Thursday, June 8, 2017

நீல நிறக் கண்களும் பழுப்பு நிறக் கண்களும

துணைத் தளபதி மாரக்கோஸ்
Via Facebook
2017-06-08

நீல நிறக்  கண்களும் பழுப்பு  நிறக்  கண்களும்...

ஜேன் எலியட் என்ற  ஆசிரியை 1968 இல்  வகுப்பறையில்  செய்த ஒரு  பரிசோதனை குறித்து சமீபத்தில் படித்தேன். பரிசோதனை உலகப்  புகழ்  பெற்றது. அதை  இங்கு பதிகிறேன்.

ஜேன் இந்த பரிசோதனையை மார்டின் லூதர்  கிங் கொல்லப்பட்ட அடுத்த நாள் வகுப்பறையில் செய்தார்.

குழந்தைகள் நிறத்தின் / இனத்தின் / பிறப்பின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டக்  கூடாது என்பதை வலியுறுத்தும் நோக்கம் கொண்ட பரிசோதனை.

ஜேன்  மாணவர்களை இரு  குழுக்களாய் பிரித்தார்.

1. நீல  நிறக்  கண்கள் உடைய குழந்தைகள்.
2. பழுப்பு  நிறக் கண்கள் உடைய  குழந்தைகள்.

முதலில் நீல  நிற கண்கள் உடைய குழந்தைகளை அவர்கள் செய்ய  வேண்டியது என்னவென்பதை விளக்கினார். அன்று நாள்  முழுதும் அவர்கள் தங்களை உயர்வானவர்களாய் உணர  வேண்டும். பழுப்பு  நிற  கண்கள் உடையவர்களை விட  மேலானவர்களாய் உணர  வேண்டும். விளையாட்டு  மைதானம் அவர்களுக்கு  மட்டுமே. விளையாட்டுப்  பொருட்கள் அவர்களுக்கு  மட்டுமே. குழாயில் நேரடியாய்  நீர் குடிக்கும்  உரிமை  அவர்களுக்கு  மட்டுமே. ஆதிக்கம்  அவர்களுடையது.

அடுத்து பழுப்பு  நிற  கண்கள் உடையவர்களை  அழைத்து செய்ய வேண்டியதை விளக்கினார். அன்று  முழுதும் அவர்கள்  தாழ்வானவர்கள். அவர்கள் முந்தைய  குழுவுக்கு  பணிந்து  நடக்க  வேண்டும். அனைத்து  வேலைகளும் அவர்களே  செய்ய  வேண்டும். குழாய்  நீரை  கப்பில்  பிடித்து  தான்  குடிக்க  வேண்டும். வகுப்பு  இடைவேளை அவர்களுக்கு இல்லை. விளையாட  அனுமதி இல்லை  என்பது  போன்ற இன்னபிற கட்டுப்பாடுகள். பணிவாய்  இருப்பது அவர்களின் கடமை.

மேலும் அவர்களை தூரத்தில் இருந்தும்  தனித்து அடையாளம் காட்ட ஒரு  சட்டைக் கலரையும்  அணியச்  செய்தார்.

பரிசோதனை நாடகம்   துவங்கியது.

நீல  நிறக்  கண்கள்  உடையவர்கள் மிகுந்த  ஆதிக்கத்  தன்மை  பெற்றனர். தங்கள்  வலுவை  ஒவ்வொரு  செயலிலும் நிரூபித்தனர். விளையாட்டில்  ஆதிக்கம். பேச்சில்  ஆதிக்கம். நடவடிக்கையில் ஆதிக்கம். மேலும் தங்களை  மேலானவர்களாய் நிரூபிக்க பழுப்பு  நிறக்  கண்கள் உடையவர்களை  துன்புறுத்த  வேண்டும் என்பதையும் உணர்ந்தனர். துன்புறுத்தலை தங்கள்  இயல்பாய்  உணர்ந்தனர்.

அன்றைய நாள்  முடிந்தது.

அடுத்த  நாள் ஜேன்  பரிசோதனையை தலை கீழாக்கினார். அதாவது நீல நிறக்  கண்கள்  உடையவர்கள் தாழ்ந்தவர்களாகவும் பழுப்பு  நிற  கண்கள்  உடையவர்கள் உயர்ந்தவர்கள் ஆகவும் மாற்றப்பட்டனர். இந்த  தலைகீழ்  மாற்றமே அவரின்  பரிசோதனை வெற்றிக்குக்  காரணம்.

அடையாள சட்டைக்  காலர் இப்போது  நீல  நிற கண்கள்  உடைய  குழந்தைகளிடம். அவர்கள்  இப்போது தாழ்ந்தவர்கள்  ஆயிற்றே.

நீல  நிறக்  கண்கள்  உடைய  குழந்தைகளுக்கு மிகுந்த  அதிர்ச்சி ஏற்பட்டது. தாழ்த்தப்படுவதை நேரடியாய் அனுபவிக்கும்   போது  ஒரு  இயங்க  முடியா நிலை  ஏற்பட்டது. நேற்றுக்கும்  இன்றுக்குமான  வேறுபாடு  அவர்களை  புரட்டிப்  போட்டது. தாழ்த்தப்படுவது   இவ்வளவு  வலிக்குமா என்ற கேள்விக்கு  பதில்  கிடைத்தது. இது  தான் இன்னொருவர்  காலணியை அணிந்து  பார்ப்பதென்பது. மற்றொருவர் இடத்தில் தன்னை  வைத்துப்  பார்ப்பது. மற்றவர்களின் உலகைப்  புரிந்து  கொள்ள நாம்  மற்றவர்களின் இடத்தில் நின்று  பார்க்க  வேண்டும் என்பதை அவர்கள்  அனுபவித்துத்  தெரிந்து  கொண்டார்கள். நிற  வேற்றுமை  பார்ப்பது தவறென்பது  பசுமரத்தாணியாய் பதிந்தது.

இந்த தகவலை David Eagleman எழுதிய  “ The Brain: The story of you “ என்ற  புத்தகத்தில் இருந்து எடுத்தேன்.

புத்தகம் எழுதிய டேவிட் ஈகில்மேன் அந்த  பரிசோதனையில் கலந்து  கொண்ட மாணவர்களை
[ இப்போது  பெரியவர்கள் ]  சமீபத்தில்  சந்தித்துள்ளார். அந்த  மாணவர்கள் நிற  வேற்றுமை பாராட்டுவதில்லை. அன்று கற்ற  பாடம்  இன்றளவும் அவர்கள்  மறக்கவில்லை என்பதை உறுதி படுத்துகிறார்.

இந்த பரிசோதனையை சிறிய  மாற்றங்களுடன் இங்கு  செய்து  பார்க்க  வேண்டும்.

இன்னொருவராய் இருப்பது எவ்வாறு  இருக்கும் என்பதை  உணர குழந்தைகளுக்கு  ஒரு  வாய்ப்பு கொடுக்க  வேண்டும்.

ஒரு  நாள்  பார்ப்பனராய்  ,  ஒரு  நாள் பார்ப்பனரல்லாத உயர்  சாதியினராய் , ஒரு  நாள் தலித்தாய் வாழும்  அனுபவம் எப்படி  இருக்கிறது என்பதை உணர  அவர்களுக்கு ஒரு  வாய்ப்பு அளிக்க  வேண்டும்.

முதல்  நாள் காயத்ரி  மந்திரமும் சந்தியா  வந்தனமுமாய் வாழ்ந்த குழந்தை இரண்டாம்  நாள்  கழிப்பறை  கழுவும்  போது ,  சாக்கடை  அள்ளும்  போது, செருப்பு  தைக்கும்  போது  நிச்சயம்  உணரும்,

“ பிறப்பொக்கும் எல்லா  உயிர்க்கும்   “

No comments:

Post a Comment