Arivazhagan kayvalyam
Via Facebook
2016-Dec-8
ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல்வேறு யூகங்களும், கதைகளும், குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்து சமூக இணையதளங்களில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது, வாழும் காலத்திலேயே, மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வராக இருந்தாலும் அவர் புதிர்களும், மர்மங்களும் நிரம்பியவராக, ஊடகங்களுக்கு முகம் காட்டாதவராக, சக அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க விரும்பாதவராக ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியைப் போலத்தான் நடந்து கொண்டார், ஆகவே, உடல் குன்றிய காலத்தில் அவர் உறுதியாக யாரையும் சந்திக்க மறுத்திருப்பார் அல்லது விரும்பி இருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.
அநேகமாக அவர் உடல் நலம் குன்றி அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22 ஆம் நாளுக்குப் பிறகு சில நாட்களில் உடல் நலம் தேறி வந்திருக்கக் கூடும், அப்பல்லோ மருத்துவமனை பன்னாட்டு மருத்துவ விதிகளைப் பின்பற்றுகிற ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை, அங்கிருந்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாநில முதல்வர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார், முன்னரே இறந்து விட்டார், உடல் பதனம் செய்யப்பட்டிருந்தது என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுவது ஒட்டுமொத்த மருத்துவர்களையும் குற்றவாளிகளைப் போலச் சித்தரிக்கிற கட்டுக்கதை.
ஜெயலலிதாவின் மனநிலை குறித்து நன்கு அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும், அவர் தனது உடல் நலக்குறைபாடுகளை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கியவர் என்று, தன்னை ஒரு உடல்நலமுள்ள ஆற்றலுள்ள தலைவராகவே மக்கள் உணர வேண்டும் என்று விரும்பியவர். ஆகவே, யாரையும் சந்திக்க விரும்பி இருக்க மாட்டார், அவரைச் சந்தித்தார், இவரைச் சந்தித்தார் என்று அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் கூறியதெல்லாம் பொய் என்பது பொதுவான உண்மையாகவே இருக்கிறது.
ஆனால், நவம்பர் மாத மையப்பகுதியில் இருந்து அவருக்கு தொண்டைப் பகுதியில் வெட்டப்பட்டு செயற்கை மூச்சு மருத்துவம் அளிக்கப்பட்ட காலத்தில் இருந்தே சிக்கலான ஒரு நிலைக்கு மருத்துவரீதியாக அவர் சென்றார், பல்வேறு மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவரது உடல் நலனைத் தேற்ற அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும், சசிகலா குழுவினரும் முயற்சி செய்தார்கள் என்பதே மனசாட்சி உள்ளவர்களால் நம்பப்படும் உண்மை, இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதாவின் பெயரில் விடப்பட்ட அறிக்கைகள், பெருவிரல் முத்திரை போன்றவை குறித்து விசாரணைகளும், ஆய்வுகளும் தேவைப்படுகிறது.
மாலையில் அவர் காலமானார் என்கிற செய்தி கசிந்து ஊடகங்களால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டபோது உண்மையில் ஜெயலலிதா இறந்திருந்தார், ஆனாலும், சட்டம் ஒழுங்கு, அரசு நடைமுறைகள், போக்குவரத்து இடையூறுகள் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவே அரசும், மருத்துவமனை நிர்வாகமும் அவரது மரணத்தை நள்ளிரவு 11.30 மணிக்கு அறிவித்தன.
தவறான வழிகாட்டுதல்களும், சிகிச்சைகளும் மாநில முதல்வருக்கு வழங்கப்பட்டது என்று நம்புவதும், பரப்புவதும் இந்திய மருத்துவ சமூகத்தையே அவமதிக்கிற விஷமத்தனமான சமூகப் பொறுப்பற்ற குற்றச்சாட்டு.
No comments:
Post a Comment