Narain Rajagopalan
Via Facebook
2016-Dec-19
2017-ற்கான 17 விஷயங்கள்
=========================
Long Read: 1375 Words
1 ) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயினை விற்கும் OPEC அமைப்பும், அதன் சகலபாடி நாடுகளும் தங்களுடைய உற்பத்தியை குறைத்துக் கொள்வதாக சொல்லி இருக்கின்றன. அதாவது உற்பத்தி குறையும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறும். நமக்கு இங்கே பெட்ரோல் / டீசல் விலை ஏறுமுகமாக இருக்கும். பெட்ரோல்/டீசல் விலை ஏறினால் பணவீக்கம் ஏறும். இருக்கிற சூழலில் விலையேற்றம் என்பதை மக்கள் தாங்க மாட்டார்கள்.
2 ) ட்ரம்ப் தலைமையிலான அரசு எப்படி அமையப் போகிறது என்று ஆளாளுக்கு ஒரு ஆரூடம் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்க டாலர் உறுதியாக மேலேறும் என்பது மட்டும் தான் தெரிகிறது. இதுவரை ‘போர்’ என்கிற சொல் ட்ரம்ப் உதிர்க்கவில்லை. ஆனால் வணிக ஒப்பந்தங்கள், பன்னாட்டு வணிகத்திலிருந்து தன்னாட்டு வணிகத்திற்கு (Globalization to Local Jobs) மாற்றுவேன் என்கிற வாக்குறுதியில் தான் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். நாஸ்காம் என்ன லாபி செய்யப் போகிறது, இந்திய அரசு H1B விசா விஷயங்களை எப்படி கையாளப் போகிறது என்பதில் தான் ஐடியில் பொட்டி தட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டத்தின் எதிர்காலம் இருக்கும்.
3 ) பணமதிப்பிழப்பு திட்டத்தினால் ஏற்கனவே இந்த காலாண்டு கோவிந்தா. அடுத்த காலாண்டிலும் பெரியதாக எதுவுமிருக்காது. மத்திய அரசு பட்ஜெட்டினை ஒரு மாதத்திற்கு முன்பாகவே (பிப்ரவரி இறுதிக்கு பதிலாக, ஜனவரி இறுதியில்) முன்வைக்க இருக்கிறது. ஜி.எஸ்.டி எப்படியும் ஏப்ரல் 1, 2017 வரப் போவதில்லை. செப்டம்பர் 15-க்குள் வராமல் போனால் அது constitutional crisis என்று நிதியமைச்சர் சொல்கிறார். Translation: எங்களால் இதை முழுமையான சம்மதத்தோடு கொண்டு வர முடியாது. வராமல் போனால் நாங்கள் பொறுப்பில்லை. ஆக பணமதிப்பிழப்பு, பட்ஜெட், ஜி.எஸ்.டி என வருடம் மும்மாரிப் பெய்ய காத்துக் கொண்டிருக்கிறது.
4 ) உ.பி, பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலத் தேர்தல்கள் அடுத்த வருடம் முக்கியமானவை. கிட்டத்திட்ட பாதியளவு ஆட்சி முடிந்த நிலையில் இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் மத்திய அரசின் ஆட்சிக்கான ரேங்க் கார்டு. இப்போதைய நிலையில் பாஜகவிற்கு பஞ்சாப் கை நழுவிய கதை. உபி வென்றே ஆக வேண்டிய மாநிலம். ஆனால் சமாஜ்வாடி + காங்கிரஸ் என இணைந்தால் நிலைமை டைட்டாக இருக்கும். அப்பா-மகன் சிக்கல் தாண்டி, அகிலேஷ் யாதவிற்கு நல்ல பெயர் தான் இருக்கிறது. மாயாவதியின் பகுஜண் சமாஜ் இந்த தேர்தலில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது. ஆக மும்முனைப் போட்டியில் பாஜக எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறது என்று தெரியவில்லை. இப்போதைக்கு பாஜக அங்கே பலமாக தான் இருக்கிறது. எது எப்படிப் போனாலும், பிரதமருக்கு இந்த ஐந்து மாநிலத் தேர்தலை வெல்ல எல்லா மாநிலங்களுக்கும் டூர் அடிப்பார். டெல்லி காற்று வாங்கும். நாட்டின் முடிவுகள் தடுமாறும்.
5 ) பணமதிப்பிழப்பிற்கு பின்னான கிரெடிட் கார்டு வழி வர்த்தகம் குறைந்திருக்கிறது. அதாவது மக்கள் டெபிட் கார்டில் செலவு செய்கிறார்கள். Translation: தம்மிடையே இருக்கும் பணத்திலிருந்து மட்டுமே செலவுகளை செய்கிறார்கள். அதை தாண்டி செலவு செய்ய யோசிக்கிறார்கள். இது எல்லா வணிக பரிவர்த்தனைகளையும் குறைக்கும். இந்த அதிர்ச்சி தெளிய குறைந்தது 2 - 3 காலாண்டுகளாவாவது ஆகும். அதுவரை டிமாண்ட் கீழே போகும். டிமாண்ட் கீழேப் போனால் பணச்சுழற்சி குறையும். உற்பத்தி கீழிறங்கும். நாம் குறைந்த காலத்திற்காகவாவது ஒரு தற்காலிக ரிசெஷனைத் தொட்டு விட்டு வருவோம்.
6 ) உற்பத்தி குறைவு, தேவைகள் கீழிறங்குவது என்பது நேரடியாக வேலை வாய்ப்பில் கை வைக்கும். புதியதாக உருவாகும் வேலைகள் குறையும். இருக்கும் வேலைகள் குறைக்கப்படும். முழு நேர பணியாளர்கள், பகுதி நேர பணியாளர்களாக மாறும் சாத்தியங்கள் இருக்கிறது. ஸ்மார்ட்டான நிறுவனங்கள் இதை காரணம் காட்டி ஆட்டோமேஷனுக்கு மாறுவார்கள். ஒருங்கிணைக்கப்பட்ட வேலை வாய்ப்புகளிலேயே இது தான் நிலவரமென்றால், மரபு சாரா ஒருங்கிணைக்கப்படாத வேலை வாய்ப்புகள் அதை விட கொடுரமாக கீழிறங்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இது வரை இல்லாத புதிய வகை ஏழ்மை (New class of poverty) உருவாகும்
7 ) கடந்த நவம்பரில் ஏற்றுமதிகளை விட இறக்குமதி அதிகரித்திருக்கிறது. இது கடந்த 16 மாதங்களில் அதிகபட்சம். அதாவது நம்முடைய Trade Deficit மேலேறிருக்கிறது. Translation: உலகமே ஒரு மாதிரியான மந்தமான சூழலில் இருக்கும் போது, நம்முடைய ஏற்றுமதியை வாங்கிக் கொள்ளும் உலகளவு வாடிக்கையாளர்கள் குறைந்திருக்கிறார்கள் அல்லது தயங்குகிறார்கள். உள்நாட்டில் உற்பத்தி செய்தால் செலவினைக் கட்டுப்படுத்துதல் கடினமென்பதால் சல்லிசான இறக்குமதிகள் அதிகரித்திருக்கிறது. இது இப்போதைக்கு எதுவும் செய்யாது. ஆனால் இந்திய ரூபாயின் மீது அழுத்தத்தை உருவாக்கும்.
8 ) கடந்த சில காலாண்டுகளில் மட்டும் பாகிஸ்தானில் சீனா செய்திருக்கும் முதலீடுகள் பல பில்லியன் டாலர்களை தாண்டும். சீனா ஏன் பாகிஸ்தானில் முதலீடு செய்கிறது என்பது கண்கூடு. 2018-இல் இந்தியாவை விட வேகமாக வளரும் நாடாக பாகிஸ்தான் இருக்குமென்று ஒரு அறிக்கை சொல்கிறது. இதனாலெல்லாம் பாகிஸ்தான் திருந்தியதாக நாம் நினைக்க முடியாது. ஆனால், இங்கே வரும் அன்னிய முதலீடு மடை மாறுவதற்கான ஆரம்ப கட்ட சாத்தியங்கள் தெரிகின்றன. பணமதிப்பிழப்பினால் தீவிரவாதம் ஒழியும் என்று சொன்ன கருத்தும் புஸ்வானமாகிவிட்டது. ஆக கஷ்மீரில் தீபாவளி வேட்டு சத்தங்கள் நிற்கப் போவதில்லை. Translation: அமெரிக்க நண்பனை கழட்டி விட்டு, சீன சிநேகிதனை கைப்பிடித்திருக்கும் தெம்பில் பாகிஸ்தான் துள்ளும். நம்முடைய ராணுவ செலவு குறையப் போவதில்லை. புதிய வரிகள் வரலாம்.
9 ) 14.5 இலட்சம் கோடிகளும் வங்கிக்கு திரும்பி, அதை விட மேலாக பல்லாயிரம் கோடிகள் திரும்பினால் அவையெல்லாம் கள்ளப் பணம், போலிப் பணம் தானே என்கிறக் கேள்வி திரும்ப திரும்ப எழுகிறது. அதை முழுமையாக அப்படி சொல்லுதலும் தவறு. ஒவ்வொரு 5 / 10 ஆண்டுகளுக்கு சந்தையிலிருக்கும் தாள்களின் தேவைகளுக்கேற்ப (பழைய, கிழிந்த, பயன்படாத தாள்கள், அல்லது ரொக்கமாக சேர்த்து வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கே வராத தாள்கள்) புதிய தாள்களை (புது சீரிஸ் தாள்கள்) புழக்கத்தில் விடுவார்கள். ஆக இப்போது வந்திருப்பதில் பயன்பாட்டுக்கே வராமல் சேர்த்து வைக்கப்பட்ட ரொக்கமும் வந்திருக்கலாம். I promise to pay the bearer என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்டு இருக்கிறார். ஆக ரொக்கப் பணமென்பது ஒரு promisory note. 14.5 இலட்சமா, அதற்கு மேலா, கீழா என்பதை விட ரிசர்வ் வங்கியின் சமூக கடன்கள் (Social Liabilities) அதிகரித்திருக்கிறது என்பது தான் உண்மை. இது ஏகப்பட்ட குழப்பங்களை உருவாக்கலாம்.
10 ) அதிகப் பட்ச பணம் வங்கிகளிடத்தில் இருப்பதால் வட்டி விகிதங்கள் குறைந்திருப்பது இயற்கையானது. ஆனால் இப்போது வங்கிகளுக்கு வேறு விதமான சிக்கல் உருவாகி இருக்கிறது. இப்போது வந்திருக்கக் கூடிய அதீதப் பணத்திற்கு வட்டிக் கொடுக்க வேண்டுமானால், அந்தப் பணம் யாருக்காவது அதிக வட்டிக்கு தரப்பட வேண்டும். அப்போது தான் வங்கிகளின் லாபம் போக, பணத்தினை வங்கியில் செலுத்தியவர்களுக்கு வட்டி தர முடியும். நிறுவனங்களுக்கு தரலாமென்றால், இந்தியாவின் முக்கால்வாசி நிறுவனங்கள் ஏற்கனவே கடன் சுமையில் இருக்கின்றன. இது தாண்டி, வங்கிகளின் வாராக் கடன் சிக்கல் என்பதே பெரியதாகி இருக்கிறது. பணமதிப்பிழப்பிற்கு பின்னான ஒரு சூழலில் தனிநபர் கடன்கள் கடினம். ஆக ஒரு வேளை நியாயமான Credit offtake சில காலாண்டுகளில் நடக்காவிட்டால் அதீத பணம், அதீத சிக்கல்களை உருவாக்கும்.
11 ) வங்கிகளின் அதீதப் பணத்தினை சந்தையிலிருந்து உறிஞ்ச ஏற்கனவே ரிசர்வ் வங்கி கடன் பத்திரங்களை வழங்க ஆரம்பித்து விட்டது. ஆனால் அப்படி உறிஞ்சப்படும் பணத்திற்கான வட்டியை ரிசர்வ் வங்கி எப்படிக் கொடுக்கும் என்பது முக்கியமான கேள்வி. மேலும் நிதியமைச்சகம் இதற்கு முன் கோட்டை கட்டிய 3 இலட்சம் கோடிகள் windfall gain என்பது காணாமல் போயிருக்கிறது. ஆக பட்ஜெட்டிற்கு வெளியே பணமீட்டலாம் என்கிற நிதியமைச்சரின் கனவில் மண் விழுந்தது. தானே முன் வந்து கறுப்புப் பணத்தினை அறிவிக்கும் திட்டங்களில் (1 & 2) எதிர்ப்பார்க்கப்பட்ட பணமும் வரவில்லை. நாம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு instabilityயை நோக்கிப் போய் கொண்டிருக்கிறோமோ என்கிற பயம் எழாமல் இல்லை.
12 ) நம்முடைய கரன்சி அச்சகங்களின் போதாமை என்பது பட்டவர்த்தனமாக வெளியே வந்து விட்டது. எப்படியாக இருந்தாலும் ஜூன் வரைக்கும் விடிவில்லை. அப்படியே தாள்களை அச்சடித்தாலும் அதை திரும்ப கொண்டு போய் மக்களிடம் சேர்த்தல் வேண்டும். மக்களிடமிருந்து பணத்தினை சேர்க்க 50 நாட்களாயிருக்கிறது. அதை மக்களிடத்தில் எத்தனை நாட்களில் கொண்டுப் போய் சேர்ப்பது என்பது அடுத்த சிக்கல். ஒரு வேளை, அப்படி சேர்த்தால் திரும்ப அவை வங்கிக்கு திரும்புமா என்பது அதற்கடுத்த சிக்கல். மக்கள் இந்த தலைவலியெல்லாம் வேண்டாம், போட்ட பணத்தினை எடுத்து வைத்துக் கொண்டு உள்ளூரிலேயே பணத்தில் பரிவர்த்தனைகள் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டால் அரசு எடுத்த முயற்சி வீணாய் போவது மட்டுமில்லாமல், புதிய parallel economyயினை உருவாக்கியிருக்கும்.
13 ) அதிர்ச்சியூட்டும் பணமதிப்பிழப்பு அறிவிப்பு, தினம் தினம் மாறும் சட்டவிதிகள், தனிநபர் / நிறுவனங்களுக்கான பணமெடுப்பில் மாறும் பாலிசிகள் என அத்தனையுமே உலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. மன் மோகன் ஆட்சியில் Policy Paralysis என்று சொல்லப்பட்டது, மோடியின் ஆட்சியில் Policy Uncertainty என்பதாக மாறியிருக்கிறது என்பதான குசுகுசு பேச்சுகள் சர்வதேச அரங்கில் எழும்ப ஆரம்பித்து விட்டன. உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் இது முட்டாள்தனம் என்று சொன்னப் போதிலும், அதை மாற்றிக் கொள்ளாமல் இன்னும் அழுத்தமாக, மூர்க்கமாக இது இந்தியாவின் நன்மைக்கே என்று பிரசாரம் செய்யப்படுவது டிப்ளமேடிக் வட்டங்களில் ரசிக்கப்படவில்லை. நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக நிறைய தூதரகங்கள் தங்களுடைய நாடுகளுக்கான briefingகளில் இதை குறிக்காமல் விட மாட்டார்கள். இழப்பு நமக்கு தான்.
14 ) உலகம் டிஜிட்டலுக்கு பயணிக்கிறது, நாமும் அந்த ரேஸில் இருக்க வேண்டும் என்பதில் நாம் கோட்டை விட்டுக் கொண்டிருப்பது அடிப்படை கட்டமைப்புகளை. அடிப்படை கட்டமைப்புகள் வலுவாக இல்லாமல், ஆனால் டிஜிட்டல் வழியே தான் பரிமாற்றங்கள் நடைப்பெற வேண்டுமென்கிற கட்டாயப்படுத்துதல் சராசரி மக்களின் வாழ்வில் ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கும். இது தேவையில்லாத அரசு அதிகாரிகள் Vs. மக்கள் என்கிற இருமையை (அந்த இருமை இப்போதும் இருக்கிறதென்றாலுமே கூட) இன்னும் ஆழமாக்கும். இது மக்களின் அரசு, வங்கிகள், நிதியாளுமையின் மீதான அவநம்பிக்கையை இன்னும் பலப்படுத்தும். தன்னுடைய சுகாதாரம் காக்கப்படும் என்று தெளிவாய் தெரிகின்ற டாய்லெட்டுகளையை முழுமையாக ஏற்றுக் கொள்ளாத நாட்டில், டிஜிட்டலுக்கு மாறு என்று திணிக்கப்படும் அரசின் எண்ணம் எந்தவிதமான behavioral change னை உருவாக்கப் போகிறது என்பதை கணிக்க முடியவில்லை. பழக்கவழக்கங்களில் மாறுதல் என்பது ஒரு process, அது இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மாதிரி கிடையாது.
15 ) ஜி.எஸ்.டியின் பிணக்குகள், சரிக்கட்டல்கள், ஜி.எஸ்.டி கவுன்சிலின் உள் அரசியல்களில் ஜி.எஸ்.டி ஒரு வேளை செப். 15 போல் வந்தாலுமே கூட அது ஏகப்பட்ட accounting சிக்கல்களுக்கு வழி வகுக்கும். ஜி. எஸ். டிக்கான இந்தியா / மாநிலங்கள் வரைக்குமான மென்பொருள் இன்னும் தயாராகவே இல்லை. ஆக பல மாநிலங்களில் தொழில் நடத்தும் நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட தலைவலிகள் உருவாகும். ஒரு நாடு, ஒரு வரி என்கிற வசனமெல்லாம் மாறி, பொருட்களுக்கு 6 விதமான (0% - 26%) வரி அடுக்குகள் இருக்கின்றன. இன்னும் சேவைகளுக்கான வரி அடுக்குகளில் உடன் பாடு ஏற்படவில்லை. ஆக எப்படிப் பார்த்தாலும், ஜி.எஸ்.டி வந்தாலும் வரவில்லையென்றாலும் நம்மை பிடித்திருக்கக் கூடிய தலைவலி விடப் போவதில்லை. வணிகர்களின் மத்தியில் இது பெருங்குழப்பத்தையும், அவநம்பிக்கையையும் உருவாக்கும். எதுக்கு இந்த தலைவலி கம்மியா கணக்கு காட்டுவோம் என்று புதுவிதமான ‘கறுப்புப்பணம்’ உருவாகலாம்.
16 ) இந்த முறை இந்தியாவெங்கும் பருவகாற்றுகள் மோசமென்றாலும், போன முறை வந்த பருவக்காற்றுகள் காபாற்றியது. அடுத்த வருடம் பருவக்காற்றுகள் கண்டிப்பாக நன்றாக இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவின் சூழலியல் டேட்டா வரலாறு அப்படி தான் இருக்கிறது. ஒரு வேளை பருவ மழை பொய்த்து விவசாயம் அடி வாங்கினால், 2017 மோசமான விளைவுகளை உருவாக்கும். ஏற்கனவே பணமற்ற சூழலில் வாழும் விவசாயிகளுக்கு தற்கொலையை தவிர வேறு வழியில்லை. இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமெனில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். ஐந்து மாநில தேர்தல் வேறு வருகிறது. ஆனால் அதை செய்தால் பட்ஜெட்டில் துண்டு விழும். பற்றாக்குறை அதிகரிக்கும். Fiscal Responsibility and Budget Management Act (FRBM Act)ன் படி தான் ஜி.டி.பிக்கு எதிரான பற்றாக்குறை விகிதத்தை வைக்க வேண்டுமென்பது கட்டுப்பாடு. அது நடக்காது. அப்படி துண்டு பெரியதாக விழுந்தால் ரேட்டிங் ஏஜென்சிகள் இந்தியாவின் நம்பகத்தன்மையின் மீது கைவைப்பார்கள். எப்படி பார்த்தாலும் இதை கடப்பது தான் toughest challenge
17 ) Last but not the least, பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்புப்பணத்தினை மீட்டோம் என்கிற அரசியல் ஸ்டண்ட் அடிக்கவாவது மோடி அரசு, எல்லாருடைய கணக்கிலும் ஏதாவது ஒரு தொகையை போட்டாக வேண்டும். அப்படி போடாமல் போனால், என்ன கறுப்புப்பணத்தினை மீட்டீர்கள் என்கிற கேள்வி வரும். ஒட்டு விழாது. போட வேண்டுமென்றால், அது பாராளுமன்ற இரு அவை சம்மதங்களும் தேவை. அது இப்போதிருக்கும் சூழலில் கிடைக்காது. அதை சமாளித்து வெறும் ரூ. 1000 போட்டாலே, உள்நாட்டு கறுப்புப் பண மீட்பிலேயே அரசு ரூ. 1000 கொடுக்கிறதென்றால், அன்னிய நாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தினை மீட்டால் இதை விட அதிகமாக கிடைக்கும் என்கிற மக்களின் பேராசை ஹை டெசிபலில் எகிறும். மக்கள் அரசை அழுத்துவார்கள். Modi will be the victim of his own (claimed?!!) success. ஆழமாய் யோசிக்காத ஒரு காரியத்தின் விளைவு எப்பேர்ப்பட்டது என்பதை மோடி அப்போது அறிவார்.
உலக அரசாங்கங்கள் இந்தியா அவ்வளவு சீக்கிரத்தில் மாற விரும்ப மாட்டார்கள். ஆரம்பித்து வைக்கப்பட்ட கேபிடலிஸ ஆட்டம் அவர்களாலேயே முடித்து வைக்கப்படும்.
~ The End ~
No comments:
Post a Comment