பிரதமரின் டெட்லைன் முடிந்தது.
நக்கலடிக்க, பெட்ரோல்/டீசல் கேன் ஸ்பான்சர் செய்ய, மீம்ஸ்களில் ஒட்ட என எல்லாமும் செய்ய முடியும். ஆனால், நாம் கேட்க வேண்டிய கேள்விகளை அடுக்குவோம்.
1 ) டிச. 30 வரை வங்கியில் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட பணம் எவ்வளவு ?
2 ) டிச. 30 வரை ரிசர்வ் வங்கியால், வங்கிகளுக்கு தரப்பட்ட புதிய தாள்கள் எவ்வளவு ? அதன் மதிப்பு எவ்வளவு ?
3 ) இடைப்பட்ட 50 நாட்களில் இருந்த 2.15 இலட்சம் ஏ.டி.எம்களின் SLA என்ன ? எத்தனை ஏ.டி.எம்கள் இயங்கின ? எவ்வளவு மணி நேரத்திற்கு இயங்கின ? எவ்வளவு மதிப்புள்ள தொகையை மக்களுக்கு அளித்தன ?
4 ) ஏ.டி.எம்களின் உள்கட்டமைப்பினை புதிய தாள்களுக்கு ஏற்றாற்போல மாற்றுவதற்கு நேரமெடுத்தது என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டது. இதுவரை எத்தனை ஏ.டி.எம்கள் புதிய கட்டமைப்போடு வெளியிடப்பட்டிருக்கிறது ? இன்னும் எத்தனை ஏ.டி.எம்களை மாறுதலுக்கு உட்படுத்த வேண்டும் ? அதற்கான கால அளவென்ன ?
5 ) இதுவரை புழக்கத்தில் விடப்பட்ட புதிய தாள்களை அச்சடிப்பதற்கு எவ்வளவு செலவானது ? இன்னும் எவ்வளவு புதிய தாள்களை அச்சடிக்க வேண்டும் ? அதற்கான கால அளவு என்ன ? செலவென்ன ?
6 ) நவ. 10லிருந்து டிச. 30 வரை வங்கியில் வைக்கப்பட்ட, புதியதாக பழைய தாள்களைக் கொடுத்து வங்கியில் சேர்க்கப்பட்ட ரொக்கத்திற்கு என்ன வட்டி தருவீர்கள் ? வட்டியை எப்படி கணக்கிடுவீர்கள் ?
7 ) நாடெங்கிலும் 4,200 கோடிகள் வரை கறுப்புப் பணம் (பழைய, புதிய, கணக்கில் வராத) வருமானவரித் துறையினால் பிடிக்கப்பட்டது என்று செய்திகள் வருகிறது. பிடிபட்டவர்களுக்கு (சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் உட்பட) பணத்தினை யார் தந்தார்கள் ? அதனுடைய சீரியல் எண்களை வைத்து ரிசர்வ் வங்கியால் எந்தெந்த வங்கிகள், கிளைகளுக்கு இந்த தாள்கள் தரப்பட்டதென்று கண்டறிய முடியாதா ? அப்படிக் கண்டறிந்தால் அந்த வங்கிகளுக்கும், கிளைகளுக்கும் என்ன தண்டனை ?
8 ) போலிப் பணம் ஏற்கனவே புழக்கத்தில் வந்து விட்டது. இதற்கு முன்னால் சொல்லப்பட்ட கணக்கில் புழக்கத்தில் இருக்கும் பணத்தில் வெறும் 0.028% அளவு (சற்றேறக்குறைய 400 கோடிகள்) தான் fake currencies என்று சொல்லப்பட்டது. இப்போது வந்திருக்கும் புதிய கரன்சிகளுக்கான போலிப் பணம் இந்தியா முழுக்க பரவ எவ்வளவு நாட்களாகும் ? எத்தனை நூறு, ஆயிரம், இலட்சம் கோடிகள் புதிய போலிப் பணம் வருமென்று அரசு நினைக்கிறது ?
9 ) 50 நாட்கள் தவம் முடிந்தது. எப்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். தமிழ்நாட்டில் 'தை’-க்கு பிறகு தான் ஏராளமான திருமண முகூர்த்தங்கள் வரும். அதற்கு செலவு செய்ய வேண்டும். விதிமுறைகள் தனிநபர், நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் என எப்போது தளர்த்தப்படும் ? அதை தளர்த்தினால் அதை ஈடுகட்டுவதற்கான பணமும், கட்டமைப்பும் வங்கிகளிடத்தில் இருக்கிறதா ?
உங்களுடைய உரையில் இதற்கெல்லாம் பதில் வரும் என்று நம்புகிறோம் பிரதமரே! - நரேன் ராஜகோபாலன்
No comments:
Post a Comment