Friday, December 2, 2016

K. பாலச்சந்தர் எனும் பாலியல் தொழிலாளி

அடுத்தவர் குடும்பங்களில் கும்மியடிக்கும்
குஷ்பு - லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சிகளின் முன்னோடி, நடிகை லட்சுமி நடத்தியது.

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்
*
தாயும் மகளும் ஒரே ஆணுடன் உறவு. (அவள் ஒரு தொடர்கதை)

தந்தையும் மகனும் பார்வையற்ற ஒரு பெண்ணுடன் உறவு (எங்க ஊர் கண்ணகி)

தன் மகனின் காதல், கல்யாணத்தில் முடியாமல் தடுப்பதற்காக, மகன் காதலித்த பெண்ணின் அம்மாவை தான் மணம் முடித்து, மகனின் காதலியையே அவனுக்குச் சகோதரியாக மாற்றிய தந்தை. (வானமே எல்லை)

அவுங்க அம்மாவை, இவரு பையன் காதலிப்பான்; இவனோட அப்பாவை அந்த அம்மாவோட பொண்ணு காதலிக்கும் (அபூர்வ ராகங்கள்)

இப்படிப் புரட்சிகர குணாம்சங்களோடு கதாபாத்திரங்களை உருவாக்கி, திரைப்படம் எடுத்த அந்த  பின் நவீனத்துவ ‘பிதாமகன்’ யார் தெரியுமா?

‘பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை,  வக்கிரங்களைக் கண்டித்து, தன் பணத்தை எல்லாம் செலவு செய்யும் ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பாளருடைய அப்பாவான, இயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் போற்றப்படும் இயக்குநர் வக்கிரம் கே.பாலச்சந்தர்தான்.

இவர் தனது படங்களில் பெண்களுக்கான குரலை மிக சத்தமாகக் கொடுப்பவர். ஆனால், தகாத கணவனை தள்ளி வைத்து விட்டு மறுமணம் செய்து கொள்ளத் தயாராகிற பெண்ணை,   தன் முதல் கணவன் கதாபாத்திரமாக வந்து, எப்படியாவது அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவார். (அவர்கள், மனதில் உறுதி வேண்டும்)

*தனது ‘அரங்கேற்றம்’ படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி, திருமணம் நடப்பதற்கு முன் அந்தப் பெண்ணை பைத்தியமாக்கி அலைய விடுவார். இது மட்டுமல்ல, திரைப்பட வரலாற்றிலேயே பல புதுமைகளை செய்தவரும் இவரே.

‘ஏக்துஜே கேலியே’ படத்தில் உலகிலேயே முதல் முறையாக கதாநாயகியின் வயிற்றில் பம்பரம் விட்டுக் கட்டியதோடு, அந்தப் பெண்ணின் தொப்புளில் மண்ணையும் கொட்டி மூடியவரும் இவரே.

‘மரோசரித்திரா’ தெலுங்குப் படத்தில் உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு புதுமையைக் கையாண்டிருப்பார்.

கமலும் – சரிதாவும், காதல் தோல்வியால் கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு பிணமாகக் கரை ஒதுங்குவார்கள். கமல் குப்புறப்படுத்து செத்துக் கிடப்பார். சரிதா மல்லாக்கப் படுத்து செத்துக் கிடப்பார்.

ஆம், பெண்ணின் பிணத்தைக் கூட கவர்ச்சியாகக் காட்டிய ஒரே உலக மகா இயக்குநர் கே. பாலசந்தர்தான்.

*
‘கதையல்ல நிஜம்’  இந்த நிகழ்ச்சியால் ஒன்று சேர்ந்த குடும்பங்கள் என்று இரண்டு குடும்பங்களை, தொடர்ந்து தன் விளம்பரங்களில் காட்டிக் கொண்டு வருகிறார்கள். உண்மைதான்.

இந்த இரண்டு குடும்பங்களைத் தவிர, இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த மீதி குடும்பங்கள்,  இனி ஜென்மத்துக்கும் ஒன்று சேர முடியாத அளவிற்கு ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் வேலை பார்த்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

11 வயது சிறுவன் சொல்கிறான், ‘‘நான் வீட்டை விட்டு ஓடிப் போய் பிச்சை எடுத்தேன், திருடினேன், பொம்பளைங்கள கூட்டிக் கொடுத்தேன்’’ என்று.

‘‘அய்யோ’’ என்று பரிதாபத்துடன் ஆச்சரியப்பட்டு துக்கம் தாங்காமல் ‘‘ஒரு விளம்பர இடைவெளிக்குப் பிறகு..’’ என்று அறிவிக்கிறார் நடிகை லட்சுமி.

இனி அந்தச் சிறுவனின் அக்கம்பக்கம் அவனை எப்படி எதிர்கொள்ளும்? அவனைக் குறித்த இந்தக் காட்சிப் பதிவு அவன் எதிர்காலத்தை எந்த நிலையில் வரவேற்கும், என்கிற எந்த சமூகப் பொறுப்பும் அற்று ‘அவலம் தோய்ந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி’ என்கிற தொனியில் அவன் துயரத்தை பணம் பண்னும் இவர்களுக்கும், அந்தச் சிறுவனை திருடனாக்கி விபச்சாரத் தரகனாக்கி,   பணம் சம்பாதித்த அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

கண்ணீரும், கம்பலையுமாக ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறார். அதே கண்ணீரோடு குறுக்கிட்டு, ‘ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, நாம் மீண்டும் அழலாம்’ என்பது மாதிரி அறிவித்து விட்டு, குதூகலமான விளம்பரங்களைப் போட்டு, மிகச் சாதுர்யமாக அடுத்தவர் கண்ணீரில் காசு சம்பாதித்துக் கொடுக்கும் பாரதி கண்ட புதுமைப் பெண் நடிகை லட்சுமிக்கு ஒரு வேண்டுகோள்:

பொதுவாக இந்தியப் பெண்கள் ஆணுக்கான நுகர்பொருளாகவும், அது போக மீதி நேரங்களில், கலாச்சாரக் காப்பாளர்களாகவும் இருக்க வேண்டும். (மதம் உட்பட கலாச்சாரம் என்று சொல்கிற எல்லாவற்றையும் பெண்தான் காப்பாற்ற வேண்டும்)

இந்த இந்தியச் சூழலில் சினிமா, தமிழ் சினிமா  ஆணாதிக்க பொறுக்கித் தனத்தின் உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம்.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்று ஆண்களால் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கும் தமிழ் சினிமா, நடிகையாக வரும் பெண்ணை எப்படி வரவேற்கிறது என்றும், அந்தப் பெண்கள் சந்தித்த துயரங்கள் என்ன என்றும், அவர்களை நேரில் வரவழைத்து அவர்களின் துயரங்களை பகிர்ந்து கொள்வீர்களா?

குறிப்பாக, பாலச்சந்தர் படங்களின் வக்கிரங்களைக் கண்டிப்பதோடு, அவர் தன் படங்களில் நடித்த பெண்களை எந்த அளவுக்கு கண்ணியமாக நடத்தினார்? இல்லை, அடித்து உதைத்து, திட்டினாரா? என்பதையும் அந்தப் பெண்களிடம் பேட்டி கண்டு ஒளிபரப்புங்கள். அதை முதலில் உங்களில் இருந்தே தொடங்குங்கள்.

நீங்கள் அவர் இயக்கத்தில் நடித்திருக்கிறீர்கள். அவர் தயாரிப்பில் இயக்குநராகவும் இருந்திருக்கிறீர்கள். (மழலைப் பட்டாளம்)

இதற்கு உங்களைவிட சரியான, துணிவான நபர் வேறு யார்? சொல்லுங்கள் உங்கள் துயரங்களை.

அடுத்தவர் துயர்களுக்காகக் கண்ணீர் சிந்திய உங்களுக்கு பிரதி உபகாரமாக, கண்ணீர் சிந்தக் காத்திருக்கிறோம்,   அதே விளம்பர இடைவெளியோடு.

வாய்ப்புத் தருவீர்களா?

இணைப்பு:

ஒரு பெண் சொல்கிறார்; என் மேலே சந்தேகப்பட்டு என்னைத் துன்புறுத்துறாரு, வீட்டுக்குள்ளே பூட்டி வெச்சிட்டு வெளியே போயிடறாரு’’

நடிகை லட்சுமி; ‘‘ஏன் இந்த மாதிரி பண்றீங்க? உங்க மனைவிதானே, சரி நடந்தது நடந்துப் போச்சு, ரெண்டு பேரும் குழந்தை மாதிரிதான் இருக்கீங்க, ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு அதிகமா இருக்கிறதுனாலே..’’

வீட்டுக்குள்ள பொண்டாட்டிய பூட்டி வெச்சிட்டுப் போறவன் குழந்தையாம்?! அவனுக்கு அன்பு வேறு அதிகமாம்!

உடனே ‘சரி கைய புடிங்க, கட்டிப் புடிங்க’ என்று கவுன்சிலிங் வேற.

தங்கள் நிகழ்ச்சியின் மூலமாக ஒன்று சேர்ந்தவங்க எண்ணிக்கையை உயர்த்திட்டோம் அப்படிங்கற ‘விளம்பர’ பெருமைக்காக ரொம்பவே அல்லாடுகிறார் லட்சுமி, அசிங்கமாக.

இதை அவராகவே செய்கிறாரா? இல்லை, மகா ‘ஞாநி’ களின் ஆலோசனையும் ஆசியும் பெற்று செய்கிறாரா?
*
‘மொட்டைத் தலையில் மயிர் முளைப்பது எப்படின்னு?’ ஒரு தீவிரமான ஆலோசனையை நடிகர் ‘சோ’ சொன்னார்னா, எவ்வளவு அபத்தமாக இருக்குமோ,  அது மாதிரிதான் இருக்கு, ‘கணவன் – மனைவி ஒற்றுமையா இருக்கணும்; என்ன பிரச்சினை வந்தாலும் பிரியக்கூடாதுன்னு நடிகை லட்சுமி சொல்கிற அறிவுரையும்.

*
2003 ல் தலித் முரசில் எழுதியது. இது நடிகை லட்சுமியையும் கதையல்ல நிஜம் குழுவினரையும் நிரம்ப கடுப்பேற்றியதாக கேள்வி.  இந்த மோசடிகளின் ஆலோசனைக் குழுவில் ஞாநியும் இருந்தார்.

குறிப்பு:
தலித் முரசில் எழுதும்போது(2003) *‘தனது அரங்கேற்றம் படத்தில் பாலியல் தொழிலாளியாக இருக்கிற’ என்று குறிப்பிட்டு இருந்தேன். அதை இப்போது (2007) மாற்றி, *‘தனது அரங்கேற்றம் படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண்ணுக்கு’ என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

தோழர் வே மதிமாறன்

No comments:

Post a Comment