Friday, June 2, 2017

கோமாதாவின் கோமியத்தை பற்றி ‘அமெரிக்ககாரனே பேடன்ட் எடுத்து வைச்சிருக்கான், அவனுக்கு தெரியுது அதோட அருமை, நமக்கு தான் தெரியலை

கோமாதாவின் கோமியத்தை பற்றி ‘அமெரிக்ககாரனே பேடன்ட் எடுத்து வைச்சிருக்கான், அவனுக்கு தெரியுது அதோட அருமை, நமக்கு தான் தெரியலை’ என்று வழக்கம் போல சில பக்தர்கள் சாமியாடிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு அதன் மருத்துவ மகிமை பற்றி தெரியாது. ஆனால் சில விளக்கங்கள்

1. அமெரிக்கர்கள் யாரும் எந்த பேடன்ட்டையும் இந்த விஷயத்தில் பதிவு செய்யவில்லை. 2002-ம் ஆண்டு பாஜக அரசு இருந்த போது Council of Scientific and Industrial Research (CSIR) எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் தான் 4 பேடன்ட் பதிவு செய்துள்ளார்கள். அனைத்து பேடன்ட்டுமே இந்தியர்களிடம் தான் உள்ளது. எனவே, நமது அறிவை, வளத்தை திருடி விட்டான் என்று யாரும் பதற வேண்டாம். கோமாதா கோமியத்தை வைத்து ‘நாம் எதையும் தயாரிக்க முடியாது, குடிக்க முடியாது’ என்ற கவலை வேண்டாம். விருப்பமிருப்பவர்கள் அள்ளி அள்ளி பருகலாம்.

2. அமெரிக்க பேடன்ட்டை அமெரிக்கர்கள் தான் பெற முடியும் என்பதில்லை. இங்கிருந்து நீங்களும் நானும் கூட ஏதாவது புதிதாக கண்டுபிடித்தால் அங்கு பதிவு செய்ய முடியும்.

3. அமெரிக்க பேடன்ட் ஒரு பொருளுக்கு கிடைத்து விட்டாலே அதன் மருத்துவ குணங்கள் உண்மை என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் அருமையாக ஒரு தீசிஸ் எழுதி கொடுத்து விட்டால் வேறு எவரும் அதே போல இது வரை பதிவு செய்யாமல் இருந்தால் உங்களுக்கு பேடன்ட் கிடைக்கும். அதன் உண்மைத்தன்மையை பேடன்ட் அலுவலகம் உறுதி செய்ய முடியாது. நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தால் கேள்வி  கேட்கலாம்.

4. பேடன்ட் வாங்கினால் மட்டுமே பத்தாது. அதை வைத்து ஏதேனும் ஒரு மருந்து பொருள் தயாரித்து FDA (Food and Drug Administration)- யிடம் இருந்து அனுமதி வாங்கி அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது தான் முக்கியம். எத்தனை பொருட்களை அமெரிக்காவில்  சந்தைப்படுத்தியிருக்கிறார்கள் என்று பக்தர்கள் தெளிவு படுத்தலாம்

No comments:

Post a Comment