Saturday, December 10, 2016

சீனியர் ஆளை அட்ரஸ் இல்லாம பண்ணுவாங்க - கருணாநிதியால் பண்ண முடியாது

// ஜெயலலிதா நெனச்சா யாரை வேணும்னா எப்ப வேணா தூக்குவாங்க,  கட்சியில் முன்னபின்ன தெரியாத ஒருத்தரை மந்திரியாக்குவாங்க,  சீனியர் ஆளை அட்ரஸ் இல்லாம பண்ணுவாங்க ஆனால் கருணாநிதியால் அதுபோல பண்ண முடியாது //

இந்த வார்த்தைகளை தமிழ்நாட்டில் கேள்விப்படாதவர்களே கிடையாது.  உண்மையில் அதுதான் ஜெயலலிதாவின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது.  ஏன் ஜெயலலிதா வால் முடிந்த ஒரு விஷயம் கருணாநிதியால் முடியவில்லை?  ஒரே வார்த்தையில் பதில் சொல்லவேண்டுமென்றால் அவர் கருணாநிதி என்பதே! 

கலைஞர் ஆரம்பத்தில் பெரியாரிடம் சேர்ந்து அரசியல் பயில்கிறார்.  பத்திரிகை நடத்துகிறார்,  எழுதுகிறார் பேசுகிறார். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கிறார்.    அண்ணாவின் அறிமுகம் கிடைக்கிறது.  அண்ணா 1949 ல் தனிக்கட்சி தொடங்கிய பிறகு கட்சிக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி கட்சியை வளர்க்கிறார்.  தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சியின் இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்கள் முன்னணியினர் எல்லோரும் அவருக்கு நேரடியாக பரிச்சயமானவர்கள்.  பொதுக்கூட்டங்களுக்கு போகும்போது அவர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்.  இல்ல விழாக்களில் பங்கெடுத்துள்ளார்.  இப்படியாக அவருக்கு பலருடன் நேரடி பரிச்சயம் இருந்தது.  அதன்பிறகு அண்ணா மறைந்தபிறகு முதல்வராகிறார்.  தொடர்ந்து இத்தனையாண்டுகளாக அந்த கட்சியின் தலைவராக இருக்கிறார்.  இன்றைக்கு புதுக்கோட்டையிலிருந்து ஒரு இளைஞர் அவரை போய் சந்திக்கும்போது அவருடைய அப்பா பெயரை சொல்லி "என்னய்யா உங்க அப்பா எப்படி இருக்காருயா? " என கேட்கிறார் என்றால் அவர் தனது கட்சியினர் எல்லாருக்கும் Importance தருகிறார் என அர்த்தம். 

மாறாக ஜெயலலிதா வின் அரசியல் பிரவேசம் முற்றிலும் வேறானது.  எம்ஜியாரோடு பல படங்கள் சேர்ந்து நடித்து அவருடைய நட்பை பெறுகிறார்.  எம்ஜியார் கட்சி ஆரம்பித்த பிறகு ஜெ வை கூப்பிட்டு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்து எம்பியாகவும் ஆக்குகிறார்.  ஆனால் எம்ஜியார் இருந்தபோது அதிமுகவின் பெரிய தலைவர்களுள் ஒருவராக ஜெயலலிதா இருக்கவில்லை.  எம்ஜியார் இறந்தபிறகு அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிறார்.  இதுதான் ஜெ வின் அரசியல் . கருணாநிதிக்கு ஒரு பெரிய Accountability இருக்கிறது.  அதனால்தான் அவரால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும் யாரையும் தூக்கிப்போட முடியவில்லை. உதாரணத்திற்கு  துரைமுருகன் என்று எடுத்துக்கொண்டால் துரைமுருகன் ஆரம்ப காலத்தில் இந்த கட்சிக்காக என்ன செய்தார்,   அவருக்கும் தனக்கும் ஆரம்பகாலம் தொட்டு இருந்துவருகிற உறவு,  கட்சியிலிருந்து சிலர் வெளியேறியபோது துரைமுருகன் எப்படி தனக்கு பக்கத்துணையாக நின்றார் இப்படி பல விஷயங்கள் அவர் மனதுக்குள் ஓடும்.  இந்த accountability என்பது ஜெயலலிதா விற்கு கிடையாது.  அதனால் தான் அவர் இஷ்டம்போல யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் தூக்கலாம் என்ற வசதியை அவருக்கு தந்தது. 

அந்த accountability இல்லாததால் தான் அவர் தனக்கு பின்னர் கட்சியை கொண்டு செல்ல இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டவில்லை.  இன்றைக்கு சசிகலா அவர் இடத்துக்கு வருகிறார் என்றால் அவருக்கு மட்டும் என்ன Accountability இருக்கப்போகிறது?  ஒன்றும் இல்லை.  ஜெயலலிதா வோடு நெருங்கிய நட்பு.  ஜெயலலிதா மறைந்தபிறகு இவர் பொதுச்செயலாளர் ஆகிறார் . அவ்வளவு தான்.  இவரும் நாளைக்கு யாரை வேண்டுமானாலும் தூக்கியடிப்பார்,  ஒரு சாதாரண தொண்டனை அமைச்சராக்குவார் என பல அதிரடிகள் செய்வார்.  அம்மா வின் அதிரடி என்பது அதிமுகவுக்கோ இல்லை தமிழகத்திற்கோ புதிதா என்ன?  ஏற்கெனவே பழகிய விஷயம் தானே?  என்ன இனிமேல் சின்னம்மா வின் அதிரடிகள் என்று மட்டும் ஒரு "சின்ன " மாற்றம்...!

No comments:

Post a Comment