Thursday, December 15, 2016

பானகல் அரசர்.

Karunanithi G
Via Facebook
2016-Dec-16

டிசம்பர் 16: (1928)

தஞ்சை ராஜராஜ சோழ அரசன் திணித்த சமஸ்கிருதத்தை அப்புறப்படுத்திய திராவிடர் செம்மல் பானகல் அரசர்:

பானகல் அரசர் என அனைவராலும் மதிக்கப்பெறும் பானகண்டி ராமராய நிங்கார், நீதிக்கட்சி ஆட்சியில் 11.7.1921 முதல் 3.12.1926 வரை தமிழகத்தின் (அன்றைய சென்னை மாகாணம்) முதல்வராக பதவி வகித்தவர். இவரது ஆட்சிக் காலம், திராவிடர்களின் பொற்காலம் என சொல்லப்பட வேண்டும்.

இவரது ஆட்சியில் தான்,

1. 1921-ல் வகுப்புவாரி உரிமைக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. அது உடன் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1928 முதல் நடைமுறைக்கு வருவதற்கு வித்தூன்றியது இந்த 1921 வருடத்திய ஆணைதான்.

2. கல்லூரிகளில், பார்ப்பனரல்லாத மாணவர்கள் சேர்ந்து படித்திட, குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் காரணமாக, இம்மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திட வழிவகுத்தார்.

3. தாழ்த்தப்பட்டோரை, ஜாதி அடையாளத்துடன் அழைக்கக்கூடாது; ஆதிதிராவிடர் என அழைக்க வேண்டும் என்பதற்கான ஆணையை 25.3.1922-ல் பிறப்பித்தார்.

4. புதிய பல்கலைக்கழகம் அமைக்க சட்டம் நிறைவேற்றி, இதன் அடிப்படையில் உருவானதுதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

5. பார்ப்பனர்களின் கொள்ளைக் கூடாரமாக இருந்த கோயில்களை, அரசே ஏற்று நடத்திட வகை செய்யும் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றினார்.

6. மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்கிற முறையை ரத்து செய்தார். இதனால், நம்மவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திட வழிவகுத்தார்.

7. முதன் முதலாக சென்னையில் இந்திய மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தி, அதற்காக தனது சொந்த நிலமான கீழ்ப்பாக்கத்தில் இருந்த ஹைட் பார்க் தோட்டத்தை இலவசமாக தந்தார். இன்று நாம் காணும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள வளாகம் முழுவதும், பானகல் அரசர் இலவசமாக தந்ததுதான்.

இத்தகைய சிறப்பான சாதனைகளை திராவிடர் பெருமக்களுக்கு செய்த அந்த தியாகச் செம்மல் மறைந்த நாள் டிசம்பர் 16 (1928)

அவரது மறைவு குறித்து தந்தை பெரியார், மிக ஆழமான நெடியதொரு இரங்கலை தனது குடியரசுப் பத்திரிக்கையில் 23.12.1928 என்று எழுதி வெளியிட்டுள்ளதை அனைவரும் படிக்க வேண்டும். அது இரங்கல் உரை மட்டுமல்ல; அக்காலத்திய நீதிக்கட்சி அரசியல் செய்திகள் அடங்கிய வரலாற்றுப் பெட்டகமாகும்:

“இந்தியாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற அரசியல் இயக்கத்திற்கும் விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலிகளுக்கும் விரோதி, இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான பாமர மக்களுக்கும் விரோதி என்று சொல்லும்படியான நிலையில், நெருப்பின் மேல் நின்றுகொண்டு வேலை செய்வதுபோல் வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர்; இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஓர் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார் நமது தலைவர் பானகல் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும் மிகையாகது என்றே எண்ணுகிறோம்.”

என்று தந்தை பெரியார் இரங்கல் உரையில் தெரிவித்துள்ளது, பானகல் அரசரின் நேர்மையான தொண்டினை, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு உழைத்த மாண்பினை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

வாழ்க பானகல் அரசர்.

https://www.facebook.com/groups/256140787823102/permalink/974012799369227/

No comments:

Post a Comment