Kayvalyam Arivalagan
Via Facebook
2016-Dec-17
வை.கோ ஒரு காலத்தில் தனது தீவிர அரசியல் பணிகளுக்காகவும், எழுச்சி மிகுந்த மேடைப் பேச்சுக்களுக்காகவும் அறியப்பட்டவர், வை.கோவின் சொற்கள் இன்றைக்குக் கல்லெறிந்த இதே தி.மு.க வின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டவை. ஆனால், இனி வரும் காலங்களை அவர் இப்படியான கல்லெறி மற்றும் முற்றுகை நிகழ்வுகளால் தான் கடக்க வேண்டியிருக்கும், ஏனெனில், வெற்றுச் சொற்களைக் கொண்டு கிரேக்கக் கோட்டைகள் கட்டும் கனவுகள் காணுகிற ஏதென்ஸ் நகரத்தின் யூதாஸாக வை.கோ மாறிப் பல காலங்கள் ஆகிறது.
கலைஞர் வீட்டுப் பெண்களை இழிவு செய்து பேசியது, பிறகு சாதிய நஞ்சைக் கக்கிய சமீபத்திய நாதஸ்வர ஏளனம், அப்பல்லோ வாயிலில் நின்று கொண்டு பழைய அரசியல் குப்பைகளைக் கிண்டிக் கொண்டிருந்த வன்மம், சோ.ராமசாமியை அரசியல் வழிகாட்டி, சிந்தனைச் சிற்பி என்று கொண்டாடி வெளியிட்ட அறிக்கை, ஆர்.எஸ்.எஸ் நச்சுப் பாம்புகளுடனான திடீர்க் குலாவல் என்று உணர்வு மயமான திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கு எதிர்த் திசையில் பயணிக்கும் வை.கோ வுக்கு காவேரியில் கிடைத்தது நியூட்டனின் மூன்றாம் விதி.
வை.கோவின் அரசியல் பங்களிப்பு அநேகமாக முடிந்து விட்டது, மக்கள் அவரது புரட்டுக்களை தேர்தல் அரசியலில் துவங்கி எல்லாத் தளங்களிலும் துடைத்தெறிந்து விட்டார்கள், நசிந்த நிலையில் இருக்கும் மக்கள் நலக் கூட்டணி தான் வை.கோ வின் கடைசி அரசியல் புகலிடம். இப்போது அவரிடம் எஞ்சி இருக்கும் பிம்பம் தி.மு.க என்கிற மக்கள் இயக்கம் அவருக்கு அளித்திருக்கிற ஒரு பாதுகாப்புக் கவசம். எதிர்காலம் இரண்டு வாய்ப்புகளை வை.கோ வுக்கு வழங்கலாம், ஒன்று பாரதீய ஜனதாவின் தென்னிந்தியத் தரகராகப் பணியாற்றி ஏதாவது ஒரு மாநில ஆளுநராக ஓய்வு பெறுவது, அல்லது இலக்கிய நிகழ்வுகள், வரலாற்று வகுப்புகள் என்று திராவிட அரிதாரம் கலையாமல் தி.மு.க வின் மீதான வன்ம அரசியல் நாடகத்தைத் தொடர்வது.
வை.கோ மாதிரியான தலைவர்கள் தங்கள் திறன்களையும், ஆளுமையையும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளால் இழந்து தனிமைப்படுவதைப் பார்க்கும் போது இயல்பானதாக, பெரிதாகக் கண்டிக்க ஏதுமில்லாததைப் போல மனம் வேடிக்கை பார்க்கத் துவங்குகிறது.
காவேரியில் வை.கோ வைத் துரத்திய அந்த கைக்கூலிகளை வன்மையாகக் கண்டித்து, அரசியல் நாகரீகத்தை வளர்க்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமாய் இருகரம் கூப்பி உங்களைக் கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன், நன்றி, வணக்கம்.
No comments:
Post a Comment