Don Ashok
Via Facebook
2016-Dec-08
திடீரென தேசிய ஊடகங்களும், உள்ளூர் வேதவிற்பன்ன 'சமூக' ஆர்வலர்களும் சசிகலா மீது கொலைபழி எல்லாம் சுமத்தி பாய்வதை முன்முடிவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு நிதானமாக ஆராய்ந்தால் பல கணக்குகள் மிக எளிமையாகப் புரிகிறது. பொறுமையாக படிக்க வேண்டுகிறேன்.
சசிகலா கையில் அதிமுக போனதை/நீடிப்பதை அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் எனத் துடிக்கும் பாஜக/RSS தரப்பு விரும்பவில்லை. அதனால் புதிது புதிதாக சசி தரப்பின் மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் நடு இரவில் பதவிப்பிரமாணம் என்று மொன்னைத்தனமாக கேள்வி கேட்கிறார்கள். ஒரு மாநிலம் முதல்வர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருத்தலாகாது. நடு இரவு பதவிப்பிரமாணங்கள் ஏற்கனவே பலமுறை நடந்தேறியுள்ளது.
சசி அழவில்லை என்பதெல்லாம் மிகவும் கேவலமான வாதம். நமக்குதான் ஜெவின் மரணம் முதல்நாள் செய்தி. சசியை பொறுத்தவரை ஏறத்தாழ எழுபது நாட்களாக அவர் ஜெவின் மரணத்திற்கு மிக அருகில் வாழ்ந்து பழகியிருக்கிறார். ஜெவின் உடல் ஊர்வலத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டபோதும், புதைக்கப்பட்டபோதும் சசி அழுதார். அவர் எப்போது, எப்படி, எவவ்ளவு அழுதிருக்கவேண்டும் என வகுப்பெடுப்பதெல்லாம் மிகவும் இழிவான செயல்.
பற்றாக்குறைக்கு சோவை கொன்றுவிட்டதாக எல்லாம் உளறுகிறார்கள். ஏதோ சோ நல்ல உடல்நிலையில் ஓடியாடிக் கொண்டு இருந்தது போலவும், சசியின் ப்ளானை அவர் துப்பறிந்தபோது அவரை கொன்றுவிட்டார்கள் என்பது போலவும் மொக்கையான திரைக்கதைகளை எழுதுகிறார்கள்.
மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றையும் நாம் மறக்கிறோம். அதிமுக மீதான தவறுகளை எல்லாம் மொத்தமாக போட ஒரு பகடையாக ஊடகங்கள் சசியை பயன்படுத்தியதும், அவரே முன்வந்து பல நேரங்களில் அந்த நாடகங்களில் பங்கேற்றதும் ஊரறிந்த செய்தி. அதிமுக நிர்வாகம் என்பது வேட்பாளர்/அமைச்சர் தேர்வு உட்பட எப்போதுமே ஜெ-சசி என்ற கூட்டணியாலேயே நடத்தப்பட்டு வந்தது என்பது அதிமுககாரர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும், ஏன் இந்தியாவுக்கே நன்றாகவே தெரிந்த ரகசியம். அதிமுகவின் தோல்விகளிலும், வெற்றிகளிலும் ஜெவுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே பங்கு சசிக்கும் உண்டு என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளவேண்டிய ஒன்று. மற்றபடி அவர்களுக்குள் கலைஞர் குடும்ப ஊடல்களைப் போல எப்போதாவது நடந்திருக்கலாமேயொழிய அதை ஏதோ பெரிய ஜென்மப் பகையாக சித்தரிப்பதெல்லாம் நகைச்சுவை. இத்தனை நாள், அதாவது ஜெ உயிரோடு இருக்கும்வரை அதமுகவில் சசியின் பங்கை அமைதியாக வேடிக்கை பார்த்து, அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த ஊடகங்களும்/ஊடகவியலாளர்களும் இன்று சசி மீது, "அய்யோ அதிமுக பவர் செண்டராக சசி இருக்கலாமா?" என திடீரெனப் பாய்வது அவர்களின் நோக்கங்களை பலமாக சந்தேகிக்க வைக்கிறது.
அப்பல்லோவில் மட்டுமல்ல அதற்கு முன்பும் கூட ஜெவின் வாழ்க்கை, அவர் உடல்நலன் சார்ந்த செய்திகள், கொடநாடு ஓய்வுகள் என எல்லாமே ரகசியம் தான். எம்.ஜி.ஆர் பாணியை அப்படியே ஜெ பின்பற்றினார். அதை அப்பல்லோவில் சசிகலாவும் பின்பற்றினார். ஆனால் அப்பல்லோ தகவல்கள் எதையுமே தர இயலாமல் வெட்டியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊடகங்கள் இன்று ஜெ கடைசியாக சசியிடம் இதை சொன்னார், அதை சொன்னார் எனப் புனைவதெல்லாம் அருவெறுப்பின் உச்சம்.
மேலும் தன் மீது உண்மையாக அன்பில்லாத சசிகலாவை ஜெ இத்தனை ஆண்டுகள் தன்னுடைய நிழலாக, முடிவெடுக்கும் அதிகாரமாக, உற்ற உறவாக வைத்திருந்திருப்பார் என்பதை நம்புவதற்கில்லை. ஏனெனில் இவ்வளவு பெரிய கட்சியை கலைஞர் எனும் பிரம்மாண்ட அரசியல்வாதிக்கு எதிராக அரசியல் நடத்தி கட்டியாண்ட ஜெ முட்டாள் கிடையாது என்பதில் எல்லையில்லாத நம்பிக்கை எனக்குண்டு.
இது எல்லாவற்றுக்கும் மேல் ஜெவின் மறைவினால் சசிக்கு பயனேதும் இல்லை. ஏனெனில் சசிகலாவை பொறுத்தவரை ஜெ தங்க முட்டையிடும் வாத்து. அவரை வைத்து ஏற்கனவே அதிகார பகிர்வை அனுபவித்து வந்தவர்தான் ஜெ. அதும் போக ஜெ என்கிற பிம்பம் இருக்கும்வரையே தனக்கு மதிப்பு என்பதையும் சசி நிச்சயம் உணர்ந்திருப்பார். அதற்கு இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு இன்று திடீரென சசி மீது பாயும் ஊடகங்களே சான்று.
மேலும் ஜெ உடல் ரீதியாக மோசமான நிலையில் இருந்ததை அவரது கடைசி சில ஆண்டுகளும், திரைமறைவு வாழ்க்கையும், தொடர் ஹெலிகாப்டர் பயணங்களும், ஃபோட்டோஷாப் படங்களும் நமக்கு நன்றாகவே எடுத்துக்காட்டின. அதுமட்டுமில்லாமல் சசியினால் சிறைப் பறவையாக்கப்பட்டிருந்தால் அதை வெளிப்படையாக அறிவிக்கும் வாய்ப்பு எல்லோரையும் விட ஜெவுக்கு நன்றாகவே இருந்தது.
ஆக, நான் சசிகலாவையும் அவர் குடும்பத்தையும் அப்பழுக்கற்ற உத்தமர்கள் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஜெ மீதான விமர்சனங்கள் எல்லாம் எனக்கு சசி மீதும் உண்டு. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும். ஜெ என்னும் தனி மனுஷிக்கு இருந்த நம்பத்தகுந்த ஒரே உறவு சசிகலா (சசிகலா குடும்பம் அல்ல.. சசிகலா மட்டும்). ஒரே உறவினர் சசிகலா. அவரைத் தவிர வேறு யாருக்கும் ஜெவின் உடலருகில் இருக்க தகுதியோ, உரிமையோ இல்லை என்பதே அவர்களிடையே நிலவிய பலமான உறவின் பார்வையாளனாக என்னுடைய உறுதியான எண்ணம். ஜெவின் மரணத்தால் அவர் தொண்டர்களைத் தவிர இன்னொருவர் பெரும் துயருற்றிருப்பார் என்றால் அவர் சசிகலா மட்டுமே. ஜெ மரணத்தைப் பொறுத்தவரை 'நோக்கம்' (motive) எனப் பார்த்தால் சசிகலா தரப்பிற்கு பூஜ்ஜியம் தான்.
ஆக ஜெவின் வெற்றிடத்தை பெறத்துடிக்கும், அதைப் பற்றி வெளிப்படையாகவே ட்வீட், முகநூல் பதிவுகள் எல்லாம் போட்ட பாஜக தரப்பின் மீதே நம் சந்தேக நிழல்கள் இருக்கவேண்டுமே தவிர சசிகலாவின் மீதல்ல.
அதும்போக அதிமுக இன்றல்ல, எப்போதுமே சசிகலாவின் கட்டுப்பாட்டிலும் சரிபாதி இருந்துள்ளது. அது ஒன்றும் தமிழகத்திற்கும், தமிழக ஊடகங்களுக்கும் புதிது அல்ல. அதனால் இப்போது நாம் கவனம் கொள்ள வேண்டியது அதிமுகவும், தமிழக அரசும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதில்தானே தவிர சசிகலா கட்டுப்பாடு பற்றி அல்ல. அதை முதல்வர் ஓ.பி.எஸ்சின் சுதந்திரமான செயல்பாடுகளுக்குப் பின் பார்த்துக்கொள்ளலாம். இதில் நண்பர்கள், நேர்மையான சமூக/அரசியல்/தமிழக/அதிமுக ஆர்வலர்களும், பொதுமக்களும், இந்தியப் பார்வையாளர்களும் அக்கறையாக கவனமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் மனிதர்கள் புகவே பெரிய இடைவெளி தேவை. பாஜக போன்ற வைரஸ்கள் ஒரு சிறு சந்தேக, தடுமாற்ற இடைவெளியில் கூட புகக் கூடியவை. ஆக நம் முழு ஆதரவும் ஓ.பி.எஸ் தலைமையில் நடக்கும் அதிமுக அரசுக்கு தற்சமயம் தேவை. கவனம்.
-டான் அசோக்
No comments:
Post a Comment