Tuesday, June 27, 2017

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது

எழில் அரசன்
Via Facebook
2017-06-27

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று ஒரு நீதிபதி கேட்டிருக்கிறார்.

இதுபற்றி சற்றுமுன் டீ கடையில் இரண்டு பேர் பேசிக்கொண்டனர்:

அதிலும் எவ்வளவு விவரமாக 'அரசுப் பள்ளி ஆசிரியர்கள்' என்று கூறியிருக்கிறார். மொத்தமாக 'அரசு ஊழியர்கள்' என்று கூறியிருந்தால் தன்னுடைய பிள்ளை, பேரப்பிள்ளைகளுக்கும் அது பொருந்திவிடுமே என்று நினைத்திருப்பார் போலும்!

மேலும், இத்தோடு ஏன் விட வேண்டும்?
அரசு ஊழியர்கள் அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் தான் ஆடைகள் வாங்க வேண்டும், பிஎஸ்என்எல் நெட்வொர்க் தான் பயன்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், வேற ஹோட்டலில் சாப்பிடக் கூடாது அம்மா உணவகத்தில் தான் சாப்பிட வேண்டும், இந்துசமய அறநிலையத் துறைக்கு கீழே வரும் கோயில்களில் மட்டும் தான் சாமி கும்பிட வேண்டும், பொதிகை டிவி தான் பார்க்க வேண்டும், அதையும் அரசு கேபிளில் தான் பார்க்க வேண்டும், அரசுப் பேருந்துகளில் தான் பயணம் செய்ய வேண்டும், ஆண் அரசு ஊழியர்கள் பெண் அரசு ஊழியர்களைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும், அவர்கள் தனியார் நிறுவன ஊழியர்களை திருமணம் செய்யக் கூடாது உள்ளிட்ட இன்னும் நிறைய விதிகளை விதிக்கலாமே..

நாட்டின் எல்லாத் துறைகளையும் தனியாருக்கு திறந்துவிடுவார்களாம், ஆனால் அரசு ஊழியர்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டுமாம்!

எனக்குத் தெரிந்து, ஒரு நீதிபதியின் பணி என்பது அரசு இயற்றும் சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தோடு ஒத்துப் போகிறதா இல்லையா என்று பார்த்து தீர்ப்பு சொல்வது தானே தவிர, தங்கள் இஷ்டத்துக்கு கேள்விகளையும் கருத்துகளையும் சொல்வதல்ல.

இவ்வாறு பேசிய அந்த இருவரும் பிறகு தலையில் அடித்துக்கொண்டவாறு கலைந்து சென்றனர்!

No comments:

Post a Comment