Saturday, December 17, 2016

இடஒதுக்கீடு

சாதி அடிப்படையில் எதற்கு இடப்பங்கீடு?

இடப்பங்கீடு கொள்கை அறிவியல் அடிப்படையில் உருவாகவில்லை என்ற கருத்தை ஒரு தரப்பினரும், சில நீதிமன்ற சீமான்களும் உருவாக்க முயல்கிறார்கள். இது சரியானதா?

ஸ்ரீ காகா கலேல்கர் ஆணைக்குழு:
1953ல் பிற்படுத்தப்பட்டோர் நிலை பற்றி ஆராய ஸ்ரீ காகா கலேல்கர் ஆணைக்குழுவை இந்திய அரசு ஏற்படுத்தியது. இந்த ஆணைக்குழு கொடுத்த அறிக்கையில் "பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இடப்பங்கீடு அளிக்கப்படவேண்டும்" என பரிந்துரைத்தது.

மண்டல் விசாரணைக்குழு அறிக்கை:
20.01.1978ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு "சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பின்தங்கிய மக்களை அடையாளம் காண" பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் என்ற பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் விசாரணைக்குழு அமைத்தது.

சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் பின்தங்கிய மக்களை அடையாளம் காண 8 அணுகுமுறைகளை இந்த விசாரணைக்குழு கையாண்டது. அது பற்றிய விரிவான தகவல்களை எனது இடப்பங்கீடு சில நியாயங்கள் என்னும் பதிவில் காணலாம். அவற்றில் சில மட்டும் இங்கே:
பேராசிரியர் M.V சீனிவாசன் அவர்கள் தலைமையில் 15 அறிஞர்கள் அடங்கிய குழு அமைத்து நாடு முழுவதும் சமூக, கல்வி நிலை பற்றி கணனி வழியான ஆய்வு.டாட்டா சமூகவியல் நிறுவனம் வழியாக வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாக பிரித்து ஒரு ஒப்பீட்டு ஆய்வு.1891 முதல் 1931 வரையில் சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து, சாதிக்கும், பரம்பரை தொழிலுக்குமான தொடர்பு மற்றும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி விகிதம் கவனத்தில் எடுக்கப்பட்டது.

முறையான அறிவியல் அடிப்படையில் அறிஞர்களால் சமூக ஆய்வு நடத்தப்பட்டது. அரசு துறைகள், தனியார் நிறுவனங்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் என பலரும் ஈடுபட்ட கூட்டு முயற்சி தான் இந்த ஆய்வு. சமூக அறிவியல் ஆய்வின் அனைத்து அம்சங்களையும் கணக்கிலெடுத்தது மண்டல் குழு.

மண்டல் குழு சமூக மற்றும் கல்வி அடைப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வரையறை செய்ய மூன்று அடிப்படைக் காரணிகளை நிர்ணயம் செய்தது. அவை,

சமூக அடிப்படைக் காரணிகள்
கல்வி அடிப்படைக் காரணிகள்
பொருளாதார அடிப்படைக் காரணிகள்

(இது பற்றிய விரிவான தகவலுக்கு இடப்பங்கீடு சில நியாயங்கள் படிக்கவும்)

31.12.1980ல் மண்டல் குழு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடப்பங்கீடு வழங்கப்படவேண்டும் என்ற பரிந்துரை மண்டல் அறிக்கையில் அடங்கும்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த ஆதிக்க சாதியினர் எதிர்த்ததால் மண்டல் அறிக்கையை காங்கிரஸ் அரசு அமல்படுத்த தயங்கியது. தொடர்ந்து 9 ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் ஆட்சியில் வந்த போது மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்தியது. மண்டல் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் வி.பி.சிங் ஆட்சி வந்த போது மண்டல் அறிக்கை கொடுத்த சூழல் மாறவில்லையா?

1990ல் இந்திய அளவில் அரசுதுறைகளில் கல்வியிலும், வேலையிலும் இருந்தவர்கள் பற்றி சண்டே வார இதழில் 1990 டிசம்பர் 23ல் வெளியிட்ட தகவல்கள் இந்த கேள்விகளுக்கு பதில் தரும்.
துணைச் செயலாளர்கள் 500 பேரில் 310 பேர் (62%) பிராமணர்கள்.மாநில தலைமைச் செயலாளர்கள் 26 பேரில் 19 பேர் (73.07%) பேர் பிராமணர்கள்.ஆளுநர்கள் மற்றும் உதவி ஆளுநர்கள் 27 பேரில் 13 பேர் (48.15%) பிராமணர்கள்.உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேரில் 9 பேர் ( 56.25%) பிராமணர்கள்.உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேரில் 166 பேர் (50.30%) பேர் பிராமணர்கள்.தூதுவர்கள் 140 பேரில் 58 பேர் (41.42%) பிராமணர்கள்.பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 98 பேரில் 50 பேர் (51.02%) பிராமணர்கள்.மாவட்ட நீதிபதிகள் 438 பேரில் 250 பேர் (57.07%) பிராமணர்கள்.ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3300 பேரில் 2376 பேர் (72%) பிராமணர்கள்.பாராளுமன்ற லோக்சபை உறுப்பினர்கள் 530 பேரில் 190 பேர் (35.85%) பிராமணர்கள்.பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 244 பேரில் 89 பேர் ( 36.48%) பேர் பிராமணர்கள்.

பெரும்பான்மை இடங்களை அனுபவித்து கொண்டே இதே 1990ல் தான் இடப்பங்கீடை ஆதிக்கசாதியினர் எதிர்த்தனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சாதிப் பிரிவினையால் ஏற்பட்ட பாகுபாட்டை அகற்றி சமூகநீதியை உருவாக்க தானே இந்தியாவில் இடப்பங்கீடு கொள்கை உருவாக்கப்பட்டது. சமூக நீதிக்கான இடப்பங்கீடு கொள்கை ஏன் சாதி அடிப்படையில் அமையவேண்டும்? பொருளாதார அடிப்படையில் அல்லது வேறு விசயங்களை கணக்கிலெடுத்து இடப்பங்கீடு உருவாக்கலாமே என விவாதம் நடக்கிறது. இதை புரிந்துகொள்ள சில அடிப்படை கேள்விகள் அவசியம்.

இந்தியாவின் பாகுபாடு சாதி அடிப்படையில் தானே உருவானது? அதை மாற்ற சாதியை காரணியாக கொள்ளாமல் வேறு எதை காரணமாக கொள்வது?

உதாரணமாக: ஊனமுற்றவர்களுக்கு சமநீதி கிடைக்கவேண்டும் என வைத்துக்கொள்வோம். அதற்கு ஊனத்தை அடிப்படையாக வைத்து தானே திட்டங்கள் இயற்ற இயலும்? பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து தான் திட்டங்களை இயற்ற வேண்டும்; ஊனம், ஊனமின்மை என மக்களுக்குள் பிரிவுகளை ஏற்படுத்தக்கூடாது என்றால் என்ன பொருள்? சாதிப் பிரிவினைகள் இந்தியாவின் சமூக ஊனம். இந்த ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்தில் உரிய இடம் கிடைக்க சாதி என்னும் ஊனத்தை அடையாளமாக இல்லாமல் வேறு எதை அடிப்படையாக வைத்தாலும் அது அநீதியாக தான் அமையும்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இடப்பங்கீட்டில் பொருளாதார காரணி பற்றிய அடுத்த பதிவுகளில்...

No comments:

Post a Comment