Tuesday, February 13, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 5

Muralidharan Kasi Viswanathan
Via facebook
2018-02-14

1985ல் எம்.ஜி.ஆர். நியமித்த 'மர்ம' கமிட்டி - பகுதி 5
-------------------------------------------------------------

14.02.2018ஆம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் பா.ஜ.கவின் தேசியச் செயலர் திரு. எச். ராஜா அவர்களின் பேட்டி வெளியாகியுள்ளது. "அதர்மத் துறையாக செயல்படுகிறது அறநிலையத் துறை" என்பது தலைப்பு. கோவில்கள் ஏன் இந்து சமய அறநிலையத் துறை வசம் இருக்கக்கூடாது என்பதற்கு பல்வேறு புள்ளிவிவரங்களை அடுக்கியிருக்கிறார். வழக்கம்போல அவை எவ்வளவு தவறானவை என்பதை வரிசையாகப் பார்க்கலாம்.

தகவல் 1: தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 38,635 கோவில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவற்றில் பல கோவில்கள் காணாமல் போய்விட்டன.

பதில்: உண்மையில் அறநிலையத் துறை வசம் உள்ள கோவில்கள் என்பவை, 36,441 இந்துக் கோவில்கள். 17 சமணக் கோவில்கள். மீதமுள்ளவை மடங்களுக்குக் கீழே உள்ளவை. ஆனால், அறநிலையத் துறையின் கண்காணிப்பில் இருப்பவை.

அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களின் பட்டியல் பின்வரும் இரு சுட்டிகளில் இடம்பெற்றுள்ளன.  http://www.tnhrce.org/pdf/Moolavar_NonListed.pdf
http://www.tnhrce.org/pdf/Moolavar_Listed.pdf இவற்றில் காணாமல் போன பத்தாயிரம் கோவில்கள் எவை என ராஜா சொல்ல வேண்டும்.

தகவல் 2: உண்டியல் இல்லாத கோவில்களை ஒரு நாளும் நிர்வாகத்திற்குள் கொண்டுவந்ததில்லை.

பதில்: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் 34,082 கோவில்கள் வருடத்திற்கு 10,000 ரூபாய் வருவாய்க்கும் கீழே உள்ளவை. அதாவது மாத வருவாய் சுமார் 850 ரூபாய் மட்டுமே. இது சராசரி அளவுமட்டுமே. பல கோவில்களில் வருவாய் இதற்கும் கீழே.

பல கோவில்களில் பூஜை செய்வதற்கான தாம்பாளத் தட்டுகளே கிடையாது. அரசு கையகப்படுத்திய பிறகுதான் அவற்றிற்கான பூஜை பொருட்கள் படிப்படியாக வாங்கப்பட்டு, ஒரு நேரமாவது பூஜை நடப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 12745 கோவில்கள் இப்படி ஒரு கால பூஜையில்தான் இயங்கிவருகின்றன. இதற்கென ஒவ்வொரு கோவிலின் பெயரிலும் ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்பட்டு, அதன் வட்டியில் இந்த பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, தொங்கும் விளக்கு ஆகியவை இல்லாத கோவில்களில் அவற்றை வாங்குவதற்காக வருடத்திற்கு இரண்டரைக் கோடி ரூபாய் என இரு வருடங்களாக 20,000 கோவில்களுக்கு இந்தப் பொருட்கள் வாங்கி அளிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களே இல்லாத கோவில்களில், உண்டியல் எப்படி இருக்கும்? இருந்தும் அறநிலையத் துறை பராமரித்துத்தானே வருகிறது?

தகவல் 3: கோவில் சொத்துகளை மீட்க மாட்டார்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாட்டார்கள், சட்டம் இருந்தும் செயல்படாத அறநிலையத்துறை..

பதில்: நீதிமன்றங்களில் நிலம் தொடர்பாக தொடர்ந்து வழக்குகளைத் தொடர்ந்து போராடிவரும் அரசுத் துறைகளில் ஒன்று இந்து சமய அறநிலையத் துறை. இந்த வழக்குகளையும் மீறி, சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருப்பது, வேற்று மதத்தினர் அல்ல. இந்துக்கள்தான். தவிர, தற்போது கோவில்களுக்குச் சொந்தமாக உள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலமும் இந்து சமய அறநிலையத் துறை அடையாளம் கண்டு கையகப்படுத்தியதுதான். யாரோ ஒரு மடாதிபதி எழுதிவைத்துவிட்டுப் போனதல்ல.

தகவல்4: அறநிலையத் துறை வசம் உள்ள கோவில்களை இந்து ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்து இயங்கும் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமென 1985ல் எம்.ஜி.ஆர் அரசால் உருவாக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்தது.

பதில். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கோவில்கள் தொடர்பாக இரு கமிஷன்கள் நியமிக்கப்பட்டன. ஒன்று நீதியரசர் மகராஜன் கமிஷன். இதன் அறிக்கை 1982ல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆணையமானது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக அனுமதிப்பது தொடர்பானது. நீதியரசர் மகராஜன் ஆணையம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இரண்டாவது கமிஷன், திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேல் திருட்டுப்போனது தொடர்பானது. 1980 நவம்பர் 26ஆம் தேதி திருச்சந்தூர் கோவிலின் நிர்வாக அதிகாரி சி. சுப்பிரமணியம் பிள்ளை தற்கொலைசெய்துகொண்டார். இந்த விவகாரம் மிகப் பெரிதாக உருவெடுத்தது.  டிசம்பர் 2ஆம் தேதி திருச்செந்தூரில் முழு அடைப்பே நடைபெற்றது. இதையடுத்து இந்த விவகாரத்தை விசாரிக்க நீதிபதி பால் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், விசாரணையத் துவங்கும் முன்பாகவே அந்த அறங்காவலர் குழுவைக் கலைக்க வேண்டும் என்றது. நீதிபதி பால், தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பித்த பிறகும், அது சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டாத நிலையில், 1982ல் தி.மு.க. தலைவர் கருணாநிதி அதனை வெளியிட, அவர் மீதே வழக்குத் தொடரப்பட்டது.

மேலே சொன்ன இரண்டு கமிஷன்களுமே அறநிலையத் துறையின் நிர்வாகம் தொடர்பானவையல்ல. யாருக்கும் தெரியாமல் வேறு எந்த கமிட்டி அல்லது கமிஷனை எம்.ஜி.ஆர். நியமித்தார்? தவிர, ஒரு கமிட்டி என்பது சட்டப்பேரவையைவிட மிக உயர்ந்த அமைப்பா?

தகவல் 5: கோவில்களின் நிர்வாகத்தில் தவறு நடந்தால் அதை எடுத்து சரிசெய்து, மீண்டும் அறங்காவலர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அறநிலையத் துறையின் சட்டம் சொல்கிறது.

பதில்: http://www.tnhrce.org/hrce_act_1959.html மேலே இருப்பது அறநிலையத் துறையின் 1959ஆம் வருடச் சட்டத்தின் சுட்டி. இதுதான் திருத்தங்களோடு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதில் எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது?

தகவல் 6: கோவில்களின் பெயரில் நான்கு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கொள்கை விளக்கக் குறிப்பு சொல்கிறது. அத்தனை நிலங்களும் அறநிலையத் துறையிடம் இருக்கின்றனவா? பட்டா யார் பெயரில் இருக்கிறது?

பதில்: கோவில்களின் பெயரில் நான்கு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது என்று அரசு சொல்கிறது என கூறிவிட்டு, அறநிலையத் துறையிடம் இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. இருக்கிறது என்று அவர்கள் சொல்வதையே எடுத்துப்போட்டு, இருக்கிறதா என்றால் என்ன செய்வது?

தகவல்: கோடிக் கணக்கில் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை முறையாக வசூலிக்கவில்லை. கோவில் நிலங்களுக்கான வாடகை நிர்ணயம் மிக மோசமாக இருக்கிறது. பணம் வாங்கிக்கொண்டு யார் யாருக்கோ கோவில் நிலங்களை மாற்றித் தருவது நடக்கிறது. ஒரு ஏக்கருக்கு 245 காசுகள் வாடகையாக வாங்கப்படுகிறது.

பதில்: கடந்த ஆறு வருடங்களில் தனியார் பெயரில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட, 789 கோவில்களுக்குச் சொந்தமான 5559.08 ஏக்கர் பரப்பு நிலங்களைக் கண்டறிந்து கோவில்களின் பெயரில் பட்டா மாற்றியிருக்கிறது அறநிலையத் துறை. கடந்த ஆண்டில் மட்டுமே சுமார் 1120 ஏக்கர் நிலம் இப்படி மீட்கப்பட்டிருக்கிறது. இந்த வேலையைச் செய்ய ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், ஓய்வுபெற்ற நில அளவையர்கள், ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதியத்திற்கு பணிக்கு அமர்த்தியிருக்கிறது அறநிலையத் துறை. கோவில்களையெல்லாம் தூக்கி, மடாதிபதிகளிடம் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

வாடகை நிர்ணயத்தைப் பொறுத்தவரை, மண்டல இணை ஆணையர், திருக்கோவில் செயல் அலுவலர், அறங்காவலர், மாவட்டப் பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுதான் கோவிலுக்குச் சொந்தமான இடத்தின் வாடகையை முடிவுசெய்கிறது.  இதற்கும் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

நிலங்களைப் பொறுத்தவரை, நஞ்சை விவசாய நிலங்களுக்கான குத்தகை 75:25 என்ற விகிதத்தில் உள்ளது. ஏக்கருக்கு 5 குவிண்டால் குத்தகை என்ற விகிதத்தில் ( சற்று முன் பின் இருக்கலாம்) குத்தகை உள்ளது. இதன் இன்றைய விலை நிலவரம் 8000 ரூபாய் வரும். ராஜா சொல்வதைப்போல 245 காசுகள் அல்ல. தவிர, எல்லா நிலங்களும் நஞ்சை நிலங்கள் அல்ல.

இது தவிர, குத்தகைத் தொகையை சரியாகச் செலுத்தாத குத்தகைதாரர்களை வெளியேற்ற தமிழ்நாடு பொது பொறுப்புரிமை - விவசாய நிலங்கள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை - சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கென 10 இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  2016-17ஆம் ஆண்டுகளில் நடந்த 16511 வழக்குகளில், 9629 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 17 கோடியே 83 லட்ச ரூபாய் குத்தகையாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.
ஆக்கிரமிப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 2315 ஏக்கர் விவசாய நிலமும் 468 கிரவுண்ட் பரப்பளவுள்ள மனையும் 179 கிரவுண்ட் பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 2887 கோடிகள்.

இந்தத் தகவல்களை யாரொருவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இதுபோல இன்னும் பல தகவல்கள் அந்த பேட்டியில் தவறாக அளிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான பதில்கள் அடுத்த பாகத்தில்.

ஆனால், இப்படி தவறான தகவல்களைத் தருவதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன? இவ்வளவு பெரிய அமைப்பைக் குலைத்துவிட்டு, நாம் அடையப்போவது என்ன? திருக்கோவில்களை உண்மையிலேயே நேசிக்கும் பக்தன், இதனை குலைக்க உண்மையிலேயே விரும்புவானா? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1187486674716391&id=100003652096964

No comments:

Post a Comment