Monday, June 19, 2017

GST ஒரு பார்வை

துணைத் தளபதி மாரக்கோஸ்
Via Facebook
2017-06-19

GST ஒரு பார்வை

"ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி"

என்ற முழக்கத்துடன் களமிறங்க உள்ள புதிய சரக்கு மற்றும் சேவைக் கட்டணம் குறித்து ஒரு பார்வை.

1. GST என்றால் என்ன.

அடிப்படையில் இது ஒரு  விற்பனை வரி. விற்பனை வரி என்பதால் இது ஒரு  மறைமுக வரி. மறைமுக  வரி என்பதால் நாட்டின் பெருவாரியாக இருக்கும் ஏழை எளிய  மக்களையும் நடுத்தர வர்க்க மக்களையும் நேரடியாய்  தாக்கும்  ஒரு SURGICAL STRIKE. 

அதன் இயங்கு  முறை புரிந்து  கொள்ள எளியதே. ஒருவர்  100 ரூபாய்க்கு  மூல பொருள்  வாங்கி அதில் அவர்  உழைப்பு  மூலம் 60 ரூபாய்க்கு மதிப்பு  கூட்டி புதிய பொருளை  160 ரூபாய்க்கு விற்கும்  போது அவர்  செலுத்த வேண்டிய வரி   60 ரூபாய்க்கு மட்டுமே.

10 % வரி என்று  கொண்டால் 160 ரூபாய்க்கு ரூபாய் 16 செலுத்த  வேண்டும். ஆனால் அவர்  வாங்கிய மூலப் பொருள் 100 க்கான வரி ரூபாய் 10 அய் கழித்து  விட்டு ரூபாய்  6 கட்டினால் போதும். வரியில்  அவர் கழித்துக்  கொண்ட ரூபாய் 10 INPUT TAX  CREDIT எனப்படும். அவர் செலுத்திய வரி ரூபாய் 6 OUTPUT TAX எனப்படும்.

[ GST is nothing but an ad valorem sales tax on all goods and services with input tax credit.]

விற்பவரும்  வாங்குபவரும் ஒரே  மாநிலத்தைச்  சேர்ந்தவராய் இருந்தால் மாநில  அரசுக்கான SGST  ஐயும் மத்திய  அரசுக்கான CGST ஐயும் தனித்  தனியாய்  கட்ட  வேண்டும்.

இதே வெவ்வேறு  மாநிலமாய்  இருந்தால் மத்திய  அரசுக்கு  மட்டும் IGST  எனப்படும்   INTEGRATED GST  அய் கட்டவேண்டும். இந்த  IGST ஆனது SGST மற்றும் CGST ஆகியவற்றின்  கூட்டுத் தொகையாய்  இருக்கும். அதாவது SGST ஆனது  ரூபாய் 500 ஆகவும் CGST ஆனது ரூபாய் 500 ஆகவும் இருக்கும்  பட்சத்தில் IGST ஆனது ரூபாய் 1000 ஆக கொள்ளப்படும்.

தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட  பொருள்  ஒன்றை கேரளாவில் விற்க  விரும்பினால் உற்பத்தியாளர் IGST அய் மத்திய  அரசுக்குக்  கட்டுவார். உதாரணமாய் 1000 ரூபாய்  கட்டுவதாய் கொண்டால் மத்திய அரசு அதில் மாநில  அரசுக்கான  பங்கான ரூபாய் 500 அய் கேரள அரசுக்குக் கொடுக்கும்.

இதில்  கவனிக்க  வேண்டியது உற்பத்தி  நடந்த  இடமான தமிழ்  நாட்டுக்கு இதில் வரி  வருவாய்  இல்லை. பொருள்  எந்த  மாநிலத்தில் விற்கப்படுகிறதோ அந்த  மாநிலத்துக்கே வரி  கிடைக்கும் [ Destination based tax ].

எத்தனையோ இழந்து தொழிற்சாலைகள் அமைத்துக்  கொடுத்த மாநிலத்துக்கு வரி கிடைக்காது. எந்த  தொழிற்சாலையும் இல்லாத கேரள  அரசுக்கு வரி  கிடைக்கும் வாய்ப்பு  உண்டு. இது குழப்பமே. ஆனால் எப்படியாயினும் மத்திய அரசுக்குக் கிடைக்க வேண்டிய  பங்கு மட்டும் உறுதியாய் கிடைத்து  விடும்.

2. பொருளாதார ஏற்றத்  தாழ்வு.

ஆக்ஸ்பார்ம் அறிக்கை 2014 இல் வெளியிடப்பட்டது. அது ஒரு  வலதுசாரி சீர்திருத்த அறிக்கையே. ஆனால் அதுவும் கூட   ஒரு  சிக்கல்  குறித்து  மிகத்  தீவிரமாய்  பேசுகிறது. ஏழைகளுக்கும்  பணக்காரர்களுக்குமான ஏற்றத்  தாழ்வு கடந்த இருபது  ஆண்டுகளில் சகிக்க  முடியாத  அளவு அதிகமாய் போனது  குறித்து கவனப்படுத்துகிறது. 2014 இல் இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான சொத்து இருந்தவர்களின்  எண்ணிக்கை 66 பேர். ஆனால் அது  அடுத்த  இரண்டு  ஆண்டுகளில் 111 ஆக  உயர்ந்து  விட்டது. இந்த  உயர்ச்சி ஆக்கப்பூர்வமாய்  நடந்தது அல்ல. வறியவர்களை மேலும் வறியவர்களாய் ஆக்கியதால்  நடந்தது.

வறுமை  ஒழிப்புத் திட்டம்  என்பது இந்த  ஏற்றத்  தாழ்வைக்  குறைப்பது  தான். ஆனால் எந்த  ஒரு  மறைமுக  வரியும் ஏற்றத்  தாழ்வை அதிகரிக்கவே  செய்யும். GST ஒரு  மறை  முக  வரியே.

மத்திய  மாநில அரசுகளின் கடந்த  பத்து  ஆண்டுகள் வரி  வருவாயைப்  பாருங்கள். அது மொத்த  உள் நாட்டு  உற்பத்தியில் 16.5 %. அதில் 11 % மறைமுக  வரியாகவும், 5.5 % நேர்  முக  வரியாகவும் வசூலிக்கப் பட்டுள்ளது. அதாவது வரி  வருவாயில் 66 % அளவு  மறைமுக வரி. மிகப்  பெரிய  அயோக்கியத்தனம். இந்தியாவின் 70 ஆண்டு சரித்திரமும் இதை ஒட்டியே உள்ளது.

நேர் முக  வரிக்கும் மறை  முக வரிக்கும் உள்ள வேறுபாடு  முக்கியமானது. நேர் முக  வரி என்பது அதிக  வருமானம்  உள்ளவர்  மீது அதிக  வரியும்,  குறைந்த  வருமானம்  உள்ளவர்  மீது குறைந்த வரியும் விதிக்கபடுவது. வருமானம் அதிகரிக்க அதிகரிக்க வரியின்  அளவு அதிகரிக்கும். PROGRESSIVE TYPE TAX. வருமான  வரி  சொத்து வரி  போன்றவை எடுத்துக்காட்டுகள்.

ஆனால்  மறைமுக வரி  என்பது எல்லோராலும் சமமாய்  கட்டப்படுவது. பற்பசை மீதான  விற்பனை  வரியை அதிகரித்தால் அது ஏழை  பணக்காரர் வித்தியாசம்  பார்க்காமல் அனைவரையும்   ஒரே  மாதிரி  தாக்கும். ஆனால் தன் வருமானத்தில்  இருந்து செலவு செய்து இதை  சந்திக்கும் ஏழை மக்கள் அதிகம் இழப்பர். பொருளாதார ஏற்றத் தாழ்வை  குறைக்க நேர்  முக வரியை அதிகரிப்பதே முறை. அதாவது அதிக  வருமானம் உள்ளவர்களிடம் அதிக  வரி வசூலிப்பதும் அதை ஏழை  மக்களுக்கு புதிய திட்டங்கள் மூலம்   மறு விநியோகம் செய்வதும் ஏற்றத்  தாழ்வைக்  குறைக்க உதவும் வழி  முறைகள்.

3. பறி போகும்  மாநில உரிமை.

GST வரியைத்  தீர்மானிப்பது GST கவுன்சில். அதில் ஒவ்வொரு  மாநிலமும் உறுப்பினர். மத்திய  நிதி அமைச்சர் கவுன்சில்  தலைவர். எந்தப்  பொருளுக்கு வரி விதிப்பது, எவ்வளவு  வரி  விதிப்பது என்பதை இனி    எந்த  ஒரு  மாநிலத்தாலும் தனித்து ஒரு தீர்மானம் செய்ய  முடியாது. GST யின் அடியில் மாநில  அரசுகள் மத்திய  அரசுக்கு ஒரு  வரி  வசூல் செய்யும் வெறும் ஏஜண்டுகள்.

மாநிலத்தின் நிதி சுதந்திரம் மத்திய அரசின்  செருப்பின் அடியில் வைத்து தேய்க்கப்பட்டு விட்டது. செருப்புக்கு அடியில் ஏற்கனவே பலதும்  வந்துவிட்டதை நாம் அறிவோம்.

4. அடிப்படை  வரி  எவ்வளவு ?

GST ஒரு  புதிய  வரி  திட்டம். அது  நடைமுறைக்கு  வந்தவுடன் பழைய  வரி அமைப்பில் வந்த  வருவாயை  விட வரி வருவாய் குறைந்து விடக்  கூடாது  என்பதை கவனத்தில் கொள்வர். அதற்காக கணக்கிடப்  படுவது RNR எனப்படும் REVENUE NEUTRALITY RATE .

RNR எவ்வளவு சதவீதம் வைத்தால் பழைய வரி  வருவாயை  விட அதிகம் கிடைக்கும் என்பதை கணக்கிடுவார்கள். மத்திய  அரசின் ஒவ்வொரு  துறையும் ஒரு பரிந்துரையை  முன்  வைக்கிறது.

சராசரியாய் 20 % இருக்கும் என்று கணிக்கிறார்கள். அதாவது சராசரியாய் 20% வரி வீதம் அதிகரிப்பு.

5. GST இன் இன்னொரு  விளைவு.

மக்கள் துன்பப்படுவார்கள். பொருளாதார ஏற்றத்  தாழ்வு அதிகரிக்கும். உற்பத்தி குறையும். இதற்க்கு பொருளியல்  பாடத்தில் விளக்கம்  உண்டு. வரி அதிகரிக்கும்  போது மக்களின் வாங்கும் முனைப்பு [ PROPENSITY TO CONSUME ] குறையும். அது பெருக்கியின் [ MULTIPLIER ] விளைவால் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பையும், வெளியீட்டையும்  குறைக்கும். இதனால் எல்லாம் ஏற்படும் வருவாய்  இழப்பைத்  தவிர்க்கும் அளவுக்கு  வரி  வீதம் ஏற்றப்படும். எனவே ஒட்டுமொத்த விலை வாசியும் ஏறும்.
ஒட்டு  மொத்த  தேவைக்  கோடு வலப்புறமாய் கீழ்  நோக்கி  சரிவதைக் [ NEGATIVELY SLOPING AGGRREGATE DEMAND CURVE ]  கணக்கில்  கொண்டால், விலை  ஏற்றத்தால்   உற்பத்தியும்  வேலை  வாய்ப்பும் தன்  முழு  அளவை எட்டாமலேயே  நிற்கும்.

6. வரி  ஏய்ப்பு சாத்தியமில்லையா ?

வரி  ஏய்ப்பைத் தவிர்க்க GST வேண்டும்  என்று  சொல்வது அறியாமை. வரி  ஏய்ப்பு நடக்க  அடிப்படைக்  காரணம் ஊழல். அதை  சரி  செய்யாமல் வேறு எந்த  முயற்சியாலும் வரி ஏய்ப்பை  தவிர்க்க  முடியாது. திறமையான ஊழலற்ற நிர்வாகத்தால்  மட்டுமே வரி ஏய்ப்பைத்  தடுக்க  முடியும்.

மாநில  அரசுகளை  விட  மத்திய  அரசு வரி  விதிப்பில் கெடுபிடி  காட்டும். அதனால் GST இல் வரி ஏய்ப்பு கடினம் என்ற கருத்து  சொல்லப்படுகிறது. இது  ஆதாரமற்ற ஒரு வெற்றுக்  கருத்து. மல்லையா சாட்சி. அம்பானி  சாட்சி.

வரி  வீதத்தை  அதிகரிக்கும்  போதே மக்களிடம் வரி ஏய்ப்புக்கான தூண்டலும் உருவாதை  தவிர்க்க  முடியாது. மேலும்  பல  வித  வரிகளை  ஒன்று  சேர்த்து ஒரு  முனையாக்கும்  போது வரி  ஏய்ப்பு ஒரு  முனையில் செய்தால்  போதுமே.

7. சுலோகம்  தரும் மயக்க  உணர்வு.

“ ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே வரி “

இந்த சுலோகத்தைப் பாருங்கள். அது ஒரே  விலை என்ற தவறான மயக்க  உணர்வைத்  தருகிறது. பொய் . ஒரே  விலை  என்பதெல்லாம் இல்லை. GST ஒரே வரியைத்  தான்  உறுதிப்   படுத்துகிறது. பொருட்களின்  விலை வழக்கம்  போல் இடத்திற்கு  இடம் வேறுபடவே  செய்யும்.

தகவல்கள் : Article by Surajit Das , Jawaharlaal Nehru University, Delhi மற்றும்  ஆக்ஸ்பார்ம் அறிக்கை, க்ரியா வெளியீடு மற்றும்  இணைய கட்டுரைகள்.

No comments:

Post a Comment