Tuesday, February 6, 2018

குதுப்மினார் சடலத்தை தோண்டுவதா?

குதுப் மினார் சடலத்தை தோண்டுவதா?
====எஸ்.ஜி.ரமேஷ்பாபு====

(இன்றைய தீக்கதிர் நாளேட்டில் வந்துள்ள கட்டுரை)

வரலாற்று பின்புலத்தில் புனைவுகளை உருவாக்கும் போது மிகவும் சமூக பொறுப்புணர்வோடு உருவாக்கவேண்டியது அவசியமாகும். அதுவும் வரலாற்றில் வாழ்ந்த பாத்திரங்கள் எனும்போது அந்த பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது. கவிதையாக, காவியமாக உள புனைவுகளை திரைப்படமாக மாற்றுவதில் எந்த தவறும் இல்லைதான். ஆனல் நிகழ்கால அரசியல் சூழலையும், சமூக சூழலையும் புரிந்துக்கொள்வது அவசியமில்லையா? அக்கரையற்ற அப்படைப்பு சமூக தளத்தில் உருவாகும் எதிர் விளைவுகளை கணக்கில் கொள்ளாமல் எப்படி படைப்பின் ஜனநாயகத்தை பாதுகாக்கும்?

இஸ்லாமியர்களின் மீதான காழ்புணர்வையே மூலதனமாக முன் வைத்து இந்துத்துவா அமைப்புகள் தினம் ஒரு கலவரம் செய்யும் சூழலில், அவர்களை பாதுகாக்கும் ஆட்சியமைப்பு அமைந்துள்ள நிலையில், வரலாற்று காலம் தொட்டே இஸ்லாமிய ராஜாகள் இந்து ராஜாக்கள் மீது வன்மத்துடன், துரோகம் செய்து அல்லது போர்களத்தில் சூழ்ச்சியால் கொலை செய்வது போலவும், அவர்கள் பெண் பித்தர்கள் அதற்காக ஒரு நாட்டையே அழிப்பர்கள் என்ற படைப்பு எந்த விளைவை பொதுதளத்தில் உருவாக்கும்?

சிங்கள தேசத்தில் முத்துகளைப் பெறுவதற்காகச் செல்கிறார் சித்தோடு அரசர் ராவல் ரத்தன் சிங் (ஷாகித் கபூர்). அப்போது காட்டில் இளவரசி பத்மாவதி (தீபிகா படுகோன்) மானைக் குறி வைத்து செலுத்தும் அம்பு, ரத்தன் சிங் மார்பைத் துளைக்கிறது. இதனால் காயம்பட்ட ரத்தன் சிங்குக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, அவரை குணமடையச் செய்கிறார். இதனிடையே இருவருக்கும் காதல் மலர, திருமணம் புரிந்து பத்மாவதியை சித்தோடுக்கு அழைத்து வருகிறார் ரத்தன் சிங். பத்மாவதியின் அழகில் மயங்கும் ராஜகுரு, ரத்தன் சிங்- பத்மாவதி தனித்து இருக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கிறார். இதனால் பத்மாவதியின் கூற்றுப்படி, ரத்தன் சிங் உத்தரவால் ராஜகுரு நாடு கடத்தப்படுகிறார்.

டெல்லியை வந்தடையும் ராஜகுரு, அரசன் அலாவுதீன் கில்ஜியை (ரன்வீர் சிங்) சந்தித்து பத்மாவதியின் பேரழைக் கூறி மதி மயங்கச் செய்கிறார். கண்ணால் பார்த்திராத பத்மாவதிக்காக அலாவுதின் கில்ஜி டெல்லியில் இருந்து சித்தோடு நோக்கி படையெடுக்கிறார். சமாதானப் பேச்சுவார்த்தை என்று சொல்லி வஞ்சகமாக ரத்தன் சிங்கை சிறைபிடிக்கிறார். ரத்தன் சிங் விடுவிக்கப்பட வேண்டுமானால் பத்மாவதி டெல்லி வந்தாக வேண்டும் என்று கில்ஜி சொல்ல, பத்மாவதி டெல்லி சென்று ரத்தன் சிங்கை தந்திரமாக மீட்டு வருகிறார். அதனால் ஆத்திரமடைந்த அலாவுதீன் சித்தோடு மீடு படையெடுக்கிறார். போரில் ரத்தன் சிங்கை நயவஞ்சகமாக கொன்று கோட்டைக்குள் நுழையும் போது பத்மாவத் நூற்றுக்கனக்கான பெண்கள் கூட்டத்துடன் தீயில் இறங்கி கரைந்து போகிறார்கள். இதுதான் படம்.

மாலிக் முகம்மது ஜயஸி என்னும் சூஃபி கவிஞர் 1540ல் எழுதிய பத்மாவத் என்னும் காவியத்தில் உள்ள கதாபாத்திரம்தான் பத்மாவதி என்னும் பத்மினி. அவர் வாழ்ந்தமைக்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. அலாவுதீன் மறைந்து ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்டது இக்காவியம். இக்காவியத்தின் அடிபடையில் எடுக்கப்பட்டப் படம் என்றுதான் அறிமுகத்தில் போடுகின்றனர். ஆனால் இந்த படம் இந்த காவியத்திற்கும் உண்மையாக இல்லாமல், வரலாற்றிற்கும் உண்மையாக இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. பத்மாவதியின் கணவர் ரதன் சிங் கும்பல்கரின் தேவபாலரிடம் போரிட்டு இறந்ததாகவே காவியம் சொல்கிறது. வரலாறும் அதுவே. ஆனால் இப்படத்தில் அலாவுதீன் கில்ஜியிடம் போரிட்டு வஞ்சகமாகக் கொல்லப்பட்டதாக காட்சிப்படுத்தப்பட்டுளது.

மாலிக் கபூர், தில்லி குதுப் மினார் வாளகத்தின் பின்புறத்தில் சுல்தான் அலாவுதீன் கில்ஜிக்கு கட்டிய சாமாதியை, 702 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுத்து கேவலப்படுத்தும் படைப்பு இது. பத்மாவத் படத்தின் பாத்திர படைப்புகளை கூர்ந்து நோக்கினால் பல அப்பட்டமான அநியாயங்கள் தெரியும். அதுவும் அலாவுதின் கில்ஜி, தனது தனது நிச்சயதார்த்த சமயத்தில் ஒரு பெண்ணை சுகிப்பதும், அதை கேட்கும் ஒரு மந்திரியை கொலைசெய்வதும், அத்தர் நறுமனத்தை பூசவேண்டும் என்றால்கூட தனது பணிப்பெண்னின் மார்பகங்களில் மொத்தமாய் ஊற்றி அவளை தன்னுடன் அணைத்து பூசிக்கொள்வது போலவும், ஒரு பெண்ணிற்காக ஆறுமாதம் கோட்டைக்கு வெளியில் கொத்தளம் அமைத்து காத்திருபது போலவும், ஒவ்வொரு நொடியும் காமம் ததும்பும் கண்களோடு உள்ள உடல்மொழி அசைவும், வெருக்கத்தக்க நடையும் என அலாவுதின் கில்ஜியை எப்படி வெறுக்க வைக்க முடியுமோ அப்படி வெறுக்கடிக்கின்றனர்.

ஜலாலுதீன் கில்ஜியும் அவரது மருமகன் அலாவுதீன் கில்ஜியும் முற்றிலும் பண்பாடற்ற காட்டுமிராண்டிகளை போல சித்தரித்திருப்பது மிகவும் திட்டமிட்ட சித்தரிப்பாகவே படுகிறது. தோலாடைகள், மூர்க்கமான முகங்கள், வெறிகொண்டவர்கள் போன்ற நடத்தைகள். சாப்பிடுவதில்கூட ஒருவகை காட்டுமிராண்டி தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் அலாவுதீன் கில்ஜி ஆடும் மோசமான வெறியேற்றும் நடனம் கேவலமான ரசனையின் வெளிப்பாடு.

துருக்கிய சுல்தான்கள் இப்படத்தில் காட்டப்படுவதுபோல நாகரீகம் இல்லாத பாலைவனப் படையெடுப்பாளர்கள் அல்ல. இந்தியப் கலாச்சார அளவு தொன்மை பொருந்தியவை துருக்கிய, பாரசீகப் கலாசாரங்களும், அவற்றின்மேல் இஸ்லாம் மார்கம் உருவாக்கிய தாக்கத்தால் எழுந்த அரசர்கள் அவர்கள். நெடுங்கால கலாச்சரம் உருவாக்கிய மிக பொருத்தமான பழக்க வழக்கங்கள், நுண்கலைகள், உயர்தர இலக்கியங்கள் கொண்டவர்கள். இன்னும் சொல்லப்போனால் அத்தகைய பிரம்மாண்டமான அரசவைச்சூழல் அன்று இந்திவில் இருக்கவில்லை என்பதே உண்மை. சுல்தான்களுக்குப் பின் இந்திய அரசர்கள் பலரும் அவர்களின் மரபைத்தான் தொடர்ந்தனர் எனலாம். சிவாஜியும் கிருஷ்ணதேவராயரும் அணிந்துள்ள உடைகள் கூட இந்திய உடைகள் அல்ல, சுல்தானிய பாணியிலான உடைகளே.

இன்றைய வடிவில் உருவான இந்துஸ்தானி இசை சுல்தானிய அவைகளில் கிளந்தெழுந்த்துதான். தொன்மையான இந்திய இசைக்கும் துருக்கிய, பாரசீக இசைகளுக்கும் நடுவே நிகழ்ந்த கலப்பின் விளைவு. அலாவுதீன் கில்ஜியின் அவையில்தான் அமிர் குஸ்ரு இருந்தார். இந்திய இலக்கியத்திலும் இசைமரபிலும் இன்றும்கூட தவிர்க்க முடியாத செல்வாக்கு பெற்றவர் அவர்.

அலங்காரக்கலைகளின் அற்புதம் சுல்தான்களின் ஆட்சி. நகைகள் செய்வதில் இந்திய கைத்திறனிலும், இந்திய ஆலயங்களின் பட்டுநூல்பின்னல், அலங்காரப்பின்னல் பணிகளில்கூட இஸ்லாமியக் கைவினைஞர்கள் படந்திருக்க காரணம் இதுதான். நறுமணங்களை உருவாக்கும் கலை, சமையற்கலை ஆகியவற்றிலும் அவர்கள் சிறந்து விளங்கினர். எழுத்துருக்கலை உயர்ந்த்தும் அப்போதுதான். குர்ஆனை அலங்காரமாக பட்டிலும் தோலிலும் எழுதும் கலை அக்காலகட்டத்தில்தான் தொடங்கியது.

போர்த்திறனிலும் அலாவுதீன் கில்ஜி சலைத்தவர் அல்ல. தனது அரசை மங்கோலியர்களின் கொடூர அதிரடி தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்ள வடமேற்கு எல்லைபுற பகுதி நெடுகிலும் கோட்டை கொத்தளங்கள் அமைத்து, காவலுக்கு பெரும் படையணிகள் நிறுத்தினார். தொடர்ந்து பலரையும் வென்றுள்ளார்.

ஆட்சி நிர்வாகத்தை தொடந்து கண்காணிக்க கில்ஜி மிகச் சிறந்த உளவுப்படையை வைத்திருந்தார். எனவே தனக்கு எதிரான கலகங்களையும், சதித் திட்டங்களையும் முளையிலேயே கிள்ளி எறியமுடிந்தது. தனக்கு எதிராக செயல்படும் கலகக்காரர்களின் சொத்துகளையும், மதகுருமார்களின் சொத்துகளையும் கைப்பற்றப்பட்டது. அரச துரோகிகளுக்கு கடும் தண்டனை வழங்கினார். எனவே பிரபுக்களும், நெருங்கிய உறவினர்களும், மதகுருமார்கள் எவரும் கில்ஜிக்கு எதிராக சதித்திட்டம் அல்லது கிளர்ச்சி செய்ய முன் வரவில்லை. தனது நாட்டில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கையூட்டு பெறுவதை தடுத்து நிறுத்தினார். வேளாண்குடி மக்களிடமிருந்து கூடுதல் நிலவரி வசூலிப்பதை தடுத்தார்.

அலாவுதீன் கில்ஜி குறிகோளுடன் காட்டிய உறுதி மிக்க ஆட்சியாளர். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வலுவான, நிலையான படையணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருட்களுக்கு சரியாக கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனை கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ் சந்தைகளில் விளைபொருட்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார். கூடுதல் விலையில் விளைபொருட்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. சரியான விலை கொடுத்து மக்கள் பொருட்கள் வாங்க இது உதவியது.. தேவைக்கு அதிகமான விளைபொருட்கள் அரசு கிட்டங்கிகளில் சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சி காலத்தில் விளைபொருட்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.

இத்தகைய தரவுகளை சொல்ல அடிபடை காரணம் இத்தகைய மன்னரைதான் வெறும் காமம் கொண்டலையும் கொடூரனாக இப்படம் காட்சி படுத்தியிருபதே. சரி கில்ஜி எந்த தவறும் செய்யாத மன்னரா? அத்தகைய முடிவுக்கும் போக முடியாது. படைகள் சென்ற இடங்களில் கொலை, கொள்ளை நடந்தது உண்மை. அது அந்த கால போர்களங்களின் நேரடி விளைவு. ஏனெனில் போர்வீர்ர்களின் ஊதியம் அவர்கள் அடிக்கும் கொள்ளையையை வைத்தே தீர்மானிக்கப்பட்டது. சோமாநாதபுரம் ஆலையம் சூரையாடபட்டதும், தமிழகத்தில் மதுரை, சிதம்பரம் கோவில்கள் கொள்ளையிடப்பட்டதும் இதன் அடிப்படையில்தான். இஸ்லாமிய மன்னர்கள் மட்டடுமல்ல, இந்திய அரசர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

உதாரணமாக காவி மதவெறியர்கள் கொண்டாடும் வீரசிவாஜி இரண்டுமுறை சூரத்தை கொள்ளையிட்டார். இவை இரண்டு குறித்தும் விரிவான கணக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. மராட்டியர்கள் கொள்ளையின் போது சிருங்கேரியில் உள்ள பெண் தெய்வம் சாராதாவின் கோவில் சேசப்படுத்தப்பட்டது. முஸ்லீம் மன்னரான திப்புசுல்தான் அதை மீண்டும் நிறுவினார் என்பது வரலாறு. காஷ்மீரை ஆண்ட மன்னர் ஹர்ஷா தேவ் இந்துக்கோவில்களை இடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த சிலைகளை உருக்கும் முன்பு அவற்றின் மீது மனித மலங்களையும், சிறுநீரையும் கொண்டு அசிங்கப்படுத்தினார். இந்த எல்லா விவரங்களும் படங்களுடன் கல்ஹனரின் “ராஜத்தரங்கிணி”யில் கூறப்பட்டுள்ளது. அவர் தனது வருவாய்த்துறையில் “கடவுள் கவிழ்ப்பு” (தேவோட்படன்) எனும் தனிப்பிரிவையும் கூட்த் துவக்கினார். (ஆதரம்:கோவின் பன்சாரே எழுதிய மாவீரன் சிவாஜி)

மற்றொன்று இப்படத்தின் இறுதிக்காட்சி, பத்மாவதி தன்னுடன் நூற்றுகாணக்கான பெண்களுடன் சிதையில் இறங்கும் காட்சி. இதை சதி என்ற உடன்கட்டை ஏறுதல் என்பதோடு இணைத்துப்பார்க்க முடியுமா என விவாதத்திற்குறியதே. தெரியவில்லை. ஏனெனில் உலகின் நடந்த எல்லா போர்களும் இறுதியில் பெண்கள் உடலின் மீதுதான் ஆதிக்கத்தை நிலைநட்டியே வெற்றியை அறிவிக்கின்றன. ஒரு நாட்டை வெற்றி பெற்றதும் அங்குள்ள பெண்கள் கூட்டாக வன்புணர்வு செய்யப்படுவதும், கொடூரமாக கொள்ளப்படுவதும் மிக இயல்பாக நடந்துள்ளது. இதை எதிர்க்கும் ஒரு செயலாக பெண்கள் கூட்டு தற்கொலை செய்துகொள்ளும் மரபும் உருவாகியது.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இருதிசையை நோக்கி சென்ற கூட்டத்தில் உள்ள மதவெறியர்கள் செல்லும் வழியில் நடத்திய கொடூரங்கள் சகிக்கமுடியாத வடுக்களை எற்படுத்தின. இருபக்கமும் எல்லையில் உள்ள பல கிராமங்களில் எதிர் மத்த்தினர் கைகளில் சிக்கி கணவன், சகோதரன், தந்தை கண்முன்னால் கூட்டு வன்புணர்வுக்கு பெண்கள் ஆளாகும் நிலையில் குடும்பத்தார்கள் கூட்டாக எரிந்தோ, விஷமருந்தியோ தற்கொலை செய்துக்கொண்ட கண்ணீர்மிக்க கதைகள் ஏராளம் உண்டு நம்மிடையே. போர் என்றபெயரில் இலங்கையிலும், மியான்மரிலும் சமகாலத்தில் நடந்த சம்பவங்கள் என்ன சொல்கின்றன? ஆக இதை சதி என்பதா? எதிர்ப்பியக்கம் என்பதா? என்ற விவாதம் தவிர்க்க முடியாத ஒன்று.

வரலாற்று பதிவு என்பது மிகவும் நிதானத்துடன் விருப்பு வெறுப்பு இல்லாமல் பதிவு செய்யபடவேண்டியதாகும். ஆனால் இந்த கவலை கொஞ்சமும் இல்லாமல், மதவெறியர்கள் ஆட்சியில் இருக்கும் சூழலில் காவியத்தின் அடிப்படையில் நேர்மையற்ற ஒரு திரைப்பட்த்தை எடுப்பது, இந்த பொறுப்பற்ற படத்தை எதிர்த்து உண்மையில் இஸ்லாமியர்கள் எழுப்பவேண்டிய எதிர்ப்பை இந்து மதவெறியர்கள் எழுப்பியதும் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது.

மிகவும் நுட்பமாக தனது மதவெறி முன்முடிவுகளை மெல்ல மெல்ல அமலாக்கிவரும் இந்துத்துவ மதவெறியர்கள் இப்படத்தை முன்வைத்தும் அரசியல் செய்வதும், போரட்டத்தை முன்னெடுப்பதும் தற்செயலான ஒன்றல்ல. மிகவும் திட்டமிடப்பட்டதே. வரலாற்றை மிகவும் கவனத்துடன் கையாளும் நிலைக்கு முற்போக்காளர்களை தள்ளுகின்றனர். கவனத்துடன் கையாளுவோம்

https://m.facebook.com/story.php?story_fbid=1674707515906070&id=100001005148037

No comments:

Post a Comment