Monday, June 19, 2017

நேப்கினை ஏன் கருப்புக் கவர்ல சுத்தி குடுக்குறீங்க?

#இந்திரா...!!! ❤️❤️❤️
Via Facebook
2017-06-19

"நேப்கினை ஏன் கருப்புக் கவர்ல சுத்தி குடுக்குறீங்க?" என்று கடைக்காரரிடம் குழப்பமாய் கேட்கும் Phullu திரைப்பட ட்ரெய்லர் கண்ணில் பட்டது. அத்திரைப்படத்திற்கு A சர்டிபிகேட் வழங்கப்பட்டதாக எழுதியிருந்தார்கள். சமூகம் பற்றிய தோலுறிப்புகளுக்கு காலங்காலமாய் கிடைக்கும் வெகுமதிதானே! சரி விஷயத்திற்கு வருவோம்.

உபயோகித்த நேப்கினைத் தூக்கியெறிய பாலிதீன் கவர் தீர்ந்துவிட்டபடியால் கடையில் கவர் பண்டல் கேட்டிருக்கிறாள் மாடி வீட்டுப் பெண். காரணம் கேட்டு கள்ளமாய் சிரித்த கடைக்காரனிடம் என்ன சொல்லி சமாளிப்பதென தெரியாமல் திரும்பி வந்துவிட்டதாக கூறினாள். 'நேப்கின் டிஸ்போஸ் பண்றதுக்குனு சொல்ல வேண்டியதுதானே?' என்றேன். ‘கூச்சமாய் இருக்கு, ரெண்டு கவர் குடுப்பா’ என்று வாங்கிச் சென்றவளை அயர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

டாய்லெட் குழாய்கள் அடைத்துக்கொள்வதால் அபார்ட்மெண்ட்களில், உபயோகித்த நேப்கின்களை எரிக்கும் சாதனம் பொருத்தப்படுவதற்கான முயற்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகளில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை பொருத்தப்பட்டால் அதனுள் நேப்கினைப் போட அந்தப் பெண்கள் அதிகாலையில் எந்த ஆண் கண்களிலும் படாமல் தயங்கியே வருவார்கள் என்றே பட்டது.

மாதவிடாய் காலத்தில் துணிகளை உபயோகித்ததன் எரிச்சல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திரும்பத் திரும்ப துவைத்து, நைந்து கிழியும் வரை அதையே உபயோகித்த காலங்கள் கொடுமையானவை. முட முடவென கிடப்பதை உதறி நீள்வாக்கில் மடித்து கால்களுக்கு நடுவில் வைத்துக் கொண்டு பள்ளிக்கு சைக்கிள் மிதித்த நாட்களெல்லாம் மரண அவஸ்தை.

செளகர்யம் தான் வித்தியாசமே தவிர பொதுவெளியில் அதற்கான தயக்கம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. புதிதாய் வாங்கிய பாக்கெட்டைக்கூட அலமாறியில் வைக்க அப்பா, அண்ணன் கண்களில் படாமல் மறைத்து எடுத்துச் செல்வதில் வெளிப்படுவது கூச்சமா அவமானமா? மீறி வெளியே தெரியும்பட்சத்தில் அவர்களின் முகச்சுளிப்பிலான நம் குற்றஉணர்வினைத்தான் வீடுகள் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றன.

'தீட்டு' என ஒதுக்கிவைக்கப்பட்ட ஆதிகால சம்பிரதாயங்களில் தொக்கி நிற்கும் இத்தயக்கங்களின் இன்னொரு உளவியல் தான் “என் மாதவிடாய் நாட்கள் இதுவென அல்லது இதுதான் நான் உபயோகப்படுத்தும் Brand என மூன்றாமவனின் கண்களுக்கு எதற்காக வெளிப்படுத்த வேண்டும்?" என்ற பதில். இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் கொஞ்சம் யோசித்தோமெனில் “ஆம், அதனாலென்ன?“ என்பதற்கு அவர்களிடம் ஏதேனும் விடை அல்லது விமர்சனம் இருக்குமா?

கீதா இளங்கோவன் தன் ‘மாதவிடாய்’ ஆவணப் படத்தில் மனநலம் பாதித்து சாலையோரம் அமர்ந்திருக்கும் பெண்கள் தன் பாவாடையிலேயே துடைத்துக் கொள்ளும் கொடுமை பற்றி பேசியிருப்பார். அதன் நிஜங்களைக்கூட நக்கலடித்துக் கடக்கும் அந்த வக்கிரக் கண்களைப் பார்த்துத்தான் தயங்கி நம் நேப்கின்களை மறைக்கிறோம் என்பது எத்தனை அறுவறுப்பைத் தருகிறது!

கருபழனியப்பன் சொன்னதைப் போல குவார்ட்டரை சத்தமாக வாங்குபவன் காண்டமை தயக்கமாக கேட்கிறான் என்பதாக இருக்கிறது இப்படிப்பட்ட கருப்புக் கவர் இத்தியாதிகள்.

'ரொம்ப வலிக்குதா?' என கால் பிடித்துவிடும் ஆண்களிடம் பெண்ணியத்தை பிறகு பேசிக் கொள்ளலாம், முதலில் இதுபோன்ற அபத்த சங்கடங்களிலிருந்து வெளியே வருவோம்.

#இந்திரா...!!! ❤️❤️❤️

No comments:

Post a Comment