வாசுகி பாஸ்கர்
Via Facebook
2017-06-08
பிரம்மச்சரியம்
மயில் உறவு கொள்ளாது பிரம்மச்சாரி, ஆகையால் அது புனிதம் என்கிற நீதிபதியின் அறிவுக்கு ஒவ்வாத கருத்தை நையாண்டி செய்து நாம் கடந்து வந்து விட்டிருந்தாலும், பிரம்மச்சரியம் என்பதை குறித்து புனையப்பட்டுள்ள புனித தன்மையின் வெளிப்பாடே அது. அந்த புனித தன்மையை உடைத்தெறிய கருத்தியல் ரீதியாக அன்றி யதார்த்தத்தையும் நிறுவ வேண்டும்.
ஹிந்து மதத்தில் மட்டுமல்ல, கிருஸ்துவத்திலும் குடும்ப வாழ்க்கையை தேர்ந்து எடுக்காமல் பிரம்மச்சாரியாக வாழும் பாதரியார்களிடம் மண்டி இட்டு பாவ மன்னிப்பு கேட்கும் சூழலையும், சக மனிதரில் இருந்து மேன்பட்டவர் என்கிற கருத்துருவாக்கமும் செய்யப்படுவதற்கு இந்த பிரம்மச்சரியம் முக்கியமானதாக இருக்கிறது.
வாழ்க்கை துணையை தேர்ந்து எடுக்காமல் தனித்து வாழ்வது ஒருவரின் தனிப்பட்ட தேர்வாக இருக்கும் வரை நாம் அவர்களின் அந்த முடிவை விமர்சன படுத்த முடியாது. காரணம், அவருக்கு ஏன் ஒரு துணை தேவை பட்டிருக்கவில்லை என்பதற்கான காரணத்தை அறிவது கூட அநாகரீகம் என கருதுகிறேன் நான். காரணம் எதுவாகினும், ஒருவர் தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டுமென்பது அவரவர் சுதந்திரம்.
இதுதான் ஒரு பக்குவப்பட்ட மனநிலை, உண்மை இப்படியிருக்கு, துணை ஏதும் இல்லாமல் வாழ்வது எப்படி புனிதத்தின் குறியீடாக ஆக்கப்பட்டது என்றால், ஆணுடனோ, பெண்ணுடனோ உடல் ரீதியாக கலப்பதை உலகத்தின் ஆக சிறந்த போதையாக உருவாக்கப்படுத்திருக்கிறது. இயற்கையான உடல் தேவையை நிராகரிப்பது, அதுவும் பெண்ணை நிராகரிப்பது, ஒரு சாதாரண மனிதன் செய்ய கூடியது அல்ல, அதை ஒருவன் கடந்து வருகிறான் என்றால் அவன் மேன்மையானவன் என்கிற எண்ணம் இங்கே சித்தரிக்க பட்டிருக்கிறது.
இந்த சித்தரிப்புகள் மூலம் ஒருவர் புனிதமாகிறார், ஆனால் ஒரு பெண்ணையோ, ஆணையோ ஒருவன் எந்த காரணத்திற்காக விலக்கி வைக்கிறான், அது எந்த அளவு சாத்தியம், அப்படி சாத்தியப்படுத்துவதால் வரும் எதிர்வினைகள் என்ன என்பதை மனசாட்சிக்கு உட்பட்டு ஒருவன் எழுதினாலே ஒழிய, புறத்தில் இருந்து நின்று கொண்டு ஒருவர் அதை கடந்து வந்து விட்டார் என்று நாம் தீர்மானிக்க முடியாது, வெறும் நம்பிக்கையின் பெயரிலையே ஒருவரை பிரம்மச்சாரி என நம்புகிறோம்.
இளம் வயதில் பிரம்மச்சரியம் பூண்டு, ஊர் உலகமே கடவுளுக்கு இணையாக பார்க்கப்படும் பாதிரியார்கள் மீதான பல்லாயிரக்கணக்கான பாலியில் வழக்குகள், கால இடைவெளியில் இங்கே அவ்வப்போது சிக்கி கொள்ளும் சாமியார்கள் என்று இயற்கைக்கு முன்னே பிரம்மச்சரியம் மீறி தோற்கிறது. கேமரா, செய்தி, பரபரப்பு வருவதற்கு முன் இருந்த காலங்களில், இத்தகைய ஊடக வசதி இல்லாத காரணத்தினாலே பலர் புனிதர்களாக வாழ்ந்து விட்டு போய் விட்டார்கள் என்று தான் நம்மால் பொதுமை படுத்த முடியும்.
அதையும் மீறி ஒருவர் பிறந்த கணம் முதல் இறக்கும் தருவாய் வரை, ஆணை / பெண்ணை தொட்டும் பார்க்காமல் இறக்கிறார் என்றால் அதையும் இங்கே புனிதப்படுத்துவதற்கு இல்லை. காரணம் செக்ஸ் என்பது வரையறுக்க முடியாதவையாக இருக்கிறது, மனித மூளையின் பரிணாமத்தில் pleasure என்பதற்கு ரொம்பவே முக்கியவத்தம் கொடுக்கும் பிராணியாக நாம் வளர்ந்து விட்டு இருக்கிறோம். ஒரு ஐஸ் கிரீம் சாப்பிடும் போது மேலே இருக்கும் செர்ரி பழத்தை மட்டும் தொடாமல் அதை பார்த்து கொண்டே முழு ஐஸ் கிரீமை உண்ட பின் அதை கடைசியாக சாப்பிடும் வழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பிடித்ததை நியாயமாக முதலில் சாப்பிட்டு விட வேண்டும், ஒரு ஐஸ் கிரீம் முழுவதையும் சாப்பிடும் வரை ஒருவன் தனக்கு பிடித்ததை சாப்பிட தள்ளி போட்டுக்கொண்டே கடைசியாக சாப்பிடுகிறான் என்றால், அந்த ஐஸ் கிரீம் சாப்பிடும் வரை, அந்த செர்ரியின் இருப்பு அவனுக்கு ஒருவித மயக்கத்தை கொடுத்திருக்கிறது, இந்த மாதிரியான வினோத மனநிலை கொண்டவன் தான் மனிதன்.
ஒரு பெண் இல்லாமல் ஒருவன் வாழ்கிறான் என்றால், அவனை பூரணப்படுத்தும் கருவி அவனாகவே கூட இருக்கலாம். ஆண் / பெண் / இருவரும் / சுயம் / கஜிராவோ சிற்பங்களில் மிருகங்கள் என்று மனிதனின் தேவைகள் மாறிக்கொண்டே இருக்கிறது, ஒருவேளை அதை கட்டுப்படுத்தும் பயிற்சி எடுத்திருந்தால் கூட அதில் புனிதப்படுத்துவதற்கோ, மெச்சி கொண்டாடுவதற்கோ, மண்டியிட்டு வணங்குவதற்கோ என்னவிருக்கிறது?
குடும்ப வாழ்க்கையில் எத்தனை முறை காமத்தை வென்று வந்திருக்கிறோம் என்று நாம் யோசித்து இருக்கிறோமா? மாதவிடாயின் போது, துக்க நிகழ்வின் போது, சோகத்தின் போது, கோவத்தின் போது, குழந்தைகள் இருக்கும் போது, பிள்ளை பெற்ற போது, பசியில் இருக்கும் போது, தூக்கமில்லாத போது, சோறில்லாத போது, என்று நாம் அன்றாட வாழ்வில் பிரம்மச்சரியம் என்பது ஒரு நிலையாக நம்மை அவ்வப்போது ஆட்டுவித்து கொண்டு தான் இருக்கிறது. அதை நம்மால் கட்டுப்படுத்த முடிகிறது என்றால், அதை விட வேறு ஒரு உணர்வு நம்மை தற்காலிகமாக ஆட்சி செய்வதால் தான் நம்மால் கடந்து வர முடிகிறது, பின்னே இதே போல வருடம் முழுவதும் நான் பிரமச்சாரி என்று சொல்லி கொள்கிறவர்களையும் வேறு ஒரு உணர்வு ஆட்சி செய்வதால் தானே அவர்களும் கடந்து வந்து விட்டதாக சொல்கிறார்கள்? இதில் புனிதப்படுத்தி கொண்டாட என்ன இருக்க கூடும்? Priorities மாறுகிறது அவ்வளவே.
கிடைக்க பெறும் ஒருவன் அருகில் துணையோடு இருக்கும் போதே அவ்வப்போது பிரம்மச்சரியத்தை கடை பிடிக்கிறான் என்றால், மனநிலையை கட்டுப்படுத்துவதற்கான திடமான மனம் அவனுக்கு இருக்கிறதா, அருகில் இருந்தால் மனம் மாறிவிடும் என்று விட்டு ஓடுபவனிடம் இருக்கிறதா?
எல்லா மனித உடலின் உணர்வுகளை போல காமம் ஒரு அங்கம் என்று இருப்பவனின் மனம் திடமான மனநிலையா, காமம் நம்மை விழுங்கி விடும் என்று ஓடும் மனநிலை திடமான மனநிலையா?
இம்மாதிரியான விவகாரங்களில் தெளிவில்லாமல் புனித தன்மையோடு சக மனிதனை அணுகுவது ஒரு மாயை என்பதை உணர வேண்டுமானால் மனிதன் வானத்தில் இருந்து குதித்த அபூர்வ உயிரினம் இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
ஹால்ஸ் மிட்டாய் உறையை விரல்களால் கிழிக்கும் முயற்சியில் தோல்வி கண்டதும் தானாக அதை கிழிக்க பற்களால் முயற்சி செய்ய வாய் அருகில் கொண்டு போவதில் இருக்கிறது மனிதனுக்கும் மிருகங்களுக்குமான பரிணாம தொடர்பு. எல்லாத்தையும் போல செக்ஸ் என்பதையும் அதீத pleasure ஆக்கி அதை நாம் கலையாக சித்தரித்து வைத்திருந்தாலும், உறவு கொள்ளல் முறைகள், நீட்டித்தல், positions என எல்லாமே நாம் விலங்குகளிடம் இருந்து கற்றுகொண்டவை, அல்லது அங்கிருந்து தொடர்ந்து வந்தவை.
நிறம் பார்க்காமல் இருட்டில் திருடிய காவி துணியை உடுத்தி ஒருவன் படுத்திருந்த போது, அவனை விடிந்து பார்த்தவர்கள் சாமியார் என்று நினைத்து வழி பட்டார்களாம், அவனும் அதனால் சாமி ஆகி விட்டானாம் என்பதை போல, இங்கே பல பேர் பல காரணங்களுக்கு சாமியார் ஆகி இருக்கிறார்கள். பெண்ணை பார்த்தால் எனக்கு எந்த உணர்வுமே வர மாட்டேன் என்கிறதும் ஒரு தன்மை தான், அந்த நேர்மையோடு பெண் ஜோடியை தேடிக்கொள்ளாமல் அவன் பாதையை அவன் வகுத்து வாழ்வது அவனின் தனிப்பட்ட சுதந்திரம், ஆனால் அதையே புனிதப்படுத்தி கொள்ளும் போது நாம் இவ்வளவு எழுத வேண்டியிருக்கிறது.
புனிதம் என்று ஒன்றை நீங்கள் நம்பும் வரை, மறைமுகமாக யாரோ ஒருவரை, ஏதோ ஒன்றை உங்கள் மனம் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தி கொண்டே இருக்கிறது.
No comments:
Post a Comment