Friday, June 9, 2017

தயிர் சாதமும்.. மட்டன் சுக்காவும்.. பின்னே ஊடகப்போரும

கார்ட்டூனிஸ்ட் பாலா
Via Facebook
8-6-17

தயிர் சாதமும்.. மட்டன் சுக்காவும்.. பின்னே ஊடகப்போரும்..
ஒருவனை கொல்வதற்கு முன் அதற்கான நியாத்தை பொது சமுகத்திடம் உருவாக்க வேண்டும்..

அதுதான் அந்த போரின் அடிப்படை தத்துவம்..

பொதுவாக போர் என்றால் இரு நாட்டு வீரர்களும் பரஸ்பரம் “டுபிக்கோ.. டுபிக்கோ” என்று துப்பாக்கி குண்டுகளால் முழங்குவார்கள் என்றுதான் நாம எல்லோரும் நினைப்போம்.

ஆனால் அதையெல்லாம் விட முக்கியமானது இந்த போர்.

அதற்கு ஊடகப்போர்.. கருத்துருவாக்கப்போர் என்பது உட்பட பல பெயர்கள் உண்டு.

சதாம் உசேன் கதையை முடிக்க வேண்டும் என்று அமெரிக்கா முடிவு செய்து விட்டது.

ஆனால் உடனடியாக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது இல்லையா..

அதற்காக அவர்கள் கிளப்பிவிட்டதுதான் ரசாயன ஆயுதக் கதைகள். உலகம் முழுக்க ஊடகங்களில் அந்த கதைகளை பரப்பினார்கள். பின்னர் கதையை முடித்தார்கள். இதுதான் ஊடகப்போருக்கான எளிமையான உதாரணம்.

இந்த ஊடகப்போரின் முக்கியமான ஆட்களில் குறிப்பிடும்படியானவர்கள் ஒபினியன் மேக்கர்ஸ் எனப்படும் கருத்துருவாக்க அடியாட்கள்.

இந்த கருத்துருவாக்க அடியாட்கள் உலக அரசியல் முதற்கொண்டு உள்ளூர் அரசியல் வரை இருப்பார்கள்.

இவர்கள் பத்திரிகையாளர்களாக. என்னைப்போன்ற கார்ட்டூனிஸ்ட்டுகளாக, எழுத்தாளர்களாக, அறிவுஜீவிகளாக.. சமூகசேவகர்களாக.. என்.ஜி.ஓ. போராளிகளாக என பல ரூபத்தில் இருப்பார்கள்.

அதிகாரத்திற்கு சார்பாக இருக்கும் இந்த ஊடகப்போர் அடியாட்கள் அதிகார மையங்களால் சிறப்பாக கவனிக்கப்படுவார்கள். அவர்களை செழிப்பாக வைத்திருப்பதற்காகவே பல ஆயிரம் கோடிகள் உலகம் முழுவதுமுள்ள அதிகார மையங்களால் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

(சந்தேகமிருந்தால் ஈழப்போர் சமயத்தில் சென்னையில் இலங்கை தூதர் அம்சாவல் செழிப்பாக கவனிக்கப்பட்ட பத்திரிகையாளர்களிடம் கேட்கலாம்..  )

நீங்க என்ன அரசியலை பேச வேண்டும்.. எதை திங்க வேண்டும்.. யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதையெல்லாம் இந்த அடியாட்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றால் உங்களுக்கு கொஞ்சம் ஜெர்க் ஆகக்கூடும்.

ஆனால் அதுதான் உண்மை.

நம்மையறியாமல் நமது மூளைக்குள் அவர்கள் விரும்பும் அரசியலை திணிப்பார்கள்.

இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த ஊடகப்போர் அரசியலை ஏனோ தமிழர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

களத்தில் வீரம்செறிந்த போர்களைப்புரிந்த புலிகள் தோற்றுப்போனது வல்லரசுகள் நடத்திய இந்த ஊடகப்போர் தந்திரத்திலும்தான்.

இன்றைக்கும் தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மை பத்திரிகையாளர்கள் ஈழ ஆதரவாளர்கள்தான். ஆனால் அவர்கள் மாத கூலிக்காக தங்கள் அரசியலுக்கு எதிரான ஆட்களிடம் கூலிக்கு மாரடித்துக் கொண்டிருப்பார்கள். ஏன்னா பொருளாதார தேவை.

இந்த போரின் முக்கியத்துவம் அறிந்ததால்தான் அரசியல்வாதிகள் கட்சி ஆரம்பித்ததும் கையோடு ஒரு ஊடகத்தையும் ஆரம்பித்துவிடுகிறார்கள். இன்று தமிழகத்தை குறிவைத்து வட இந்திய ஊடகங்கள் ஆந்திர ஊடகங்கள் எல்லாம் முதலீடு செய்வது எல்லாம் கருத்துருவாக்கத்தின் நீண்டகால செயல்திட்டங்கள்.

ஊடகம்.. கருத்து சுதந்திரம் எல்லாம் அந்த நிறுனங்களின் முதலாளிகள் நலன் சார்ந்தது மட்டுமே. நான்காவது தூண் என்ற கட்டுக்கதைகளையெல்லாம் நம்பாதீர்கள். அப்படி ஒன்று கிடையாது.

முதலாளிகள் ஆட்சியாளர்களுடன் டீலிங் வைத்துக்கொண்டால் அதில் பணிபுரியும் ஊழியர்களும் முதலாளி சொல்வதைதான் செய்தாக வேண்டும். ஊடக அறம் என்பதை மறந்து வர்த்தக நிறுவனங்களாக ஊடகங்கள் மாறிவிட்டதால் அதுதான் எதார்த்தம்.

பணம் போட்டு ஒரு முதலாளி ஓட்டல் ஒன்றை தொடங்குகிறார். அங்கு மாஸ்டராக நீங்கள் பணிக்கு சேர்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு மட்டன் சுக்கா, பரோட்டா பிரியாணி எல்லாம் பண்ண தெரிகிறது.

ஆனா ஓட்டல் முதலாளிக்கு தயிர்சாதம், தோசை மட்டுமே தேவை என்றால் முதலாளி கேட்பதைதானே செய்து கொடுப்பீர்கள்.

அவ்வளவுதான்.. இன்றைய ஊடகத்தின் நிலையும்..
அதில் பணிபுரிபவர்கள் நிலையும்.

மற்றபடி பத்திரிகையாளர்கள் என்பதற்கான எந்த சிறப்பு தகுதியும் கிடையாது.. அவர்கள் கருத்துருவாக்க அடியாட்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைத் தவிர.

இந்த அரசியல் எல்லாம் தெரியாமல், பத்திரிகை முதலாளிகளிடம் கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகையாளர்களை ஊடகவிபச்சாரிகள் என்று போகிறபோக்கில் திட்டிவிட்டு போவார்கள் போராளிகள்..

இவர்கள் என்றைக்கும் அந்த பத்திரிகை முதலாளியை திட்ட மாட்டார்கள்.

நெகட்டிவ் என்று ஒன்று இருந்தால் பாசிட்டிவ் என்று ஒன்று இருக்கும் இல்லையா.. அதுபோல் மக்களுக்கான கருத்துருவாக்க இயக்கத்தவர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளும், பத்திரிகையாளர்களும் இருப்பார்கள்..

ஆனால் தங்களுக்காக இயங்கும் அவர்களை இந்த சம்முவம் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் பலிகொடுத்துவிட்டு போய்கொண்டே இருக்கும்.

ஏனெனில் இந்த கருத்துருவாக்கப்போரை நடத்துவதற்கு பொருளாதாரம் மிக முக்கியம். மக்களுக்காக கருத்துருவாக்கப்போரை நடத்துபவர்கள் எல்லாம் பொருளாதாரரீதியில் பலகீனமாக இருப்பார்கள்.

ஆக உங்களுக்காக எண்ணத்தை விதைப்பவர்களுடன் பொருளாதாரரீதியாகவும் வேறு எந்த வகையில் துணை நிற்க முடியுமோ நில்லுங்கள்.

அல்லது அவர்கள் முதலாளிகள் சொல்லுவதுபோல் சாம்பார் சாதமும் தயிர் சாதமும்தான் கிண்டிக்கொண்டிருப்பார்கள்…

தமிழர்கள் நீங்கள், அவர்கள் எங்களை இழிவு படுத்திவிட்டார்கள்.. எங்களுக்கு ஆதரவாக எழுத பேச எவரும் இல்லை என்று காலம் காலமாக புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஆக தமிழர்கள் அவசியம் கருத்துருவாக்கப்போரை கற்றுக்கொள்ளுங்கள்.. அந்த போரை எதிர்கொள்ளவும் அதை நடத்துவதற்கு தேவையான பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொள்ளவும் கற்றுக்கொள்ளுங்கள்.

ஏனெனில் கருத்துருவாக்க போர் களம் என்பது மிக முக்கியமானது.
களத்தில் நின்று கம்பு சுத்துவது.. துப்பாக்கி பிடிப்பது மட்டுமல்ல..

எண்ணத்தை விதைப்பதும் போர்தான்..!

No comments:

Post a Comment