Wednesday, February 7, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 2

Muralidharan Kasi Viswanathan
Via facebook
208-02-07

இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து இலவச கலர் டிவியும் ஸ்கூட்டியும் கொடுக்கிறதா தமிழக அரசு?  - பகுதி 2.
--------------------------------------------------------------
இந்து சமய அறநிலையத் குறித்து எழுப்பப்படும் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு, அந்தத் துறையின் பணத்தை எடுத்து பிற துறைகளுக்கு செலவழிக்கிறார்கள் என்பது. இது இந்துத்துவவாதிகளால் தொடர்ந்து சொல்லப்படும் பொய். கட்டுக்கதை.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆகவே, எந்த ஒரு மதத்திற்காகவும் தன் நிதியைச் செலவுசெய்ய முடியாது. இது ஒரு அடிப்படையான விஷயம். ஆகவே, இந்து சமய அறநிலையத் துறையின் நிதியை அரசு பயன்படுத்துவதும் இல்லை. மாநில அரசின் நிதியை கோவில்களுக்கென செலவழிப்பதும் இல்லை. இதைப் புரிந்துகொள்ள கோவில்கள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 38,635 கோவில்கள் உள்ளன. இவற்றில் திருக்கோவில்கள் 36,595. திருமடங்கள் 56. திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள் 57. Specified அறக்கட்டளைகள்  1,721. அறக்கட்டளைகள் 189. அரசியல்சாஸனத்தைப் பொறுத்தவரை, சமணர்களும் இந்துக்கள் என்பதால், சமணக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையே நிர்வகிக்கிறது. அப்படி 17 சமணக் கோவில்கள் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மொத்தமாக 38635.

இந்தக் கோவில்கள் பிறகு Listed Temples (பட்டியலைச் சாராத கோவில்கள்) ,  Non - Listed Temples(பட்டியல் கோவில்கள்)  என்று பிரிக்கப்படுகின்றன. இதற்கு அந்தக் கோவில்களின் வருமானமே அடிப்படையாக அமைகிறது. கோவில்களுக்கு உண்டியல், வாடகை என ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள கோவில்கள் Non - listed கோவில்கள். அந்த வகையில் 34,082 கோவில்கள் இருக்கின்றன.

ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள கோவில்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவு, ஆண்டு வருமானம் 10,000 முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை உள்ள கோவில்கள். இவற்றின் எண்ணிக்கை 3,550. இரண்டாவது பிரிவு, ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை உள்ளவை. இவற்றின் எண்ணிக்கை 672. மூன்றாவதாக ஆண்டு வருவாய் 10,000 ரூபாய்க்கு மேற்பட்டவை. இவற்றின் எண்ணிக்கை 331.ஆக, கிட்டத்தட்ட  சதவீதக் கோவில்கள் ஆண்டு வருவாய் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ளவைதான்.

இத்தனை ஆயிரம் கோவில்களையும் நிர்வகிக்க மிகப் பெரிய கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த கட்டமைப்பின் ஒட்டுமொத்த தலைவர் ஆணையர். அவருக்குக் கீழே, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தனி அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்,  முதுநிலை வரைநிலை அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள், தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் என இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது. இவை தவிர, கோவிலை நிர்வகிக்கும் அந்தந்த கோவில்களின் ஊழியர்கள் தனி.

சரி, இவர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது, அரசா, கோவில்களா? கோவில் ஊழியர்களைத் தவிர்த்த அனைவருக்கும் தமிழக அரசுதான் சம்பளத்தைத் தருகிறது. ஆணையரில் துவங்கி, தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். சரி, ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி இந்துக் கோவில்களின் நிர்வாகத்திற்காக தன் பணத்தை செலவிட முடியும் என கேள்வியெழுப்பலாம்.

அதற்கும் ஒரு ஏற்பாடு இருக்கிறது.  அதாவது கோவில் வருவாயில் Accessible income என்று சொல்லக்கூடிய வரி செலுத்தக்கூடிய வருவாயில் 14 சதவீதம் அரசுக்குச் செல்லும். இந்த 14 சதவீதத்தை கோவில்களில் இருந்து பெற்று, இந்தக் கட்டமைப்பை நிர்வக்கிறது தமிழக அரசு. கோவிலின் நேரடி ஊழியர்கள், அந்தக் கோவிலின் நிதி நிலைக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.

இந்த 14 சதவீதத்தைத் தவிர, இந்துக் கோவில்களின் வருவாய் எதையும் அரசு எடுப்பதில்லை. உண்மையில் ஒரு கோவிலின் வருவாயை எடுத்து இன்னொரு கோவிலுக்குக்கூட செலவழிக்க முடியாது. அந்தந்தக் கோவில்களின் திருப்பணி அந்தந்தக் கோவில்களின் வருவாய் மூலமே நடத்தப்படுகிறது. ஆனால், மிகக் குறைவாக உள்ள கோவில்கள் என்ன செய்யும்?

இதற்கு மற்றொரு ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. அதாவது Commissioner Common Good Fund என்று இதற்குப் பெயர். அதிக வருவாய் உள்ள கோவில்கள் இந்த நிதிக்கென ஒரு குறிப்பிட்ட அளவு வருவாயைச் செலுத்த வேண்டும். இந்த நிதியிலிருந்துதான் வருவாய் கிடைக்காத கோவில்களின் திருப்பணிகளும் பிற செலவுகளும் சமாளிக்கப்படுகின்றன.

உண்மையில், ஒரு கோவிலில் கிடைக்கும் வருவாயை வங்கியில் போட்டுவைக்கவே பல விதிமுறைகளை அரசு வகுத்திருக்கிறது. முதலாவதாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். இரண்டாவதாக கூட்டுறவு வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். மூன்றாவதாக, அதிக வட்டி கிடைக்கும் வங்கியில் குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். அரசு குறிப்பிட்ட அளவு மாறினால்,  தணிக்கையின்போது அது கவனிக்கப்பட்டு, கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

கோவிலின் நிதி என்பது இவ்வளவு கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், ஏதோ இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து இலவசத் திட்டங்களுக்கு அரசு செலவுசெய்வதைப்போல ஒரு பொய்ப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் இந்தியாவிலேயே மிகச் சுத்தமாக நிர்வகிக்கப்படும் கோவிலுக்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெற்றது. அதற்குத் தகுதியான கோவில்தான் அது என்பதை அங்கு சொல்பவர்கள் உடனடியாக உணர முடியும். இதற்கு முன்பாக இந்த விருதை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் பெற்றது. அந்தக் கோவிலின் வருவாய்க்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வருவாய்க்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது. சிறந்த நிர்வாகத்தின் மூலம்  மட்டுமே இதைச் சாதித்திருக்கிறது மதுரைக் கோவில்.

இருந்தும் இந்தக் கோவிலை முன்வைத்து, தற்போது நாஜிக்கள் இந்தப் பிரச்சாரத்தைத் துவங்கியிருப்பது பெரும் வேதனை.

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1183887971742928&id=100003652096964

No comments:

Post a Comment