Vijay baskervijay
Via Facebook
2017-06-20
”அவளப் பிடிச்சிருந்திச்சி
அவளுக்கு கிஸ் கொடுத்தேன் டீச்சர். உங்களப் பிடிச்சிருந்தா உங்களுக்கும் முத்தம் கொடுப்பேன் டீச்சர்” என்று சொல்லும் மாணவனை வேகமாக கொஞ்சம் வெறியாக அடித்து விடுகிறாள் குற்றம் கடிதல் திரைப்பட ஆசிரியை.
அதிகம் மாணவரகளை அடிக்காத, அன்பு மனதைக் கொண்டிருக்கும் அவளுக்கு ஏன் அவ்வளவு ஆத்திரம் வந்தது?
சிறுவயது முதலே ஒழுக்கம் ஒழுக்கம் என்ற பாலுணர்வு ஒழுக்கத்தை அதிகப்படியாக திணித்த திணிப்பே அப்படி கோபமாக வெளி வந்துவிட்டது.
1965 களில் வீட்டில் வளர்ந்த அம்மா இது பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.
புத்தகம் படித்தால் திட்டு,
வீட்டில் தார்சா ஜன்னலில் நின்று வெளியே வேடிக்கைப் பார்த்தால் திட்டு,
மொட்டை மாடியில் துணி காயப்போட்டு உடனே வந்து விடவேண்டும் கொஞ்சம் வேடிக்கை பார்த்தால் திட்டு,
ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்டால் திட்டு, ஆனந்தவிகடன் ராணி படித்தால் திட்டு,
பாத்திரம் விளக்கும் போது சினிமா பாட்டு பாடினால் திட்டு.
இந்த திட்டுகள் அனைத்துமே யோனியையும் யோனி சார்ந்த உணர்வுகள் அடிப்படையிலான திட்டுகள்தாம்.
அதக் கண்ட்ரோல்ல் வை. கண்ட்ரோல்ல வை என்பதான திட்டுக்கள்தாம். வெளியே யாரும் பகிரங்கமாக இதைச் சொல்வதில்லை. ஆனால் அதன் உள் அர்த்தம் அதுதான்.
யோனியை பாதுகாக்கத் தவறும் பெண் மொத்த குடும்பத்துக்கும் பிரச்சனையாகி விடுகிறாளாம்.
பூமணியின் “கரு” சிறுகதையில் ஒரு அம்மா தன் இரண்டாவது பெண் வாந்தி எடுப்பதைப் பார்த்து அடி அடி என்று அடிக்கிறாள்.
அடி என்றால் அப்படி ஒரு அடி.
நல்லவேளையாக கணவன் ஊரில் இல்லை. அவர் வருவதற்குள் சின்ன மகளை மருத்துவம் செய்யும் பெண்ணிடம் அழைத்துச் சென்று ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க அழைத்துச் செல்கிறாள்.
போகும் வழியில் மகளுக்கு தாகம் அதிகமாகி மயக்கமாகி விடுகிறது. அம்மாவோ அது பற்றி கவலைப்படவே இல்லை.
மகள் உயிரே போனாலும் பரவாயில்லை என்று மருத்துவச்சியிடம் அழைத்துச் செல்ல இழுத்து செல்கிறார்.
மகளால் குறிப்பிட்ட கட்டத்தில் நடக்க முடியவில்லை. அவ்வளவு தாகமாகி விடுகிறது. அங்கே ஒரு கிணறு இருக்கிறது. அதில் போய் மகளை குடித்துவிட்டு வா என்று அம்மா சொல்ல, கிணற்றில் இறங்கிக் குடிக்க பயந்து மகள் தண்ணியே வேண்டாம் என்று வெயிலில் நடந்து வருகிறாள்.
அதாவது வாசகர்கள் அந்த அம்மா கேரக்டர் மேல் பெரிய கொடுங்காலியாக இருப்பாள் போலிருக்கிறதே என்று நினைக்கும் போது அந்த அம்மா நினைப்பதாக பூமணி எழுதுவார்
“மருத்துவச்சி மருந்து குடுத்து எடுக்குறாளோ அல்லது குச்சியை விட்டு ஆட்டுறாளோன்னு தெரியலையே” என்று அம்மா கவலைப்படுவார். சிறுகதையில் கடைசி ஒரிரு பத்திகளில்தான் நமக்குத் தெரியும் அந்த அம்மா அந்த சின்னமகளை மிகச் செல்லமாக வளர்த்து வருகிறார் என்றும், யாரையும் அவளை அடிக்க விட மாட்டார் எனவும், அம்மாவும் அவளை அடிப்பது இதுதான் முதல் தடவை எனவும் தெரியும்.
திரும்ப திரும்ப நம் சமூகத்தில் அந்த யோனியின் புனிதம் முக்கியம் என்ற கருத்துக் கட்டிக்காப்பாற்றப்பட்டு வருகிறது.
ஒரு யோனி ஸ்லிப் ஆகிவிட்டால் குடும்பத்தின் பலருடைய திருமணத்தை பாதிக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் முட்டாள்தனத்தில் இன்னும்தான் இருக்கிறோம்.
இப்படியாக ”யோனி தூய்மையை(?)” ஒரு மந்திரம் போல் ஜெபித்து வரும் பெண்ணின் வாழ்க்கை சரியாக அமைந்துவிட்டால் அது பிரச்சனையில்லை.
ஆனால் சரியாக அமையவில்லை என்றால் மனம் நிறையவில்லை என்றால் என்ன விளைவுக்கு கொண்டு செல்கிறது என்பதைப் பார்த்தால் கொடுமையானதாகத்தான் இருக்கும்.
ஒரு பக்கம் இச்சை அல்லது அன்பு
இன்னொருபக்கம் ஒழுக்கம் Instrumental ஆக மனதில் படிந்திருக்கும் அந்த படிமம் கொடுக்கும் அழுத்தம்.
இன்னொருபக்கம் சமூகத்தின் கண்கானிப்பு
இப்படி எல்லாம் சேர்ந்து ஒரு பெண்ணை சுழட்டி அடித்து விடலாம்.
சில சமயம் அது குடும்பத்தாருக்கோ அல்லது சமூகத்துக்கு கூட எதிராக முடியலாம்.
A Candle for the Devil என்றொரு ஸ்பானிஷ் மொழி படத்தில் வரும் மார்த்தா என்றொரு பெண் அப்படி இருக்கிறாள்.
- மார்த்தாவும் அவள் தங்கை வெரோனிகாவும் அவர்கள் வீட்டையே ஹோட்டலாக வைத்து நடத்துகிறார்கள்.
- இருவரும் அம்பது வயதை நோக்கி நகர்பவர்கள்.
- ஒருநாள் பகலில் மார்த்தாவுக்கு பாடல் ஒசை கேட்க, கேட்ட திசை நோக்கிப் போக அது மொட்டைமாடியில் கொண்டு விடுகிறது. அங்கு அவர்கள் ஹோட்டலில் தங்க வந்த இளம்பெண் உடலில் உடையில்லாம சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருக்கிறாள்.
- மார்த்தா அப்படி இருப்பது ஒழுக்கம் கெட்ட செயல் என்று கடுமையாக சொல்லி அப்பெண்ணை ரூமை காலி செய் என்று இழுத்து தள்ளி விட அப்பெண் ஒரு ஜன்னல் கண்ணாடியில் மோதி இறந்துவிடுகிறாள்.
- வெரோனிகா அதிர்ச்சியாகி இருக்க, மார்த்தா பார் கடவுள்தான் இவளைத் ஒழுக்கக் கேட்டுக்காக தண்டித்தார். நாம் தப்பு செய்யவில்லை என்கிறாள்.
- மார்த்தாவும் வெரோனிகாவும் கொலையை மறைக்கிறார்கள்.
- மார்த்தாவின் தங்கை வெரோனிகாவுக்கு பெரிய ஒழுக்கச் சிக்கல் இல்லை. அவள் மார்த்தாவுக்கு தெரியாமல் அவளை விட 20 வயது சிறிய அவர்கள் வீட்ட்ல் வேலை பார்க்கும் பையன் வீட்டுக்கு சென்று அடிக்கடி தங்கிவருகிறாள்.
- அடுத்து இன்னொரு பெண் தங்க வருகிறாள். அவளுக்கு பல காதலர்கள். ஒருநாள் அவள் லேட்டாக வருவது பற்றி மார்த்தா கடுமையாக பேச அந்த இளம்பெண் மார்த்தாவை நோக்கி அவேசமாக வந்து “ ஏன் ஒழுக்கம் ஒழுக்கம் என்று தொந்தரவு செய்கிறாய். நீ உன் உடலுக்கு உள்ளே சிறப்பாக அப்படி என்னதான் வைத்திருக்கிறாய் என்று மார்த்தாவின் உடலை கிழிக்க, பின்னால் இருந்து வெரோனிகா அவளைத் தாக்கி கொல்கிறாள்.
- இன்னொரு அறையில் பெண் கல்யாணமாகாமலே குழந்தை பெற்றுக் கொண்டாள் என்று வதந்தியை
நம்பி அவளை ஒழுக்கம் கெட்டவள் என்று சொல்லி
மார்த்தா கொல்கிறாள்.
மார்த்தா ஏன் இப்படி இவ்வளவு ஆக்கிரோசமாக ஒழுக்கம் குறைந்தவர்கள் (?) மேல் உக்கிரம் கொள்கிறாள் என்பதற்கு ஒரு சைக்காலஜி கதை இருக்கிறது.
பல வருடங்கள் முன்பு மார்த்தாவுக்கென்று நிச்சயமான வருங்கால கணவன், திருமணத்தன்று ஒரு இளம்பெண்ணோடு போய்விடுகிறான்.
மார்த்தாவின் திருமணம் நின்று விடுகிறது. அப்பெண் மிக உச்சபட்ச நாகரிகத்தை கொண்டவளாம்.
- தன் திருமணத்தை நிறுத்தியவளின் வெவேறு வடிவமாகத்தான் மார்த்தா நாகரிக இளம்பெண்களை பார்க்கிறாள் என்பது அவள் நடவடிக்கையில் தெரிகிறது.
- இப்படியாக போகும் த்ரில்லர் கதையின் முக்கிய கொலையாளியான மார்த்தா கேரக்டர் மேல் படம் பார்க்கும் போது கோபமே வரவில்லை. ஏனென்றால் அவளுக்கு ஒழுக்கம் மந்திரம் மாதிரி கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் வரும் பிரச்சனைதான் அனைத்தும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
இப்படத்தில் ஒரு காட்சி எப்படி பெண்கள் மீது ஒழுக்கம் என்றொரு விஷயம் திணிக்கப்படுகிறது என்பதை அழகாகச் சொல்லும்.
மார்த்தா தன் தங்கை வெரோனிகாவைத் தேடி வேலை செய்யும் பையன் வீட்டுக்கு வருகிறார்.
அங்கே யாருமில்லை. மார்த்தா வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் போது , அங்கே உயரமான புற்கள் மறைவில் அவளையறியாமல் நிற்கிறாள்.
அந்தப் பக்கம் பல இளைஞர்கள் குளிப்பதற்காக தங்கள் உடைகளை முழுவதுமாக களைவதைப் பார்த்து விடுகிறாள்.
மனதுக்குள் சிறிய சலனமும் அடைந்து விடுகிறாள்.
ஒழுக்கவாதியான மார்த்தாவால் அதைத்தாங்க முடியவில்லை.
செக்ஸ் எண்ணம் ஏன் வந்தது என்று தன்னையே கடிந்து கொள்வதாக நினைத்து அந்த கோரைப் புற்கள் நடுவே வேண்டுமென்றே நெருக்கமாக நடந்து வந்து தன் உடல் எங்கும் கிழித்துக் கொள்கிறாள்.
மார்த்தா அப்படி கிழித்து கொள்வதற்கு காரணம் மார்த்தா அல்ல. அவள் மீது திணிக்கப்பட்ட ஒழுக்க மந்திரம்தான்.
சமூகத்தின் சரிபாதியான
ஒரே ஒரு பாலினத்தார் மீது மட்டும் திணிக்கப்படும்,
திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
தந்திரமான ஒழுக்க மந்திரங்கள்தாம் காரணம்.
No comments:
Post a Comment