Saturday, December 17, 2016

திராவிடக் கட்சி அரசியல் இதுவரை பொதுவெளியில் பேசாத ஒருவரை வந்தடைந்திருந்திருக்கிறது.

Suguna Divakaran
Via Facebook
2016-Dec-17

எப்படியும் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். மேல்மட்டத் தலைவர்களின் அமோக ஆதரவு (?) அவருக்கு இருந்தாலும் அடிமட்டத் தொண்டர்களிடம் சசிகலா தலைமையேற்பதற்கு அதிருப்தி இருப்பதைப்போல் தோன்றுகிறது. ஆனால் குறைந்தபட்சம் இந்த ஆட்சியை ஓராண்டுக்கு மேல் தக்கவைத்துக்கொண்டால் இந்த அதிருப்திகள் மறைந்து சசிகலாவும் ஒரு வலுவான தலைவராக மாறலாம். ஆனால் சசிகலாவுக்கு உண்மையிலேயே தலைமையேற்கும் தகுதி உண்டா? தமிழக அரசியல் நடவடிக்கைகளில் அவரது பங்கு என்ன? தமிழகப் பிரச்னைகள் குறித்து அவருக்கு ஏதாவது கருத்து இருக்கிறதா? இன்னும் சொல்லப்போனால் சசிகலா என்பவரின் குரல் எப்படி இருக்கும் என்றுகூட நமக்குத் தெரியாது. சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆவது அ.தி.மு.க.வுக்கு நல்லதா என்பதைவிட ஒட்டுமொத்தத் தமிழக அரசியலுக்கே நல்லதா என்னும் கேள்விகள் எழுகின்றன. ஆனால் இந்தப் பிரச்னைக்கான அத்தனை வேர்களும் அ.தி.மு.க. என்னும் கட்சியின் கட்டுமானத்திலேயே இருக்கிறது. அதை விமர்சிக்காமல் சசிகலாவை மட்டும் விமர்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

மக்கள்திரள் அரசியலுக்கென்று சில பண்புகள் உண்டு. அவை அத்தனையையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. தகர்த்தே வந்திருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே இருந்த சூழலில் நீர்த்துப்போன அளவிலாவது ஒவ்வொரு கட்சிகளுக்கும் சில கொள்கை அடிப்படைகள் இருந்தன. எம்.ஜி.ஆர் அரசியலில் அமோக வெற்றி பெற்ற காலகட்டம்தான் கருத்தியலின் வீழ்ச்சி காலகட்டம். ‘அரசியலில் வெற்றி பெறுவதற்கு எந்தக் கருத்தியல் அடிப்படைகளும் தேவையில்லை’ என்ற அடிப்படையில் ஒரு பாமர மந்தை அரசியலை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன?’ என்று கேட்டபோது, `அண்ணாயிசம்‘ என்ற எம்.ஜி.ஆர், ‘கொஞ்சம் கம்யூனிசம், கொஞ்சம் கேப்பிடலிசம் சேர்ந்ததுதான் அண்ணாயிசம்’ என்ற வினோத விளக்கம் கொடுத்தார். அவர் வாழும் காலம்வரை அவரை யாராலும் அசைக்கமுடியவில்லை.

அதற்குப்பிறகு ஜெயலிதா தலைமையேற்றபிறகு ’உங்கள் கொள்கை என்ன?’ என்று கேட்பதற்கான அவசியம்கூட எழவில்லை. அவர் எம்.ஜி.ஆரைவிட பல படிகள் முன்னேறிச் சென்றார். எம்.ஜி.ஆர் காலகட்டங்களில் கொள்கைபரப்புச் செயலாளராக ஜெயலலிதாவும் பல கூட்டங்களில் பேசியிருக்கிறார், மாநாடுகளில் பங்கேற்றிருக்கிறார், போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். ஏதோ ஒருவகையில் அ.தி.மு.க.வுக்கே உரிய அரசியல் செயல்பாடுகளையாவது மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் முதல்வரானபிறகு...?

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சியின் குறைகளை மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது, போராட்டங்கள் நடத்துவது, கைதாகி சிறைக்குச் செல்வது, ஆளுங்கட்சியோ எதிர்க்கட்சியோ மாநாடுகள் நடத்துவது, கூட்டணிக் கட்சிகளை இணைத்துக் கூட்டங்கள் நடத்துவது, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணக்கமான உறவைப் பேணுவது ஆகியவையெல்லாம் மக்கள்திரள் அரசியலின் அடிப்படைகள். ஆனால் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதா தி.மு.க.வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்தவில்லை, சொத்துக்குவிப்பு வழக்கைத் தவிர மற்றபடி அரசியல் போராட்டங்களில் கைதாகிச் சிறைக்குச் செல்லவில்லை. பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் மிகச்சொற்பம். தேர்தல் நேரத்தில் மட்டுமே பிரசாரம் செய்தார். ‘கொள்கை இல்லாமலே மிகப்பெரிய அரசியல் வெற்றி பெறமுடியும்’ என்று எம்.ஜி.ஆர் ‘நிரூபித்தார்’ என்றால் மக்களைச் சந்திக்காமல், கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்திக்காமல், ஏன் கட்சிக்காரர்களையே சந்திக்காமலே கட்சி நடத்தி மக்களின் அமோக ஆதரவைப் பெறமுடியும் என்று ‘வெற்றிகரமாக நிரூபித்தார்‘ ஜெயலலிதா. கட்சி அலுவலகத்துக்கே எப்போதாவது வரும் கட்சித்தலைவர் இந்தியாவிலேயே ஜெயலலிதாவாகத்தான் இருக்கமுடியும். இப்படி மக்கள்திரள் அரசியலின் பண்புகளைத் தகர்த்தெறிந்தார் ஜெயலலிதா. இப்போது அடுத்தகட்டம்.

அ.தி.மு.க.வின் தலைமைக்கு வருவதற்கு ஜெயலலிதா செய்த முயற்சிகளைக்கூட சசிகலா செய்யவில்லை. செய்யத் தேவையுமில்லை. இதுவரை அவர் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதெல்லாம் மறைமுகத்தான். அதிலும் காவிரிப்பிரச்னையிலோ ஈழப்பிரச்னையிலோ அ.தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்று தீர்மானித்தவராக எல்லாம் இல்லை. யாரெல்லாம் கட்சியில் இருக்கலாம், யாரையெல்லாம் தூக்கலாம் என்கிற ‘செயல்பாடுகள்’தான் அவரது கட்சி நடவடிக்கைகள். ஒருவர் கட்சித் தலைவர் ஆவதற்குப் போராட்டங்கள் நடத்தவேண்டியதில்லை, அவரது அரசியல் நிலைப்பாடு தெரியவேண்டியதில்லை, பொதுக்கூட்டங்களோ மாநாடுகளோ தேவையில்லை, இன்னும் சொல்லப்போனால் ஒருவருடைய குரல் எப்படி இருக்கும் என்றுகூட தொண்டர்களுக்குத் தெரிய வேண்டியதில்லை என்றளவில் வந்திருக்கிறது அ.தி.மு.க.வின் ‘சாதனை’.

சுயமரியாதையை முன்வைத்த திராவிடத்தின் பெயரால் நடத்தப்பட்ட கட்சியில் சுயமரியாதை இல்லாததே தகுதியானது. இப்போது
பேசிப் பேசியே கட்சி வளர்த்த திராவிடக் கட்சி அரசியல் இதுவரை பொதுவெளியில் பேசாத ஒருவரை வந்தடைந்திருந்திருக்கிறது.

No comments:

Post a Comment