Friday, June 16, 2017

சாப்பிடாம படுக்குற அளவுக்கு ஒரு குழந்தைக்கு கஷ்டம் இருக்கும் போது, அத தீத்து வைக்காம எப்படி தூங்குவோம் சொல்லு

Vijay baskervijay
Via Facebook
2017-06-16

அம்மா மேல ஏழாம் வகுப்பு படிக்கிற லதாவுக்கு பயங்கர கோபம்.

சாயங்காலம் ஸ்கூல்ல வந்து அம்மா பிக் அப் பண்ணும் போது லதாவுக்கு ரொம்ப சந்தோசமா இருந்திச்சி.

வழக்கமா பாட்டிதான் வருவாங்க. அன்னைக்கு அம்மா வந்திருக்காங்க.

அம்மா வந்தாலே எங்கையாவது ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்கி தருவாங்க. அந்த ஸ்னாக்ஸ் சாப்பிடுறத விட அம்மா கிட்ட பேசிகிட்டே அந்த சூழ்நிலைல ஸ்னாக்ஸ் சாப்பிட பிடிக்கும்.

அப்படித்தான் நடக்கப் போகுதுன்னு நினைக்கும் போது அம்மா எந்த கடையிலையும் நிறுத்தல. நேரா வண்டிய வீட்டுக்கு விட்டுட்டாங்க.

லதா இறங்கினதும் அம்மா ஹார்ன் அடிச்சாங்க.

பாட்டி வந்தாங்க.

“அம்மா லதாவா பாத்துக்கோங்கம்மா. ”நான் என் ப்ரெண்ட் லூர்துவ பாத்துட்டு வர்றேன்” ன்னு கிளம்பும் போகும் போது லதா ஆச்சரியமா பாக்குறா.

”அம்மா நானும் வர்றேன்னு” லதா சொல்லும் போது அம்மாவோட பைக் தெரு முனையத் தாண்டி போக ஆரம்பிச்சாச்சு.

லதாவுக்கு பயங்கர கோபம்.

எதுவும் சாப்பிடல. டீசாப்பிடல. பாட்டி கொடுத்த பிஸ்கட் சாப்பிடல. என்னாச்சுன்னு பாட்டி கேட்டா பதில் சொல்லல.

நைட் ஒன்பது மணிக்கு அம்மா வர்றாங்க. லதா முகத்த உம்முன்னு வெச்சிட்டு இருக்கா.

நீ சாப்பிடலையான்னு அம்மா கேட்டதுக்கு பதில் இல்ல. அம்மா பாட்டிக்கிட்ட என்னன்னு கேட்டா பாட்டி தெரியலங்குறாங்க.

இன்னும் இரண்டு தடவ அம்மா கேட்டாலும் லதா பதிலே சொல்ல. சரின்னு அம்மா விட்டாச்சு. அடுத்து அப்பா வர்றாரு.

அவரு கேட்டாலும் லதா பதில் சொல்லல.

சரின்னு அம்மாவும் அப்பாவும் தூங்குறா மாதிரி தூங்கப் போறாங்க.

லதா ஒரு பெட்ட எடுத்து ஹால்ல போடுறா. போட்டு அங்க படுத்துக்குறா.

நீ பெட்ரும்ல எங்க கூட படுக்கலையான்னு கேட்டா பதிலே சொல்லல.

நைட் பத்து மணி எல்லாரும் படுத்தாச்சி.

லதா சாப்பிடல.

அம்மாவும் அப்பாவும் அதிகம் என்னன்னு கேக்கல.

அப்போ இருட்டுல ஒரு உருவம் வருது. அது லதாவோட அப்பாதான்

அவரு வந்து “யம்மா யம்மா யம்மா உனக்கும் அம்மாவுக்குதான் சண்டை . நான் என்ன தப்பு செய்தேன். நான் இங்கேயே படுத்துகிறேன்பான்னு பொண்ணு பக்கத்துல வந்து படுத்துகிட்டு டிவிய ஆன் பண்ணுறாரு.

அப்பா கூட வந்து படுத்தது லதாவுக்கு கொஞ்சம் ஆறுதல்.

அப்பா சமாதானப்படுத்த வர்றாருன்னு தெரிஞ்ச உடனே அவளுக்கு நிம்மதியா இருக்கு.

ஆனா என்ன டெக்னிக்க உபயோகப்படுத்தி சமாதானம் பண்ணப் போறாருன்னு லதாவுக்கு தெரியல.

என்ன சொன்னாலும் சமாதானமாகக் கூடாதுன்னு வெறியா நினைச்சிக்கிறா.

அப்பா எதுவுமே பேசல. டிவில “ஜூராசிக் பார்க்” படம் ஒடிட்டு இருக்கு.

சுவாரஸ்யமா இருக்கு. லதாவும் படத்த இண்டிரஸ்டா பாக்குறா. பாக்கும் போதே சொல்றா

“அப்பா போன வருசம் அக்கா ஊர்ல இருந்து வந்தாங்கல்ல, அவுங்களும் நானும் இந்தப் படத்த பாக்கும் போது தம்பி வந்து கார்ட்டூன் பாக்கனும்னு சொல்லி சேனல மாத்திகிட்டே இருந்தான்.” இது லதா.

”ஒ அப்படியா “ இது அப்பா

“ஆமாப்பா தம்பி ஒரே தொல்ல. நானும் அக்காவும் செஸ் விளையாடினா. அவனும் விளையாடுவேன்னு அடம் பிடிச்சான்”

“ம்ம்ம்”

“நானும் அக்காவும் ஜாலியா ஃபிஷ் டேங் கிளீன் பண்ணினா அவனும் பண்ணுவேன்னு அடம் பிடிச்சான்”

“சின்னப் பையன்தான ஒண்ணாங்கிளாஸ்தான படிக்கிறான் அதனால அப்படி இருப்பானா இருக்கும்.

“ம்ம்ம். எனக்கும் அவன ரொம்ப பிடிக்கும். ஆனா நானும் அக்காவும் எங்களுக்குள்ள சில விஷயம் பேசுவோம். அது எல்லாமே அவனுக்கு தெரியனும்னு கேப்பான். அப்பதான் கடுப்பா இருக்கும்” இப்படி சொல்லிட்டு லதா இடது பக்கம் திரும்பி பாக்கும் போது அங்க ஒரு உருவம் படுத்துகிடக்கு. அது லதாவோட அம்மாதான்.

“ஏய் நீங்க போங்க. உங்க கூட நா சண்டை”

“ஏன் நீயும் அக்காவும் பேசும் போது தம்பி வந்து பேசினா அது உனக்கு தொந்தரவு. ஆனா என் கூட காலேஜ் படிச்ச பொண்ணு, பதினைஞ்சு  வருசம் பிறகு மீட் பண்ணப் போற நெருக்கமான ஃப்ரெண்ட்ப் பாக்கும் போது மட்டும் நீ வருவியோ” இது அம்மா.

“உங்கம்மா சொல்றதுல பாயிண்ட் இருக்கோ. அட இல்லியோ. எனக்கோ குழப்பமா இருக்கே. கொஞ்சம் யோசிப்போம்” இது அப்பா.

லதாவுக்கு ஏதோ புரியுது.

இப்ப அம்மா பக்கத்துல வந்து லதாவ அவுங்க நெஞ்சு பக்கத்துல வந்து அணைச்சி படுத்துக்கிறாங்க. படுத்துட்டு சொல்றாங்க “நான் காலேஜ் படிக்கும் போது லூர்துவ பாத்தது. அப்ப நாங்க இரண்டு பேரும் ரொம்ப பிரெண்ட்ஸ். அதுக்கப்புறம் அவள இப்பதான் மீட் பண்றேன். அப்ப எங்களுக்குள்ள பேசுறதுக்கு எதுவுமே பேசுறதுக்கு இருக்காதா. நிறைய பர்சனலா பேசுறதுக்கு இருக்கும்தான. அப்ப நீ சின்னப் பொண்ணு பக்கத்துல உக்காந்துட்டு இருந்தா எங்களுக்கு ஃப்ரீயா இருக்குமா”

”இருக்காதுன்னு நினைக்கிறேன். இந்த பொண்ணுக்கு போரடிக்குமேங்கிற கவலை இரண்டு பேருக்கும் வந்திரும். அப்புறம் அவள சமாதானப்படுத்துறதுக்காக அவகிட்ட பேச வேண்டியதிருக்கும். அப்புறம் சில விஷயம் பேசிச் சிரிக்க வெக்கமா இருக்கும். பொண்னு என்ன நினைப்பாளோன்னு இருக்கும். இப்படி பல சிக்கல் இருக்கு” இது அப்பா.

“நான் இருக்கும் பேசுறது அப்படி என்ன வெக்கமான டாப்பிக் உங்களுக்கு “ இது லதா

“உதாரணத்துக்கு சொல்லவா. நானும் லூர்துவும் காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் பொது வெளிய வெச்சிருக்கிற கூல்டிரிங்ஸ் பாட்டில்ல ஒண்ண திருடினோம். அதப் பேசி உன் முன்னால சிரிக்க முடியுமா. உனக்கு சின்ன வயசுல இருந்து திருடக்கூடாதுன்னு சொல்லி வளத்திருக்கிறேன். நீ என்ன நினைப்ப. அம்மா திருடிக்கிறாங்களேன்னு நினைப்பதான. ஆனா அந்த சம்பவம் எனக்கும் லூர்த்துக்கு மட்டும் நடுவுல இருக்கிற நினைச்சி பார்த்து ரசிக்க கூடிய விஷயங்கள். உனக்கு புரிதுதானே மோளே” ஒது அம்மா.

லதாவுக்கு புரியுது. அம்மா ஏன் தன்ன விட்டுட்டு போனாங்கன்னு புரியுது. மெல்ல அவ அம்மாவ அணைச்சிக்கிறா.

அம்மா தொடர்ந்து பேசுறாங்க

“லூர்த்துவுக்கு உடம்புல கொஞ்சம் பிரச்சனை இருக்கு. எனக்கு கூட உடம்புல கொஞ்சம் பிரச்சனை இருந்து சரியாச்சு. இதப் பத்தியெல்லாம் நாங்க விசாரிச்சோம். உன்னப் பக்கத்துல வெச்சிட்டு அத செய்ய முடியுமா. நான் லூர்த்து கன்னத்த தொட்டு சமாதானப்படுத்துவேன். அவ  எனக்கு எதாவது ஒரு விஷயத்துல ஆறுதல் சொல்லுவா. இந்த செண்டிமெண்ட் ஸீன் எல்லாம் உன்ன வெச்சிட்டு செய்ய அம்மாவுக்கும் லூர்த்து ஆண்ட்டிக்கும் வெக்கமா இருக்காதா. நீயே யோசி”

லதாவுக்கு வெக்கமா போச்சு. ச்சே எவ்வளவு முட்டாள்தனமா இருந்திருக்கோம்னு நினைச்சிக்கிறா.

“சாரிம்மா” ன்னு சொல்றா.

“சாரியெல்லாம் கேக்காத செல்லம். ஆனா அம்மா சொல்ல வந்த விஷயத்த புரிஞ்சிக்க. இரண்டு பேர் தனியா பேச விரும்புறாங்கன்னா அதுக்கு பல காரணம் இருக்கலாம். அவுங்கள தொந்தரவு பண்ணக் கூடாது. அமைதியா அந்த விட்டுட்டு முந்திகிட்டு எஸ்கேப் ஆகிரனும். அவுங்க இன்சல்ட் பண்ணிட்டாங்கன்னு நினைக்க கூடாது”

”ம்ம்ம்” இது லதா.

“அதே மாதிரி நீ ஒருத்தர் கிட்ட தனியா நிறையா பேச விரும்பும் போது இன்னொருத்தர் வந்தா உன்னோட விருப்பத்த நேருக்கு நேரா சொல்லலாம். அம்மா அப்பாகிட்ட கூட நீ சொல்லலாம்.”

“நா அடுத்தவங்க சுதந்திரத்த எடுக்க கூடாது. அதே மாதிரி என் சுதந்திரத்த அடுத்தவஙக் எடுக்க விடக் கூடாது” அப்படித்தான.

அந்த ரூம் இருட்டு சட்டுன்னு வெளிச்சமாகுது.

“அப்படியேதான் செல்லம். கோபம் போயாச்சா . இதோ இந்த சோறையும் முட்டைபொரியலையும் அப்படியே சாப்பிடுறுவியாம்” அப்படின்னு சொல்லிட்டு பாட்டி வந்து ஊட்டி விட வர்றாங்க.

“நீ தூங்கலியா பாட்டி” இது லதா.

“நீ சாப்பிடாம யாருமே இந்த வீட்ல தூங்கமாட்டாங்க செல்லம். உனக்கு பசிக்கும்கிறது காரணம் இல்ல. ஆனா சாப்பிடாம படுக்குற அளவுக்கு ஒரு குழந்தைக்கு கஷ்டம் இருக்கும் போது, அத தீத்து வைக்காம எப்படி தூங்குவோம் சொல்லு” அப்படி சொல்லிட்டு லதா வாயில பெரிய கவளம் சோத்த பாட்டி திணிக்கிறாங்க.

லதா இந்த பக்கம் அப்பா கையப் பிடிச்சிகிட்டு, அந்தப் பக்கம் அம்மா கையப் பிடிச்சிகிட்டு அவுக் அவுக்குன்னு சாப்பிடுறா. :) :)

No comments:

Post a Comment