Friday, February 23, 2018

இந்தியப் பஞ்சாலைத் தொழில்களைச் சூழும் இருண்டகாலம்

RS Prabu
Via facebook
2018-02-23

கட்டுரையின் தலைப்பு:

கார்ப்பரேட் கம்பெனிகளை அழித்தொழித்து இந்திய விவசாயத்தைக் காப்பாற்றி உழவர்களின் வருமானத்தை 2022-இல் இருமடங்காக்க இருக்கும் மோடி அரசாங்கம்.

அல்லது

இந்தியப் பஞ்சாலைத் தொழில்களைச் சூழும் இருண்டகாலம் (உங்களுக்குப் பிடித்த தலைப்பை வைத்துக்கொள்ளலாம்).

கட்டுரையில் வரும் முக்கிய பாத்திரங்கள்: மோடி சர்க்கார், மான்சாண்டோ, நுஜிவீடு சீட்ஸ், பிளாக்ஸ்டோன் இன்வெஸ்ட்மென்ட்ஸ், Competition Commission of India (CCI) மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்கள்.

ஏர்செல் என்ற ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்பம் இரண்டொரு நாட்களாக இயங்கவில்லை என்றதும் மக்கள் துடித்துப் போய்விட்டனர். இத்தனைக்கும் நான்கைந்து போட்டி நிறுவனங்கள் இன்னமும் இருக்கின்றன; அலைபேசித் தொழில்நுட்பம் என்பது இந்தியாவில் வெறும் பதினைந்து வருட பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது. இதைப்போலவே வெறும் பதினைந்து வருட வரலாற்றை மட்டுமே கொண்ட B.t. தொழில்நுட்பம் கொண்ட பருத்தியானது மூடுவிழா காண்கிறது. ஆனால் இஃது ஒரு வெற்றியாக ஒருசாராரால் கொண்டாடப்பட்டு, பிரச்சாரமும் செய்யப்பட்டு வருகிறது.

பி. டி. பருத்தியின் பயன்பாடு செல்போன் தொழில்நுட்பம் போல ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது. பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒருபோதும் இதைக் குறை சொல்வதில்லை என்பதே இதன் சாட்சி. மற்ற தொழில்களில் உள்ள கருவிகளைப் போல Outdate, Update  என்பது இதிலும் உண்டு. செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் சாகின்றன என்பதைப் போல ஒருசில சர்ச்சைகள் பி.  டி. பருத்தியைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கிறது. அதைத் தனியாக அலசலாம்.

பி. டி. பருத்திக்கு இளஞ்சிவப்புக் காய்ப்புழுக்கள் எதிர்ப்புத்திறன் பெற்றதால் கடுமையாகப் பரவுவதோடு,  தாக்குதல் அதிகரித்து மகசூல் வெகுவாக குறைந்துவருகிறது. வட இந்தியாவைக் காட்டிலும் தமிழகத்தில் தாக்கம் இந்த ஆண்டு குறைவு என்றாலும் அரசு வேளாண்மைத்துறை மிகவும் குறைவான எண்களையே காட்டி வருவதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டெங்கு காய்ச்சலை 'சாமார்த்தியமாக' அரசு கையாண்டதை இதனுடன் தாராளமாக ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

இந்திய பஞ்சாலைத் தொழில்துறைகளுக்கு முன்னர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள இந்தப் பிரச்சினையின் முழு வடிவத்தைப் பார்ப்போம். இந்தியாவின் மிகப்பெரிய பருத்தி விதை நிறுவனம் ஐதராபாத்தைச் சேர்ந்த Nuziveedu Seeds. மான்சாண்டோவிடம் பி.டி. தொழில்நுட்பத்தை இராயல்ட்டி கட்டுவதாக ஒப்பந்தம் போட்டு வாங்கித் தனது இரகங்களில் புகுத்தி விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது. (பி.டி. தொழில்நுட்பம் என்பது சிம் கார்டு மாதிரி. பருத்தி இரகங்கள் என்பது ஹேண்ட்செட் மாதிரி. பல நிறுவனங்கள் தங்களிடம் இருந்த இரகங்களில் பி.டி ஜீனைப் புகுத்தி பிராந்திய அளவில் மாபெரும் வெற்றிகண்டன). இந்தியாவின் மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலைகளை வைத்திருக்கும் நிறுவனங்களில் நுஜிவீடும் ஒன்று. பொள்ளாச்சியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் பல காற்றாலைகளை நுஜிவீடு சீட்ஸ் லிமிடெட் என்ற பெயரில் காணலாம்.

2011-இல் நுஜிவீடு நிறுவனத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான Blackstone investments நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.  2015-16-வாக்கில் பிளாக்ஸ்டோன் நிறுவனம் இலாபத்துடன் வெளியேற விரும்புகிறது. இதனால் வேறொரு முதலீட்டாளரை உள்ளே கொண்டுவரவேண்டும்; சொந்தமாக எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் - இராயல்ட்டி மட்டும் கட்டிக்கொண்டு - கிட்டத்தட்ட வெறும் ஹார்டுவேர் விற்கும் கம்பெனி என்ற நிலையில் இருப்பதால் புதிய முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர். பங்குச்சந்தையில் பட்டியலிட்டால் தங்களின் பங்குகளைக் கழட்டி விட்டுவிடலாம்  என்று கருதிய பிளாக்ஸ்டோன், IPO வெளியிடும்படி நிர்பந்திக்கிறது. அந்நேரத்தில் மான்சான்டோவுக்கு இராயல்ட்டி கட்டும் அற்பத் தொகையைப் பெரிதுபடுத்தி அதைத் தவிர்த்தால் பிளாக்ஸ்டோனுக்கு லாபம் அதிகமாகும் என்று  நிரூபிக்க நுஜிவீடு நிறுவனம் ஆயத்தமாகிறது.

மரபணுமாற்றத் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு தொழில்நுட்ப விவகாரங்களை இந்தியாவில் அனுமதிக்காமல் இருந்தால் மட்டுமே தங்களது சாம்ராஜ்யம் இராமராஜ்யமாகும் என்று நம்பி செயல்பட்டுவரும் RSS அமைப்பின் பல கிளை அமைப்புகளின் உதவி கோரப்படுகிறது. ஆர்எஸ்எஸ்-இன் பிரதிநிதியான மத்திய அமைச்சராக இருக்கும் இராதாமோகன்சிங்கிடம் நுஜிவீடு நிறுவனத்தின் தலைமை இதை வேண்டுகோளாக வைக்கிறது. கறுப்பணத்தை மீட்டுவிடுவோம் என்று சொல்லி இருக்கும் நோட்டுகளையும் பிடுங்கிக்கொண்டு ஓடவிட்டாலும், எப்படி ஆதரவு தெரிவிக்க ஒரு கூட்டம் இருக்கிறதோ அதேபோல் விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக்குவோம் என்று சொல்லி இருப்பதையும் பிடுங்கிக்கொண்டு துரத்தினால் மட்டுமே இராமராஜ்யம் சாத்தியம் என்பதைப் படக்கென்று பிடித்துக்கொண்ட அமைச்சர் இந்த இராயல்ட்டி விவகாரத்தில் Competition Commission of India(CCI)-வை களத்தில் இறக்கி விடுகிறார்.

காப்புரிமை பெற்ற ஒரு பூச்சிக்கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத்தை அத்தனை இடங்களிலும் கையெழுத்துப் போட்டு ஒரு நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனம் வாங்கி பயன்படுத்துகிறது. இதில் இராயல்ட்டி தொகை அதிகமாக இருக்கிறது, அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லியே CCI களமிறங்கியது. இந்நிலையில் என்னது  காந்தி செத்துட்டாரா,  விதைகளுக்குக் காப்புரிமையா என்று பல அமைப்புகள் இரகளையில் ஈடுபட்டன. இந்திய விதை நிறுவனங்களின் அசோசியேசன் நுஜிவீடு தலைமையில் இரண்டாக உடைகிறது. பல நிறுவனங்கள் இராயல்ட்டி தரமாட்டோம் என்று சந்தடிசாக்கில் கிடைத்த இலாபத்தை விழுங்கிவிட்டன. இந்நிலையில் பி. டி. தொழில்நுட்பம் பெயிலாகிவிட்டது என்று ஆங்காங்கே உழவர்கள் வழக்குத் தொடர  ஆரம்பித்த நிலையில் பி. டி. technology provider ஆகிய மான்சான்டோவே அதற்கு பொறுப்பு என்றும் தாங்கள் வெறும் ஹார்டுவேர் சப்ளையர்கள் என்பதுமாதிரியான பதிலை நுஜிவீடு உட்பட பல நிறுவனங்கள் சொல்ல ஆரம்பித்தன. அதாவது இராயல்ட்டியும் தரமாட்டார்களாம், அந்த தொழில்நுட்பத்தில் ஏதாவது கோளாறு என்றாலும் அதற்கும் பொறுப்பாக மாட்டார்களாம்; மான்சான்டோவைக் கேளுங்கள் என்பார்களாம். அதாகப்பட்டது  விண்டோஸ் திருட்டு வெர்ஷன் போட்டுக்கொள்ளலாம், ஆனால் வைரஸ் வந்தால் மைக்ரோசாஃப்ட்காரன்தான் பதில் சொல்லவேண்டும்.

ஜியோ சகட்டுமேனிக்கு விலையைக் குறைத்து மற்ற நிறுவனங்களை அலறவிட்டதையெல்லாம் 'free tradeனா அப்படித்தாம்பா இருக்கும், வாடிக்கையாளர்களுக்குப் பிரச்சினைன்னாத்தான் நாங்க வரமுடியும், அதுவரைக்கும் அனுசரிச்சு போங்கப்பா' என்ற CCI, இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான இராயல்ட்டி விவகாரத்தில் சீனிலேயே இல்லாத வாடிக்கையாளர்களைக் காரணம் காட்டி ஒரு தொழில் துறையையே ஆட்டம் காண வைத்து இராமராஜ்யத்தை விரிவாக்க உதவியது என்றால் மிகையாகாது.

இயற்கை விவசாய ஆர்வலர்களை சாதி/மத  வெறியர்கள் என்றால் சிலர் வருத்தப்படலாம். ஆர்கானிக் விவசாயிகள் வேறு ஆர்கேனிக் விவசாய ஆர்வலர்கள் வேறு என்பதை இந்த இடத்தில் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த ஆர்கேனிக் விவசாய ஆர்வலர்கள் முட்டாள்கள் போலத் தோன்றினாலும் காரியப் பைத்தியக்காரர்கள் வகையினர். ஒரு ஏக்கர் நடவுசெய்யத் தேவைப்படும் 450 கிராம் பருத்தி விதை 950 ரூபாய். இது மிக அதிகமான விலை, பகல் கொள்ளை, உழவர்களைச் சுரண்டுகிறார்கள் என்பதே இவர்களது வாதம். ஆனால் கள நிலவரம் முற்றிலும் வேறு; சான்றாக, சில பயிர்கள் ஓர் ஏக்கர் நடவு செய்யத் தேவைப்படும் விதை அளவும், அதன் விலையையும் பார்ப்போம்.

மக்காச்சோளம் - 7 கிலோ - 2200 ரூபாய்
சூரியகாந்தி - 2 கிலோ - 1300 ரூபாய்
தக்காளி - 40 கிராம் - 1600 ரூபாய்
தர்பூசணி - 350 கிராம் - 2500 ரூபாய்

அமெரக்க வர்த்தக சபை நமது பிரதமர் அலுவலகம் வரை முறையிட்டுப் பாரத்துவிட்டது. குஜராத்தில் பன்னாட்டு நிறுவனங்களையும், தொழில்நுட்பங்களையும், புல்லட் இரயிலையும் வரவேற்கும் நீங்களா  இப்படிச் செய்வது என்று அரற்றிய அமெரிக்க பிரதிநிதிகளும், மான்சான்டோவும் நீங்களாகவே ஒருநாள் வந்து நிற்கத்தான் போகிறீர்கள், அப்போது நாங்கள் சொல்வதுதான் விலையாக இருக்கும் என்று சூசகமாகத் தெரவித்துவிட்டு மூன்றாம் தலைமுறை பி. டி. தொழில்நுட்பத்தை வணிகப்படுத்துவதற்காக போட்டிருந்த  விண்ணப்பத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு இந்தியாவில் பருத்தி வியாபாரத்தின் துறையை விற்றுவிட்டு வெளியேறிவிட்டனர்.

கொஞ்சம் கொஞ்சமாக காசு பார்க்க ஆரம்பித்த ஜின்னிங் ஆலைகள் தரமான பஞ்சு வரத்து இல்லாததால் அலற ஆரம்பித்துவிட்டன. பஞ்சாலைகளுக்கான இயந்திரங்கள், உதிரிபாகங்கள் விற்பனை அதளபாதாளத்தை நோக்கி இறங்கிவருகிறது.  அதைச் சார்ந்த தொழில்கள் ஆட்டம் காணும் என பல தொழில்துறை சம்மேளனங்கள் அரசை எச்சரித்துவிட்டன. பதஞ்சலி நிறுவனம் சுதேசி பி. டி. தொழில்துட்பத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அரசாங்க வேளாண் ஆராய்ச்சி அமைப்புகள் வேதங்களில் GMO என்ற கோணத்தில்தான் இன்னும் இயங்கி வருகின்றன.

மிகப்பெரிய ஸ்பின்னிங் ஆலைகளை வைத்திருக்கும் நுஜிவீடு, தரமான பஞ்சு வரத்து இல்லாமல் எப்படி இலாபமடையும் என்ற கேள்வி எழலாம். உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும்போது பஞ்சு இறக்குமதி திறந்துவிடப்பட்டு மும்பை, அகமதாபாத்தின் சந்து பொந்துகளில் பான்மசாலாவைக் குதப்பிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சில பெயர் தெரியாத சேட்ஜீக்கள் ஹாங்காங்கில் குடோன் வைத்திருப்பதாகக் கணக்கு காட்டி கப்பலிலிருந்து இறக்காமலேயே சீனாவிலோ, வேறு நாடுகளிலோ இருந்து தருவித்து இந்தியாவிலுள்ள பெரிய ஜின்னிங் ஆலைகளுக்கு மட்டும் சப்ளை செய்வார்கள். அந்த ஆலைகள் தேர்ந்தெடுத்த பெரிய ஆலைகளுக்கு மட்டுமே சப்ளை செய்யும். சின்னச்சின்ன ஜின்னிங், ஸ்பின்னிங் ஆலைகளுக்கு அந்த விலை கட்டுபடியாகாது என்பதும் அவை மெல்ல மெல்லச் சாகும் என்பதும் அவற்றிற்கு வங்கிகள் வழங்கிய கடன்களும் சாகும் என்பதோடு  வழக்கம்போல பொதுமக்களின் வைப்புநிதிகளுக்கு  வட்டி குறைக்கப்பட்டு பணப்புழக்கம் சரிக்கட்டப்படும் என்பதும் யாவரும் அறிந்ததே. ஸ்வராஜ்யா போன்ற இணையதளங்கள் இதை survival of the fittest எனக் கொண்டாடும்.  'Free tradeனா அப்படித்தாம்பா இருக்கும், கஸ்டமர் பாதிக்கப்படறாங்கன்னத்தான் நாங்க வருவோம்' என்று சொல்லிவிட்டு CCI வழக்கம்போல மிக்சர் தின்னும் என்பதும் தெரிந்ததே.

பசி, பஞ்சம், எதிர்காலத்தைப் பற்றிய பயம், நிலையின்மை வாட்டும்போது மட்டுமே மனிதன் இறைவனை நினைத்து ஏங்குவதும், கடவுள் அவதரிப்பார் என்று நம்பி நாட்களைக் கடத்துவதும் அதிகமாக இருக்கும்.  நடுத்தர வர்க்கம் அதிகமாக அதிகமாக மக்களின் நுகர்வு அதிகமாவதோடு, தேவைகளும் விழிப்புணர்வும்,  அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகும். தமிழகத்தில், கேரளாவில் அத்தகைய சமூக நிலை ஏற்பட்டுள்ளதே இதற்கு உதாரணமாகும். சங்கப்பரிவாரங்கள் தங்களது நீண்டகால survivalலுக்காக மிக அதிக மக்கள் ஈடுபட்டிருக்கும் துறைகளில் அரசாங்க நெருக்கடிகள் மூலம் நசுக்கி 25 வருடம் பின்னே இழுத்துவிட்டுள்ளனர்.
இதன் தொடர்விளைவுகளால்  பல தொழில்துறைகள் ஆட்டம்காணும், நடுத்தர வருவாய் வர்க்கம் மேலும் நசுங்கும் என்ற புரிதலே இல்லாமல் நிச்சயமாக அதிசயம் நடக்கும் 2022-இல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று சிலர் சொல்லுவார்களேயானால் அவர்கள் அசாத்தியமான தேசபக்தியுள்ள தேசாபிமானிகள் என்பதில் ஐயம் வேண்டாம். மக்கள் பஞ்சப்பராரிகளாக இருக்கும்வரை கடவுளர்கள் பெயரைச்சொல்லி ஆள்பவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் தோன்றுவதில்லை என்பதே வரலாறு நமக்குப் போதிக்கும் பாடம். 

பி. டி. தொழில்நுட்பம் இல்லாவிட்டால் பருத்தி விவசாயிகள் அழிந்துவிடமாட்டார்கள்; மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவிக்க இப்படி ஒரு கட்டுரையா, என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று தோன்றலாம். பி.டி தொழில்நுட்பத்தால் பல இலட்சம் லிட்டர் பூச்சிக்கொல்லிகள் மண்ணில் கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. ஒரு வெள்ளாமை எடுக்க 30-40 முறை பூச்சிக்கொல்லி தெளிப்பு என்பது 5-8 முறை (அதுவும் வலுகுறைந்த சாதாரண இரசாயனங்கள்) என்ற அளவுக்கு கடந்த வருடம் வரை இருந்தது.  இன்று நடவு செய்த நாளிலிருந்து வாரம் ஒரு தெளிப்பு என பட்டியல் தயாரிக்கப்பட்டு 1990-களில் பின்பற்றப்பட்ட முறையே தூசிதட்டி இறக்கிவிடப்பட்டுள்ளது. வாழ்வா சாவா பிரச்சினை என்று வரும்போது IPM என்பதெல்லாம் காகிதத்தில் மட்டுமே இருக்கும். சிறு கூட்டத்தினரது முட்டாள்தனமான சிந்தாந்த அளவிலான கார்ப்பரேட் எதிர்ப்பால் இலட்சக்கணக்கான லிட்டர் பூச்சிக்கொல்லிகள் நமது மண்ணில் இறங்கி நீர்நிலைகளில் கலந்து வர இருக்கின்றன.

சுதேசி என்ற வாதம் நம்மிடம் ஏதாவது இருந்தால்தானே விளங்கும்? மான்சாண்டோ, பேயர், டவ், டூபாண்ட், சின்ஜென்டா, அடாமா என எல்லாவற்றையும் விரட்டி விடுவோம். நம்மிடம் சுதேசியாக என்ன இருக்கிறது, அதை வைத்து இவ்வளவு பெரிய நாட்டின் தேவைகளைச் சமாளிக்க இயலுமா? நமது படைபலத்தை அதிகரிக்கும்வரை எதிரிகளோடு சமரசமாகப் போவதுபோல போக்குக்காட்டிவிட்டு, தாக்குதலை நடத்துவதுதான் சாமர்த்தியம் என்ற சாணக்கியத்தனங்கள் நடைமுறையில் பயன்படுவதேயில்லை. நம் முன்னோர்கள் காலத்தில் கணிப்பொறி என்ற ஒன்றே இல்லை;  ஆனால் ஆர்யபட்டர், இராமானுசன்கள் இருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் இன்று வீட்டில் எப்படி அடுப்பு எரியும்? தங்க ஊசி இருக்கிறது என்பதற்காக கண்ணைக் குத்திக் கொள்ள முடியாது. ஆனால் அதுதான் நடக்கிறது.

கட்டுரையாளர்: ஆர். எஸ். பிரபு
(சமூக அக்கறையாளர், வேளாண் விற்பன்னர், ஏட்டுச் சுரைக்காய், கார்ப்பரேட் கால்நக்கி, மான்சான்டோ கைக்கூலி, காங்கிரஸ் களவாணி, தேசபக்தியில்லாத கருங்காலி - இதில் ஏதாவது ஒன்றை உங்களது பிரியம்போல எடுத்துக்கொள்ளவும்).

#ஜெய்ஹிந்த்

https://m.facebook.com/story.php?story_fbid=10155618965343773&id=595298772

No comments:

Post a Comment