Wednesday, February 21, 2018

மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவள். எவ்வளவுதான் பாடம் எடுத்தாலும் அவள் மாறுவதாக இல்லை

டான் அசோக்
Via facebook
2018-02-21

கேள்வி: நான் தீவிர பெரியாரிஸ்ட்.  என் மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவள். எவ்வளவுதான் பாடம் எடுத்தாலும் அவள் மாறுவதாக இல்லை.  எனக்கு பெரும் மன உளைச்சலாக இருக்கிறது.  என்ன செய்யட்டும்?

பதில்:  கடவுள் மறுப்பு என்பதை பெரியார் கண்டுபிடிக்கவில்லை.  கடவுள் என்ற வார்த்தை முதன்முதலில் உருவானபோதே கடவுள் மறுப்பு என்பதும் உருவாகிவிட்டது. அதன்பின் பல மேலை நாட்டு அறிஞர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள்.  டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் கடவுள் மறுப்பு கொள்கைக்கு மிகப்பெரிய பலமாக வந்துசேர்ந்தபின், கடவுள் மறுப்பு கொள்கை பரவலாக புகழும், பரவலாக எதிர்ப்பும் ஒருசேரப் பெற்றது.  அறிவாளிகள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் என பெரும்பான்மையானோர் கடவுள் மறுப்பாளர்களாக இருந்ததால் இந்த விவாதத்திற்கு பஞ்சமே இல்லை.  நிற்க.

ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைக்கும், உலகெங்கும் விவாதிக்கப்பட்ட கடவுள் மறுப்பு கொள்கைக்கும் அடிப்படை வேறுபாடு ஒன்று உண்டு.  உலக அளவில் கடவுள் மறுப்பு என்பது அறிவுதளத்தில் விவாதிக்கப்பட்டது.  பெரியார் மட்டுமே அதை சமூகதளத்திற்கு கொண்டுவந்தார்.  தான் அறிவாளி, அறிஞன் என்பதை நிரூபிப்பதற்காக பெரியார் கடவுள் மறுப்பை கையில் எடுக்கவில்லை.  பெரியாரின் அடிப்படைக் கொள்கை மனிதர்களின் சுயமரியாதைக்கு எதிரியான சாதியை ஒழிப்பது.  காங்கிரசில் இருந்து அவர் வெளியானபோது கூட அவரது சாதி ஒழிப்புக் கொள்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாலேயே வெளியேறினாரேயொழிய, கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காததால் வெளியேறவில்லை.  பெரியாரின் புகழ்பெற்ற வாக்கியமான, "கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள்," என்கிற வாக்கியத்தை அவர் 1967ல் தான் முழங்கினார். பெரியாரின் சாதி ஒழிப்பு மத ஒழிப்பாக, மத ஒழிப்பு கடவுள் ஒழிப்பாக  பரிணாம வளர்ச்சி பெற்றது.   அதனால் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.  பெரியாரியத்தின் அடிப்படை கடவுள் மறுப்பு அல்ல.  சுயமரியாதையும், சாதி ஒழிப்பும், சமூகநீதியும்.  அதாவது சுருக்கமாகச் சொல்வதானால், மனிதன் மானத்துடன் வாழ்வதற்கான அடிப்படை மனித உரிமை!  அதை தடுத்த, அதற்கு தடையாக நின்ற எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு மிதித்தார் பெரியார்.

அதனால் உங்கள் மனைவி கடவுள் பக்தி உள்ளவராக இருப்பதற்காக மன உளைச்சல் அடைவதெல்லாம் அதிகபட்ச ரியாக்சன்.  அவர் பார்ப்பன அடிமையாக இல்லை என்றால், சமஸ்கிருத அடிமையாக இல்லை என்றால், சாதி அமைப்பின் அடிமையாக இல்லையென்றால், எல்லாவற்றுக்கும் மேல் பெண்ணாக இருந்தும் கணவனின் கருத்தை அப்படியே ஏற்காமல் கணவனுக்கு tough fight கொடுக்கிறார் என்றால் அவருக்குள்ளும் பெரியார் இருக்கிறார் என்பதுதான் பொருள்.  வாழ்த்துகள்.  சந்தோஷமாக இருங்கள்.

-டான் அசோக்

https://m.facebook.com/story.php?story_fbid=1616009511840341&id=815716175203016

No comments:

Post a Comment