சங்கீதா. இரா. கண்ணன்
Via Facebook
2016-Dev-10
அறிவாளரோடு உறவாடும் மடல்
பேரன்புடையீர்! வணக்கம், வாழ்த்துக்கள்!
திராவிடக் கட்சிகளை ஒழிப்போம், அழிப்போம் என்று உதவாக்கரை மனிதர்கள் சிலர் பழைய மா.பொ.சி.யின் பறைசாற்றலைப்போல பரப்புரை செய்து வருகிறார்கள். அந்த மா.பொ.சி.யின் எசமானர் ராசாசியைப் போன்ற சில மறைமுக எசமானர்களின் ஏடுகளும் இதழ்களும் காணொளி - கேட்பொலி வடிவங்களும் வண்ணப்படுத்தி, வானவில்லென காட்டுவதை கவனத்தில் கொள்ளவே செய்கிறோம்.
திரு. ப.நெடுமாறனும், சில தமிழ் அமைப்புகளும் சீமான் போன்ற திகிடுத் தத்தக்காரர்களும் சில தமிழ் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்விக் கொள்கையில் பொருளீட்டும் கண்ணியமற்றவர்களும், ஆரியம் வகுத்த தமிழுக்கு தொடர்பில்லாத சாதிய உணர்வுகளில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஈடுபாடு காட்டிவரும் பொறுப்பில்லாதவர்களும் புலம்புவதைக் காணலாம்.
திராவிடம் என்ற சொல் எதிலிருந்து பிறந்தது அல்லது எந்தச் சொல்லிலிருந்து கிளைத்து வந்தது என்ற ஆய்வறிவு இவர்களுக்கு உண்டா? இயற்கையின் தட்பவெப்ப நிலைகளில் ஓசையில் ஒலிக்கும் மொழியின் ஒலிகள் திரிவதும் இயல்பானது இயற்கையானது என்பதாவது தெரியுமா?
எப்படி சூசிந்து’ சூஹிந்து’வாகி, தமிழ் ஒலியில் சூஇந்து’வானதோ, சி எனும் சீரொலி வாயில் வராத அரேபியனும், அய்ரோப்பியனும் ஹிந்து என்றானே அதுபோல தமிழ் என்பதில் ழ நுழைய மறுத்த மற்ற பகுதி அறிவாளிகள், திரமிளம், திரவிடம் என்றார்கள். அதில் நெடில் சேர்ந்து திராவிடம் ஆகியது. ஆனால் சிந்து ஹிந்துவாகி அது தமிழுக்கு வரும்போது இந்துவானதை ஏற்றுக் கொள்வார்களாம். இந்துவின் பெயரால் வரும் அறிவோ ஆய்வோ இல்லாததை எல்லாம் ஏற்று இளித்துக் கிடப்பார்களாம். தமிழ் நுழையாதவனால் சொல்லப்பட்ட அதுவும் தமிழுக்கான பொருளோடு சொல்லப்பட்ட திராவிடத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். என்ன மனமோ! என்ன அறிவோ!
தமிழிலிருந்து திரிந்து, சிதைந்த மொழிகள்தான் உலகமொழிகளெல்லாம் என்றுதானே பாவாணரும் மற்ற உண்மைத் தமிழ் ஆய்வாளரும் உரைக்கிறார்கள். அதில் தமிழரோடு அவர்களை திராவிடர் என்று அழைப்பதில் என்ன குற்றம் கண்டார்கள்.
சரி, திராவிட இயக்கம் என்றால் அம்மாவின் கைப்பிடியில் சிக்கியிருக்கும் அ.தி.மு.கவையும் இணைத்துப் பேசுவோர் தங்களை அற்புத அறிவாளிகள் என்று எண்ணுவதை புரிந்து கொள்ள முடிகிறது. இதில் அதிமுக-வை - பெயரை வைத்துப் பேசுவதென்பது அரைகுறையானது ஆகும். அதைத் தவிர்த்து மற்ற திராவிட எதிர்ப்பு அமைப்புகளை ஆய்வுசெய்தால், தி.மு.க. தமிழைச் சொல்லாததை தமிழுக்கு, தமிழருக்குச் செய்யாததை இந்த வெண்ணை வெட்டி வீரர்கள் என்ன செய்து கிழித்து விட்டார்கள் என்ற கேள்வி எழாதா?
திராவிடம் என்பது ஒரு நிலப்பகுயின் பெயரென்று சிலர் எழுதுகிறார்கள். அதுகூட ஓரளவுக்குச் சரியே தவிர, முழுமையும் சரியாகாது. ஏனெனில் எத்தனையோ நிலப்பகுதிகள் பெயர் மாறியதோடு பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன.
ஆனால் மொழியோ வேறு எதுவோ அதன் கருத்து வடிவங்களால்தான் ஆய்வு செய்ய வேண்டும். இதைத்தான் அறிஞர் அண்ணாவிடம் கேட்டார்கள். ஆரியம் திராவிடம் என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள் என்றார்கள். அதற்கு அண்ணா சொன்னார், திராவிடம், திராவிடர் என்பது உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளிகளின் சிறப்பையும் குறிப்பது. ஆரியம் என்பது உழைக்காமல் ஊரைஏய்த்து உண்டு கொழுப்பது என்றார். உண்மைக்கு மாறானது என்றார்.
மற்ற நிலைகளை விட மேற்கண்ட உழைப்பவர், உழைக்காதவர் என்பது உலகம் முழுவதும் உள்ள நிலையாகும். ஆகவே இந்த ஆரியம் திராவிடம் என்பதை இந்த நோக்கில் பார்ப்பதுதான் அறிவுடைமையாகும்.
அய்ரோப்பாவில் மலர்ந்து வளர்ந்த அறிவியலில் சிறந்த கருவிகள் கண்ட எந்திர புரட்சியால் எல்லாவகை வளத்தையும் பெற்றவர்களைப் பார்த்து, மாமேதை இங்கர்சால் கேட்டார், ஆலயங்கள் சாதித்தென்ன? நன்றி யாருக்கு? என்று. அதுபோல இங்கே திராவிட இயக்கங்களை விட மற்றவர்கள் சாதித்தென்ன? நன்றி யாருக்கு? என்று கேட்கத் தோன்றுகிறது.
பொருள், புகழ்தேட குறுக்குச் சிந்தனை கொண்ட போலிகளும் பொய்யர்களும் கலைஞரையும் வீரமணியையும் வீழ்த்தி விட்டால் பெரியாரின் கருத்துக்கள், கொள்கைகளை வீழ்த்தி விடலாம், அண்ணா தந்ததையெல்லாம் அகற்றி விடலாம் என்று நினைப்பவர்களின் சதி வலையில் தெரிந்தும் தெரியாமலும் சிக்கிக் கொண்டவர்களின் பிதற்றலே திராவிட மாயை என்பதுதாகும்.
ஊடக ஒளியில் உத்தமர்களாக காட்டப்படுவோரை உற்றுப் பாருங்கள், உண்மை விளங்கும். கோழி திருடுபவனைப்போலவும், கொல்லைச்சுவர் தாண்டுபவனைப் போலவும் முக்காடு போட்டிருப்பதைக் காண முடியும். சமூக ஆர்வலர்கள், தமிழ் மீது தாளாத பற்றுக் கொண்டவர்கள் என்று தம்பட்டம் அடிப்பது ஊடக வாய்ப்புகளால்தான்.
திராவிடம், தமிழ், தமிழர், தமிழ்க் கொள்கைகள், ஆரியம் சொன்ன அமானுசிய செய்திகள், எதையும் அறிவு தரும் ஆய்வு நிலைகளோடு தர்க்க நியாய வாதங்களில் ஈடுபடுத்திப் பார்த்தால் நெஞ்சறிய பொய் சொல்பவர்களைப் புரிந்து கொள்ளலாம்.
ஆய்வு நெறியோடு வள்ளுவன் சொன்னதை நினைத்துப் பார்ப்போம். நிறைந்த வேறுபாடுகளுடன் விளங்கும் இந்த நிலவுலகுக்கு அவன் தந்த நெறிசார்ந்த இரு குறளை முன்னிருத்தி ஆய்ந்தால் உண்மை ஒளிவீசத் தொடங்கும்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதல் எண்ணி மூன்று.
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்.
என்பதுபோல் எதையும் அணுகவேண்டும். இவற்றிற்கு மாறாக எவர் எதைச் சொன்னாலும் அவற்றை நல்லறிவாளர்களும் நாட்டுமக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த இருகுறள்களும் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment