Sunday, December 18, 2016

வைகோவுக்கு என்ன ஆனது..?

Saravanan Savadamuthu
Via Facebook
2016-Dec-17

வைகோவுக்கு என்ன ஆனது..? வர வர அநியாயம் செய்கிறார். தேவையில்லாமல் கோபப்படுகிறார். தன்னைத்தானே கேலிக்குள்ளாக்கி கொள்கிறார். இதெல்லாம் ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதிக்கு அழகல்ல..! சிறுபிள்ளைத்தனமான செயல்கள்..!

காமராஜ் அரங்கத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்தவர் திடீரென்று மேடையில் இருந்து கீழிறங்கி போய் அமர்ந்து கொண்டார். மேடையில் இருந்து திருமாவளவன் "மேல வாங்கண்ணே.." என்று அழைத்தவுடன் கீழே அமர்ந்திருந்தவர் அப்படியே எழுந்து நின்று "நான் பேச வரவில்லை..." என்று சத்தமாகச் சொல்கிறார்..! ஆனாலும் கடைசியாக அரை மணி நேரம் முழங்கிவிட்டுத்தான் போயிருக்கிறார்.

ஆத்தாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி மண்டபத்திற்கு வந்தபோது தேவையில்லாமல் மீடியாக்களுடன் சண்டைக்கு போய்விட்டார்.

'சோ'வின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோதும் இதே பிரச்சினைதான். அஞ்சலியை செலுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றவர் திரும்பவும் 'சோ'வின் உடலைத் தூக்கும்போது அவரது வீட்டுக்கு வந்து வாசலில் நின்றுவிட்டார்.

இனிமேல் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் கதவைத் திறக்காமலேயே வைத்திருந்தார்கள். வெளியில் இருந்து கத்திய பிறகு, உள்ளே தகவல் சொல்லி கதவைத் திறக்கும்படி அனுமதி கிடைத்த பின்பே கதவைத் திறந்தார்கள். இந்த நேரத்தில் அங்கே போக வேண்டும் என்று என்ன அவசியம் வைகோவுக்கு..? அது அவரது குடும்பத்தினர் மட்டுமே செய்யும் நிகழ்வு.. இது கூட தெரியாதா வைகோவுக்கு..!?

அப்படியே இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நினைத்தவர் நேராக சுடுகாட்டுக்கே போயிருக்கலாம். மீண்டும் 'சோ'வின் வீட்டில் இருந்து சுடுகாட்டுக்கு ஊர்வலமாகவே சென்றிருக்கிறார்.. இதெல்லாம் எதற்காக..? இதையெல்லாம் செய்வதால் அவருக்கும், ம.தி.மு.க.வுக்கும் என்ன கிடைத்துவிடப் போகிறது..? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..?

இன்றைக்கு தாத்தாவை பார்க்க காவேரி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். ஏற்கெனவே ஆத்தாவை பார்க்க அப்பலோவிற்கு சென்றவர் அங்கே மீடியாக்களிடம் தேவையே இல்லாமல் தி.மு.க.வை சாடினார். இப்படியெல்லாம் பேசினால் தி.மு.க. தொண்டர்கள் சுமமா இருப்பார்களா..?

இப்போது ம.தி.மு.க. தொண்டர்கள் எத்தனை கொதிக்கிறார்களோ... அது போலத்தானே தி.மு.க. தொண்டர்களும் கொதித்திருப்பார்கள்.

தலைவர்கள் யாரேனும் வாசலில் நின்று தன்னை வரவேற்பார்கள் என்று அவர் எதிர்பார்த்து சென்றிருந்தா்ல், அது நிச்சயம் முட்டாள்தனமானது. அவர்கள் இருக்கும் அவசரத்திலும், பணியிலும் அந்த நேரத்தில், அந்த இடத்தில் வாசலில் நின்று வரவேற்க தேவையே இல்லை.

வைகோ வருகிறார் என்று இணையத்தில் செய்தி பரவியதுமே நிச்சயம் கலாட்டாக்கள் நடக்கும் என்பது தெரிந்ததுதான்.. தொண்டர்களின் மன நிலை தலைவர்களை போல 'கண்டுக்காமல் விடலாம்' என்பதாக இருக்கவே இருக்காது.

ஒரு கட்சியின் தலைவரான வைகோவுக்கு இது தோணவே இல்லையா..? அல்லது நடிக்கிறாரா..?

வைகோ தன்னைத்தானே தரம் தாழ்த்திக் கொள்கிறார். வருத்தமாக இருக்கிறது..!

No comments:

Post a Comment