Wednesday, June 21, 2017

பெயரில் சாதிய பின்னொட்டுக்களைத் தவிர்ப்பதைப் பற்றி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் இப்போதாவது பரிசீலிக்க வேண்டும

Kanakaraaj karuppaiyaa
Via Facebook
2017-06-21

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் ரவிக்குமார் Ravi Kumar தன்னுடைய டிவிட்டரில் “பெயரில் சாதிய பின்னொட்டுக்களைத் தவிர்ப்பதைப் பற்றி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் இப்போதாவது பரிசீலிக்க வேண்டும்” என்று தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு பல அடையாளங்கள் இருக்கிறது. இதோ இந்த கீழே உள்ள படத்தில் ஆண்களும், பெண்களுமாய் அணிதிரண்டு கடந்த 9-ந் தேதி சேலத்தில் தொடங்கி இன்று வரை ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் கொண்டு வா  என்ற ஒற்றைக் கோரிக்கையோடு 350 கி.மீ. நடந்தே வந்திருக்கிறார்கள். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, இன்றோடு 13 நாட்கள். இவர்களில் தமிழகத்தில் உள்ள பல சாதிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் தீண்டாமைக்கு எதிராக, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக, சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடந்து வருகிறார்கள். இது தான் எங்கள் அடையாளம்.

ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி ஆண்களும், பெண்களும் தங்களது வாரிசுகளோடு சாதி பேதமில்லாமல் குலசாமி கோவிலுக்கு போவது போல வெண்மணிக்கு காவடி எடுத்துக் கொண்டும், பொங்கல் வைத்தும் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்ததை போல எல்லா சாதியினரும் வருகிறார்களே அது எங்கள் அடையாளம்.
கட்சி தலைவர்களில் பலரும் அவர்களின் குடும்பத்தின் வாரிசுகளும் சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் எல்லாவிதமான சடங்குகளையும் தாண்டி திருமணம் செய்து கொள்கிறார்களே அது எங்கள் அடையாளம்.

இளவரசனோ, கோகுல் ராஜோ, சங்கரோ இன்னும் இன்னுமாய் சாதி ஆதிக்கத்தால் வீழ்த்தப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் துடிக்கிற கட்சியிலிருந்து கட்டளைகள் பிறப்பிக்காமல் தானே ஓடிப்போய் முன்நிற்கிற படித்த, படிக்காத கைநாட்டுகளாக இருக்கிற கிராமத்து ஏழை, எளிய மனிதர்கள் எங்கள் அடையாளம்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரு ஊரில் அவருடைய தாய் தந்தையர்கள்  வைத்த பெயரை மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்காக கம்யூனிஸ்ட் கற்பு கெட்டுப்போய்விட்டதாய் சொல்லிக் கொண்டிருப்பதை தோழர் ரவிக்குமார் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிரபலபடுத்திக் கொண்டேயிருக்கிறார்.

ரவிக்குமார் என்கிற பெயருக்கு சூரியனின் மகன் என்று பொருள். திருமாவளவன் என்பதற்கு நான் பொருள் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கனகராஜ் என்பதும் மதம் கடந்த பெயரல்ல. ஈ.வெ.ரா. பெரியாரின் பெயர் ராமசாமி நாயக்கர் என்று ஒருவர் சொல்லிக்கொண்டு அவர் ஏன் ராமசாமி என்கிற கடவுள் பெயரை மாற்றவில்லை, நாயக்கர் என்ற சாதிப் பெயரை தூக்கிப்போடவில்லை என்று கேட்பது எத்தனை பொருள் உடையது என்பதை தோழர் ரவிக்குமாரின் பரிசீலனைக்கே விட்டுவிடுகிறேன்.
சிறிது காலமாய் யெச்சூரி என்பது சாதிப் பெயர் என்று வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் சொல்லி வந்த பல பேர்கள் இருக்கிறார்கள். அது ஊர்ப்பெயர் என்று தெரியாது கம்யூனிஸ்ட்டுகள் மீதான குரோதத்தால் மட்டும் புனையப்பட்ட கதைகள் அவை.

சில மாதங்களுக்கு முன்பு அதாவது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சில தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு இவர் அந்த சாதி, அவர் இந்த சாதி என்று எழுதியிருந்தார்கள். அவற்றில் சில உண்மையும், பொய்யும் கலந்திருந்தது. ஒரு பத்திரிகையாளரிடம் அழைத்துச் சொன்னேன். தோழர் ஜி. ராமகிருஷ்ணன் நீங்கள் எழுதியிருப்பது போல நாயுடு சமூகத்தைச் சார்ந்தவர் அல்ல அவர் திருமணம் செய்திருப்பது அவர் எந்த சாதியில் பிறந்தாரோ அந்த சாதியைச் சார்ந்தவரல்ல. அவருடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்திருப்பது ஜி.ஆர். அவருடைய மனைவி இவர்களின் இருவரின் சாதியோடும் சம்பந்தப்பட்டதல்ல என்றெல்லாம் சொன்ன பிறகு கூட அவர் அதை மாற்ற அருள்பாலிக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு அப்போது வைகோ, விஜயகாந்த் இவர்களின் தாய்மொழி எதுவோ அது தான் தோழர் ஜி.ஆர்.ன் தாய்மொழி என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டுமென்பது நோக்கமாக இருந்தது.

தோழர். அ. மார்க்ஸ் அந்த பதிவைச் சுட்டிக்காட்டி அவர் அந்த சாதியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு சாதியில்லை என்று எழுதியிருந்தார். அவரிடம் நான் சொன்னேன் தோழர் ஜி.ஆர். மீது சாட்டப்பட்டுள்ள சாதிக்கும், அவருக்கும் சம்பந்தமில்லை என்று. அவருடைய தாய் மொழி தமிழ் தான் என்று தான் கூறினேன். அப்புறம் எதற்கு இப்படி எழுதுகிறார் என்கிற கவலையை பகிர்ந்து கொண்டார்.

தோழர் சுர்ஜித் தாடி வைத்திருப்பதையும், தலைப்பாகை கட்டியிருப்பதையும் கூட கேள்வி கேட்டவர்கள் உண்டு. மழித்தலோ நீட்டலோ ஒரு அடையாளம் தான். அப்படியென்றால் யாருடைய அடையாளத்தை வைத்துக் கொள்வது. என்னைப் போல் நீ இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பெயர் என்ன. நான் என் வழக்கப்படி முடிவெட்டிக் கொண்டால் அதே வழக்கப்படி நீ முடிவெட்டிக் கொள்ளவில்லையென்றால் உனக்கு நான் இன அடையாளம் பூசுவேன் என்றால் பகத்சிங்கும் சீக்கியன் தான். நான் ஏன் நாத்தீகன் ஆனேன் என்று அவன் எழுதியது லட்சோப லட்ச இளைஞர்களை சென்றடைந்திருக்கிறது. அவனை உங்களைப் போல் கிராப் வெட்டிக் கொள்ள நீங்கள் கட்டாயப்படுத்துவது என்ன நியாயம் என்று புரியவில்லை.

தோழர் சுர்ஜித்தின் அடையாளம் சிறுவனாக இருந்த போது அரசு அலுவலகத்திலிருந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு துப்பாக்கி குண்டும் சுற்றிலும் பாய்ந்து கொண்டிருக்கும் போது மூவர்ணக் கொடியை ஏற்றி விட்டு வந்த அடையாளம் தான். தோழர் சுர்ஜித்தின் அடையாளம் என்பது திருமணமான அன்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு இருட்டுக் கொட்டடியில் அடைக்கப்பட்டு வெளியே வரும் போது பார்வை இழந்து, மனைவியை கூட இவர்தான் உன் மனைவி என்று அடையாளம் காட்டும் வகையில் அமைந்தது தான் எங்கள் அடையாளம்.

பள்ளிப்பாளையம் வேலுச்சாமியை தெரியுமா? அவர் வெட்டிக் கொல்லப்பட்டு விட்டார். ஏன் தெரியுமா? ஒரு அருந்ததிய பெண்ணுக்கு திருமணம் நடத்துவதற்காக அந்த பெண்ணின் தந்தை ஒருவனிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார். அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை அதற்காக கர்ப்பிணியாக இருந்த பெண்ணை நிர்வாணமாக்கி மிக மோசமாக படமெடுத்து இனைய தளத்தில் பிரசுரித்தான் ஒரு கயவன். அவன் வேலுச்சாமியின் சாதிக்காரன். இன்னும் சொல்லப்போனால் சொந்தக்காரன். ஆனால் வேலுச்சாமி என்கிற அந்த செங்கொடிக்காரன் அந்த பெண்ணுக்கு நியாயம் கேட்டதால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டான். இது தான் எங்கள் அடையாளம். அவன் செத்த பிறகு அவன் குழந்தையின் பெயர் என்ன, அவன் இருக்கும் போது என்ன சாப்பாடு சாப்பிட்டான் அசைவமா, சைவமா என்பதையெல்லாம் வைத்துக் கொண்டு அவனுக்கு ஒரு அடையாளம் பூசாதீர்கள். செயல்பாடுகளை கொண்டு தான் தீர்மானிக்க முடியுமே தவிர ஏழை பங்காளன் என்று பெயர் வைத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று தோழர் ரவிக்குமார் நினைக்கிறாரா என்று தெரியவில்லை.

ஏறத்தாழ 350 கிலோ மீட்டர் நடந்து வந்து வருகிற வழியெல்லாம் விசிக, ஆதிதமிழர் கட்சி, பல்வேறு தலித் இயக்கங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் பொங்கி அளித்த உணவுகளை அருந்திக் கொண்டே இதோ எங்கள் தோழர்கள் தாம்பரம் வந்தடைகிறார்கள். இது போன்ற தருணங்களில் எல்லாம் தோழர் ரவிக்குமாரின் முன்னொட்டு, பின்னொட்டு விவாதங்கள் முன்னுக்கு வருவது வழக்கமாய் இருப்பதை சற்று கவலையோடு பார்க்க வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment