகனாகவே கிராமத்தில் நான் வளர்ந்தேன். பெற்றவர் நகரத்தில் பெரும் பணக்காரர்..எனது (தத்தெடுத்த) அப்பா-அம்மாவோ ஏழைகள். இரண்டு குடும்பங்களும் நல்லது கெட்டதில் சந்தித்துக்கொண்டாலும், ஏனோ பெரிய ஒட்டுறவில்லை. உறவு விட்டுவிடக்கூடாதே என்று என்னை மட்டும் அவ்வப்போது பிறந்த வீட்டிற்கு போய் வரச் சொல்வார்கள். ஒரு அண்ணன், இரண்டு அக்கா இருந்தும் நாந்தான் அங்கே செல்வேனே ஒழிய, அவர்கள் யாரும் எங்கள் வீட்டுப்பக்கம் வரமாட்டார்கள்.

என் அப்பா வயதானவர்..சில உடல்நோய்களைக் கொண்டவர்..குளிர்காலம் வந்தால் மருத்துவமனையில் அட்மிட் ஆகுமளவிற்கு நிலைமை போகும். ஃபேமிலி டாக்டர் தான்..நான் பிறந்த வீட்டிற்கு அடுத்த தெருவில்தான் ஹாஸ்பிடல். ஆனாலும் பெற்றவரோ உடன்பிறந்தோரோ தவறியும் வந்து பார்க்கமாட்டார்கள். கிராமத்தில் கடை வைத்திருந்தோம். பெரும்பாலும் அரைப்பரிட்சை நடக்கும்நேரம் தான் அப்பா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆவார். கடையைப் பூட்டினால் பூவாவிற்கு வழியில்லை. எனவே தனியே ஹாஸ்பிடலில் அப்பா படுத்திருக்க, நான் பரிட்சைக்கு படித்தபடியே துணையிருக்க, அம்மா கடையில் இருப்பார். நான் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டுபோய் அப்பாவிற்கு கொடுத்துவிட்டு, ஸ்கூலுக்குப் போய் பரிட்சையும் எழுதிவிட்டு, மதியச்சாப்பாடு எடுத்துவந்து கொடுத்து...என்று ஓடிக்கொண்டிருப்பேன். எதிரில் பைக்கில் பிறந்தவீட்டார் வந்தாலும், கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருப்பார்கள்.

+2 முடித்ததும் எஞ்சின்யரிங் சீட் கிடைத்துவிட்டது. ஆனால் ஃபீஸ் கட்ட அப்பாவிடம் பணம் இல்லை. நகரத்தில் லயன்ஸ் கிளப்பிடமும் சில அறக்கட்டளைகளிடமும் உதவிகேட்கலாம் என்று முடிவுசெய்தோம். ‘என் பிள்ளையை ஏன் பிச்சைக்காரனா அலையவிட்டே?’ என்று பெற்றவர் சண்டைக்கு வந்துவிடக்கூடாதே என்ற பயத்தில் என் அப்பா-அம்மா என்னை பெற்றவரிடம் ’அவனே ஃபீஸ் கட்டுவானா?’ என்று ஒருவார்த்தை கேட்கச் சொன்னார்கள். கேட்டேன்..’என்கிட்டே ஏதுப்பா காசு?..அதையெல்லாம் அவங்க தான் பார்த்துக்கணும்’என்று பதில் வந்தது. பிறகு பிச்சை எடுத்து கல்லூரியில் சேர்ந்தேன்.

மூன்றாவது வருடம் படிக்கும்போதே அப்பா இறந்துபோனார். இறப்பிற்கு பெற்றவர் வரவேயில்லை. படிப்பு பாதியில் நிற்கிறதே..அந்த கிழவி பிள்ளையை வைத்துக்கொண்டு என்ன செய்வாள் என்ற கவலையும் அங்கே இல்லை. ‘விடுடா பார்த்துக்கலாம்’ என்று என் அம்மாவே கடைக்குச் சரக்கு வாங்கிவந்து விற்று, மீதி ஒரு வருடத்தையும் படிக்க வைத்தார்.

நான் வேலையில் சேர்ந்த சில மாதத்தில், என்னைப் பெற்ற புண்ணியவானும் இறந்துபோனார். அம்மாவும் சொந்தங்களும் என்னிடம் ‘சொத்தில் பங்கு கேட்கலாம் வா’ என்றார்கள். நான் வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அப்போது என் சம்பளம், வெறும் இரண்டாயிரம் ரூபாய். சிறு கிராமத்து வீடு தவிர்த்து வேறு சொத்துகளும் கிடையாது. பெற்றவருக்கு நகரத்தில் ஒரு பெரிய வீடும், புறநகரில் இருபது வீடுகளும் சொந்தமாக இருந்தன. அவன் சொத்து எனக்குத் தேவையேயில்லை என்று மறுத்துவிட்டேன்.

அதற்கு நான் சொன்ன காரணம்...

’சரியான நேரத்தில் இருபதில் ஒரு வீடு கிடைத்திருந்தாலும் நல்ல பள்ளியில் படித்திருப்பேன்...என் அப்பா இவ்வளவு உழைத்து உடம்பைக் கெடுக்காமல் இன்னும் கொஞ்ச வருடம் வாழ்ந்திருக்கலாம்..அப்பா இறந்து அனாதையாய் நின்றபோது, ஒரு ஆறுதலுக்குக்கூட வந்து நிற்காத ஆளின் சொத்தை வாங்குவது அசிங்கம்..அதைவிட பிச்சை எடுக்கலாம்..என் அப்பா கொடுத்த டிகிரி இருக்கிறது. அதை வைத்து நான் சம்பாதிப்பேன்’

என் அம்மாவிற்கு பெரிய வருத்தம்..தான் தத்து எடுத்ததால்தான் நான் சொத்து இல்லாமல் நிற்பதாக! நான் கலங்கவில்லை..நம்பிக்கையுடன் உழைத்தேன். இன்று அவர்களிடம் இருந்ததைவிட பலமடங்கு காசு ஆண்டவன் அருளாலும் என் அப்பா-அம்மா அருளாலும் என்னிடம் இருக்கிறது. உடன்பிறந்தோர் நல்ல நிலையில் இல்லை என்று யாரோ எப்போதோ சொன்னார்கள். அவர்களை சந்திக்க வேண்டும் என்றுகூட எனக்குத் தோணவில்லை. எங்களைப் போன்ற சிம்மராசிக்காரர்கள் எதையும் மறப்பதும் இல்லை; மன்னிப்பதும் இல்லை.

இப்படி ஒரு பேக்கிரவுண்டுடன் தீபா பேட்டியைப் பார்த்தபோது, குமட்டிக்கொண்டு வந்தது. தெளிவாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, தீபா உளறிக்கொட்டிய முத்துக்கள் இவை :

என் அப்பா இறந்ததற்குக் காரணம், ஜெயலலிதா தான். அவர் சுதாகரனை வளர்ப்புமகனாக அறிவித்ததால்தான் மனம் நொந்து, என் அப்பா இறந்தார்.

என் கல்யாணத்திற்குக்கூட அத்தை வரவில்லை. அதன்பிறகும் வந்து என்னைப் பார்க்கவில்லை.

என் அம்மா இறப்பிற்குக்கூட அத்தை வரவில்லை. ஆறுதல் சொல்லவோ, துக்கம் விசாரிக்கவோ அவர் வரவில்லை.

என் அப்பா இறந்த 1995க்குப் பிறகு அவர் என் வீட்டிற்கே வரவில்லை.

அவ்வப்போது போயஸ்கார்டன் போன என்னையும் 2004க்குப் பிறகு சந்திக்கவில்லை.

2007ல் போனபோது நேரில் சந்திக்காமல் இண்டர்காமில் பேசிய அவர் ‘நானே உன்னை தொடர்புகொள்கிறேன்’என்று சொல்லி பார்க்காமலே விரட்டிவிட்டார். அதன்பிறகும் என்னை பார்க்கவே இல்லை.

கடந்த 12 வருடங்களாக நான் இருக்கிறேனா, செத்தேனா என்று கூட அவர் கவலைப்படவில்லை.

ஆனால்...........

இவ்வளவு நல்ல அத்தையின் சொத்துக்கள் அனைத்தும் எனக்கு வேண்டும்..கட்சி பொதுச்செயலாளர் பதவியும் வேண்டும்..அதுமட்டும் போதாது, முதல்வர் பதவியும் வேண்டும்.

‘உங்களுக்கு எப்போது அரசியல் ஆர்வம் வந்தது?’ எனும் கேள்விக்கு தீபாவின் பதில் தான் இருப்பதிலேயே டாப் :

அத்தை ஜெயிலுக்குப் போன நேரம்..வேறு யாரோ முதல்வராக வரப்போவதாக பேச்சு அடிபட்டது. அப்போது தான் நாமே வரலாமே என்று யோசித்தேன். (அடேங்கப்பா!)

தீபா, தன் பாட்டியின் சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட போயஸ்கார்டன் இல்லத்தை சட்டப்படி உரிமை கோரலாம். ஜெயலலிதா இருக்கும்போதே கேட்டிருக்கலாம், இப்போதும் வழக்கு தொடரலாம்..தப்பில்லை.

ஆனால்...

தன் தந்தையின் மரணத்திற்கு காரணமாக, தன் தாயின் இறப்புக்குக்கூட வராத, 12 வருடங்களாக மூஞ்சியிலேயே முழிக்காத ஒரு அத்தை இறந்ததும் ஓடிவந்து ‘சொத்து எனக்குத்தான்...எல்லாப் பதவியும் எனக்குத்தான்’ என்று சொல்வது எல்லாம் 1% சுயமரியாதை உள்ளவர்கூட செய்யும் காரியம் அல்ல...ஆசையும் பேராசையும் தான் தீபாவின் அடித்தளமாகத் தெரிகிறது.

தீபாவின் சகோதரர் தீபக்கை அரவணைத்த ஜெயலலிதா, தீபாவை ஏன் விரட்டி அடித்தார் என்று இன்று தான் புரிந்தது. (1990களில் ஜூனியர் விகடனில் தீபா ஒரு பேட்டி கொடுத்தார்..அடுத்த ஜெ. நான் தான் எனும் ரீதியில் பில்டப் கொடுத்ததாக ஞாபகம்!)

இதனால் தான் சென்ற பதிவில் சொன்னேன் : ஜெயலலிதா மட்டும் தீபாவை அருகில் சேர்த்திருந்தால், பத்து வருடம் முன்பே ஜெ அப்போல்லாவில் அட்மிட் ஆகியிருப்பார்.!!

No comments:

Post a Comment