Tuesday, December 20, 2016

வங்கி ஊழியர்களே வீதிக்கு வாருங்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னால் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு கருத்து சொல்லியிருந்தார், அரசு போதுமான அளவுக்கு பணத்தாள்களை அச்சிட்டு வழ்ங்குவதாகவும் அது சில வங்கி அதிகாரிகளின் தவறான நடவடிக்கையினால் மக்களுக்கு கிடைப்பதில்லை எனும் அக்கருத்து பெரிதும் கவனம் பெறாமல் போனது. பிறகு அதே அவதூறு ஒரு உரையாடல் வடிவில் இந்துவெறியர்கள் வாட்சப் பக்கங்களில் பகிரப்பட்டது. அவர்களால் பகிரப்படும் ஜெய்ஹிந்த் பதிவுகளையும் படங்களையும் பக்தியோடு நக்கி பரவசம் குன்றாமல் அப்படியே மற்ற குழுக்களில் வாந்தியெடுக்கும் தே.பக்தர்கள் இச்செய்தியை இப்போதுவரை பகிர்ந்தவண்ணமிருக்கிறார்கள்.

ஆச்சர்யமூட்டும் வகையில் வங்கிப்பணியாளர்கள் சங்கத்தில் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. இதற்குமட்டுமல்ல, ஆரம்பம் முதலே அரசு வங்கிகளை பெரும் துன்பத்துக்குள் தள்ளும் முனைப்போடு மோடி அரசும் அதன் ஆசன வாயாகவே மாறிப்போன வெகுஜன ஊடகங்களும் செயல்பட்டு வந்திருக்கின்றன. ஊழியர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி மக்களிடம் அவர்களை எதிரியாக காட்டுவதில் கிட்டத்தட்ட இவர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள். மோடிக்கு விழவேண்டிய அடிகளை தாங்கிக்கொள்ளும் பாக்ஸிங் பையாக வங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

நவம்பர் 8க்கு பிறகு அவர்களுக்கு அதிகரித்திருக்கும் பணிச்சுமையும் அச்ச உணர்வும் அளவிட முடியாதவை. மக்களுக்கு சொல்லப்படும் கருத்து ஒன்றாகவும் வங்கிகளுக்கு வரும் வாய்மொழி உத்தரவு வேறொன்றாகவும் இருகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் எச்.டி.எஃப்.சி வங்கியின் நீண்ட வரிசையில் நின்றிருந்தேன். வங்கிக்கு உள்ளே அனுப்பப்படும் 20 பேரில் இடம் பிடிக்கவே ஒன்னரை மணிநேரம் ஆனாது. இன்றைய சூழலில் இது ஓரளவு பரவாயில்லை ரக காத்திருப்புதான். நான் நான்காவது ஆளாக நிற்கையில் காசாளர் பணம் பத்தாது உள்ளே இருப்பவர்களுக்குதான் கொடுக்க முடியும்,  டெபாசிட் பண்றவங்களை மட்டும்  அனுப்புங்க என்கிறார். வெளியே இன்னும் இரண்டு மணிநேரம் நீளும் அளவுக்கு கூட்டம் நிற்கிறது. இந்த தகவலை அவர்களிடம் சொல்ல வேண்டிய காவலாளி முகத்தில் அப்போது வெளிப்பட்ட கலவரத்தை விவரிக்க ஆயுள் முடியும்வரை முயன்றாலும் முடியாது.

கொஞ்சமும் பொருத்தமில்லாத கையிருப்பு நிதியோடு நாளுக்கு 4000 மாற்றிக்கொடுக்க வேண்டும் எனும் நெருக்கடியில் துவங்கியது அவர்கள் துயரம். நாளுக்கு நாலாயிரம் மாற்றிக்கொள்ளலாம் என மக்கள் நம்பிக்கொண்டிருக்க வங்கிகளுக்கு ஆளுக்கு நாலாயிரம் மட்டுமே என உத்தரவிடப்பட்டிருந்தது. ஓரிருநாளில் ஆதார் எண்ணை பதிவுசெய்வதன் மூலம் அது நடைமுறைக்கும் வந்தது. ஆனால் கடைசிவரை பாஜக ஊடக குண்டர்கள் அப்படியெல்லாம் இல்லை என சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். இதன் உச்சகட்டமாகத்தான் மை வைக்கும் வேலையை அரசு அறிமுகம் செய்தது.

சிறுசேமிப்பு திட்டங்களில் பழையை நோட்டுக்களை முதலீடு செய்ய முடியாது என ஒரு அறிவிப்பு வந்தது. பல வாடிக்கையாளர்கள் பணத்தை சேமிப்புக் கணக்கில் மட்டும் செலுத்த அறிவுறுத்தப்பட்டார்கள்.

முறைசாரா பணியாளர்களுக்கு புதிய வங்கிக்கணக்குகள் துவங்கப்பட்டதாக கணக்கு மட்டும் காட்ட வங்கிகள் நிர்பந்திக்கப்பட்டன. அதற்கான புகைப்பட ஆதாரங்கள் உருவாக்கும்படி அவர்கள் பணிக்கப்பட்டார்கள். கணக்கு ஆரம்பிக்க அலைந்த தொழிலாளர்கள் கதை ஏதும் அம்பலத்துக்கு வரவில்லை.

சந்தையில் இருந்து வாபஸ் பெறப்பட்ட 2005க்கு முன்பு அச்சடிக்கப்பட்ட நோட்டுக்களை சுற்றுக்குவிடும்படி அதிகாரபூர்வமற்ற உத்தரவு வழங்கப்பட்டது. சட்டப்படி அவை செல்லாத நோட்டுக்கள். அந்தவகை நோட்டுக்களில் ஓரளவு கிழிந்த நோட்டுக்களை பிரித்து சலித்தன வங்கிகள்.

வாரம் 24000 எடுக்கலாம் என மக்களுக்கு அறிவித்துவிட்டு கிளைகளுக்கு இருப்பதைக் கொண்டு சமாளிக்கும்படி சொல்லிவிட்டார்கள். பல அரசுடைமை வங்கிகள் 2000 ரூபாய் மட்டுமே கொடுத்தன. சிலர் தினமும் அரைநாள் செலவிட்டு நாளுக்கு 2000 பெற்றார்கள். போதுமான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்பட்டிருப்பதாக வாய்கூசாமல் சொன்னது ரிசர்வ் வங்கி. அதனை நம்பி வங்கிப் பணியாளர்கள் மோசடி செய்வதாக சண்டையிட்டார்கள் வாடிக்கையாளர்கள்.

டாஸ்மாக் கணக்குகளை கையாளும் வங்கிகளுக்கு செஸ்டில் இருந்து பணம் வழங்குவது நிறுத்தப்பட்டது. அந்த பட்டியலில் வந்த வங்கிக் கிளைகள் டாஸ்மாக் ஊழியர்களை தாஜா செய்து பணத்தை விரைவாக கட்ட வைக்கிறார்கள்.

சமீபத்தில்கூட நடப்புக் கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வரவு வைக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு வந்திருக்கிறது (சேமிப்புக் கணக்கில் மட்டுமே அதனை செலுத்த முடியும்).

ஆரம்பத்தில் டிசம்பர் இறுதிவரை வங்கிகள் விடுமுறை இல்லாமல் செயல்படும் என அரசு அறிவித்தது. அது வங்கி பணியாளர்கள் சங்க எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டதாக பலரும் கருதுகிறார்கள். சரியாக பார்த்தால் இதுவும் வங்கி ஊழியர்கள் எதிர்ப்புக்காக செய்யப்பட்ட மாற்றமல்ல. வாரம் முழுக்க பணம் வழங்குவதை குறைக்கும் ஒரு வழியாகவே அரசு இதை கைவிட்டிருக்கிறது என்பது புரியும்.

இவை என் கவனத்துக்கு வந்த சில சங்கதிகள். உள்ளே இன்னமும் ஏராளமானவை இருக்கக்கூடும். ஓரிரு வாரங்களில் முடிந்துவிடும் என வாக்களிக்கப்பட்ட விடயம் இரண்டாவது மாத மத்தியிலும் நீடிக்கிறது. நாளந்தம் வங்கி வாயிலில் கூடும் கூட்டம் அதிகரித்தவண்ணமிருக்கிறது. இது அடுத்த ஆறேழு மாதத்துக்கு குறைய வழியில்லை. வங்கிகளின் வழக்கமான பணிகள் இன்னமும் முழுமையாக ஆரம்பிக்கவில்லை. அவை துவங்கும்போது இவர்கள் விழிபிதுங்கப்போவது உறுது. விரைவில் இந்த சிக்கல் தீர்ந்துவிடும் என நம்பும் வங்கியாளர்களுக்கு நற்செய்தி ஏதும் கிடைக்கப்போவதில்லை.

ஆனால் இவை குறித்த பரப்புரைகளோ, விவாதங்களோ வங்கி ஊழியர் மத்தியில் துவங்கியதாக தெரியவில்லை. பாமர மக்களைவிட வங்கி ஊழியர்களால் இந்த பிரச்சினைகளை இன்னும் முழுமையாக அனுமானித்திருக்க முடியும். அவர்கள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்திருந்தாலோ அல்லது வாடிக்கையாளர்களிடம் மட்டுமேனும் நிலைமையை பிரச்சாரம் செய்திருந்தாலோ அரசை ஓரளவுக்கேனும் பணிய வைத்திருக்க முடியும். ஆனால் இங்கே வங்கிப் பணியாளர்களிடம் பிரச்சாரம் செய்யக்கூட சங்கங்கள் மெனக்கெடவில்லை. தங்கள் எதிர்காலத்துக்காகக்கூட போராட இயலாத கூட்டமாக வங்கிப் பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பதை நம்பவே சிரமமாக இருக்கிறது.

இது பற்றி ஒரு மூத்த வங்கி மேலாளரிடம் கேட்டபோது அவர் புதிதாக பணிக்கு வரும் ஊழியர்களை குற்றம் சொல்கிறார். நவீன தலைமுறை ஒரு ஐடி பணியாளருக்குரிய மனோநிலையில் பணிக்கு வருகிறார்கள். தங்கள் இருக்கையை பாதுகாத்தால் போதும் என்பதும் மேலிடம் இடும் கட்டளையை கேள்வியெழுப்பாமல் ஏற்றுக்கொள்ளும்படிக்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவே பணிக்கு வருகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு வங்கிக்குள்ளேயே ஒருங்கிணைப்பை உருவாக்க இயலாத நிலைதான் இப்போது இருக்கிறது. இங்கே செயல்திறம் மிக்க தொழிற்சங்கம் கட்டமைக்க உகந்த சூழலே இல்லை என்கிறார் அவர். இப்போது வங்கிப் பணியில் சேரும் பணியாளர்கள் பலரும் பொறியாளர்கள், பிசியோதெரபி மருத்துவர்கள் என பெரும் படிப்பு பின்புலத்தோடு வருகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டு பற்றி இளம் தலைமுறை வங்கி ஊழியர்களிடம் கேட்டபோது அவர்களது குற்றச்சாட்டு வேறாக இருக்கிறது. ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் வேலைகளில் இருக்கும் பணிப்பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளைக் கண்டு வெறுத்துப்போய்தான் நாங்கள் ஓரளவு பாதுகாப்பான மற்றும் சுயமரியாதை இருக்கும் என கருதும் வங்கிப்பணிகளுக்கு தேர்வு எழுதுகிறோம். ஒப்பீட்டளவில் வங்கிப்பணியானது ஐ.டிதுறையைவிட குறைந்த வருவாய் உள்ள வேலைதான். இங்கே புதியவர்கள் எல்லோரும் யூனியன் சந்தா கட்டுகிறோம், சங்கத்தோடு எங்களுக்கு உள்ள ஒரே தொடர்பு அதுதான். அவை என்ன செய்கிறது என்பது பற்றி எங்களுக்கு எந்த தகவல்களும் தெரியாது. புதிதாக யாரையும் சங்க பணிகளுக்கு தயார்செய்யக்கூட இங்கே முயற்சி நடப்பதில்லை.

புதியவர்களை உற்சாகப்படுத்தி சங்கப்பணிகளில் ஈடுபடுத்தும் ஆர்வம் எந்த மூத்த ஊழியர்களுக்கும் இருப்பதில்லை. இன்னும் சொல்வதானால் மூத்த தொழிற்சங்கவாதிகள் தமது பணி ஓய்வுக்குப் பிறகும் தொழிற்சங்கத்தை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்களுக்கு ஒரு தனி சங்கம் இருக்கிறது. அதன் தலைமையை பல்லாண்டுகாலம் ஒருவரே வைத்திருக்கிறார், ஓய்வுகாலத்துக்கு பிறகும். அந்த சங்கம் கிட்டத்தட்ட வங்கியின் உறுப்பு நிறுவனமாகவே செயல்படுகிறது. இப்போது முறைகேடான பணி நியமனங்களுக்காக சங்கத்தின் மீது சி.பி.ஐ வழக்கு நடக்கிறது. வங்கிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் எங்களால்தான் நாசமானது என்பது அபாண்டம் என்கிறார் அந்த இளைஞர்.

இரண்டு தரப்பு குற்றச்சாட்டுக்களிலும் உண்மை இருக்கிறது. தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து அரசியல் சுத்திகரிக்கப்பட்டு வெறும் நிறுவனம் சார்ந்த இயக்கமாக சுருக்கப்பட்டதன் விளைவு இது. கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் ஆதரவுபெற்ற தொழிற்சங்க போராட்டம் எதுவும் நடக்கவில்லை. அனேகமாக எல்லா பெரிய போராட்டங்களும் நசுக்கப்பட்டன (உதாரணம் என்.எல்.சி). காரணம் மற்றவர்கள் மனதில் இது எனக்கு சம்மந்தம் இல்லாத விசயம் இது எனும் எண்ணம் உருவாக்கப்பட்டுவிட்டது. அரசுத்துறையை ஒழித்துக்கட்டும் அரசின் செயலை தொழிலாளர்களால் தடுக்க முடியாததன் மைய காரணம் இதுதான்.

இப்போது கூட்டுறவு வங்கிகள் தமது பணிகளை செய்யாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கூட்டுறவு வங்கிகளை மட்டும் நம்பி தமது வங்கிசார் பணிகளை மேற்கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக கிராம மக்களைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் அரசு இந்த வேலையை செய்திருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வங்கிமீது முழுமையாக நம்பிக்கை இழப்பார்கள். அதற்கான விலையை கொடுக்கப்போவது கூட்டுறவு சங்க ஊழியர்கள்தான்.

இன்று கூட்டுறவு சங்கங்களுக்கு நேர்ந்ததுதான் நாளை எல்லா அரசு வங்கிகளுக்கும் நடக்கும். மாதக்கணக்கில் நீளும் பணத்தட்டுப்பாடும் கட்டுப்பாடும் மக்களிடம் அரசு வங்கிகள் மீதான அவநம்பிக்கையை உருவாக்கும். அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் தேவைப்படும் இந்த சூழலிலும் வங்கி இணைப்பை காரணம் காட்டி எஸ்.பி.ஐ 55,000 ஊழியர்களை விருப்ப ஓய்வில் அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டிருக்கிறது. இனி இழக்கப்போகும் வாடிக்கையாளர்கள், வரப்போகும் வருவாய் இழப்பு ஆகியவை வேட்டுவைக்கப்போவது அடுத்த சம்பள உயர்வைத்தான். ஏற்கனவே புதிய பென்ஷன் எனும் சூதாட்டம் மூலம் வங்கிப்பணியின் பெரும் அனுகூலமான பாதுகாப்பான ஓய்வுகாலம் எனும் கனவை சிதைத்துவிட்டது. இதில் இன்னும் அதிகமான இழப்புகளை சந்தித்தால் அதுவும் இன்னொரு ஐ.டி வேலையைப் போலத்தான் ஆகும்.

உரிய எண்ணிக்கையில் பணத்தாள் அச்சிடப்படாது என அரசு தெளிவுபடுத்திவிட்டது. ஆக நெருக்கடி தீர நெடுநாள் ஆகும். இந்த நிலையிலும் வங்கிப்பணியாளர்கள் அரசை காப்பாற்றவே அதிகம் முயற்சிக்கிறார்கள். அதில் பலியாவது அவர்கள் மீதான மக்களின் நம்பிக்கை. செயற்கையாக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு இப்போதுவரை பெருந்தொகையான மக்கள் மனதில் இன்றுவரை ஆதிக்கம் செலுத்துகிறது. அதைவிட தீவிரமான வெறுப்பு வங்கிகளின் மீது திட்டமிட்டு உருவாக்கப்பட்டு அரசின் ஆதரவோடு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவ்வளவு பெரிய தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் வங்கிப்பணியார்கள் எதிர்வினை புழுவினுடையதைவிட பலவீனமானதாக இருக்கிறது. 100கோடிக்கும் மேலான மக்களின் தாலியறுக்க தயங்காத அரசு அரசு வங்கிகளையும் நசுக்கித் தூக்கியெறிய வெகுநேரம் ஆகாது. அது நடக்காது என நம்புவதற்கு தர்கரீதியாக ஒரு காரணம்கூட இல்லை.

நாம் அரசியலில் தலையிடாவிட்டாலும் அது நம் வாழ்வில் தலையிட்டுக்கொண்டே இருக்கும். சகமனிதர்களின் ஆதரவைத்தவிர வேறொரு உத்திரவாதமான பாதுகாப்பு இந்த உலகில் கிடையாது. 150 வருசங்களுக்கு முன்னால் ஏங்கெல்ஸ் சொன்னதைத்தான் இன்றைய நவீன உளவியலும் மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழியாக பரிந்துரைக்கிறது. சமூகத்தின் நலனில்தான் தனிநபரின் நலனும் இருக்கிறது (பிறருக்காக செய்யும் வேலைதான் அதிக மகிழ்ச்சியை உருவாக்கும்- உளவியல் பரிந்துரை). வங்கிப் பணியாளர்கள் இனியும் அமைதியாய் இருப்பது என்பது அவர்களையே அழித்துக்கொள்ளும் நடவடிக்கை. அரசாங்கம் உங்கள் சகோதரர்கள்மீது தொடுத்திருக்கும் யுத்தத்தில் நீங்கள் அரசுக்கான மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படுகிறீர்கள். ஆகவே இந்த நடவடிக்கை பற்றிய வீச்சான பிரச்சாரமும் தொடர் போராட்டங்களும் இனியாவது வங்கி ஊழியர்களால் முன்னெடுக்கப்படவேண்டும்.

விழித்துக்கொள்ளுங்கள், வீதிக்கு வாருங்கள்

https://villavan.wordpress.com/2016/12/19/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

No comments:

Post a Comment