Monday, February 19, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 9

Muralidharan Kasi Viswanathan
Via facebook
2018-02-20

கோவில்களை கைப்பற்ற நினைக்கும் பிற்போக்கு சக்திகள் - பகுதி 9
-----------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டுக் கோவில் நிலங்களையும் கடைகளையும் திராவிடக் கட்சிக்காரர்கள் கைப்பற்றிக்கொண்டு வெளியேற மறுக்கிறார்கள் என்பது, அறநிலையத் துறைக்கு எதிரானவர்கள் அடிக்கடி சொல்லும் வாதம். ஆனால், உண்மையில் ஆக்கிரமிப்பாளர்கள் யார்?

தமிழ்நாட்டு அரசுத் துறையில் வருவாய்த் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அசையாச் சொத்துகளை வைத்திருப்பது அறநிலையத்துறைதான். கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் 60-70 வருடங்களுக்கு முன்பாக கவனிப்பாரற்றுக் கிடந்தபோது ஆக்கிரத்தவர்கள், இப்போது நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும்போது வெளியேறுவார்களா?

கோவிலுக்குச் சொந்தமான மனைகளில் கட்டடங்களைக் கட்டி சுவாதீனத்தில் வைத்திருப்பவர்கள். நிலம் கோவிலுடையது என்றாலும் கட்டடம் தங்களுடையது என்பார்கள். இவர்கள், அடி மனைக்கான வாடகையை மட்டும் கோவிலுக்குச் செலுத்திவிட்டு காலம் காலமாக அந்த சொத்தை அனுபவித்துவருபவர்கள். இதை நீதிமன்றம் சென்று மீட்பதில் பெரும் சிரமமான காரியம்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 38,500 கோவில்களும் அற நிறுவனங்களும் இருக்கின்றன. இவற்றை நிர்வகிக்க சுமார் 650 செயல் அலுவலர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அவற்றிலும் கால்வாசிக்கு மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன.  இம்மாதிரியான சூழலில் மிகுந்த சிரமத்திற்கு இடையில் நிலங்களை மீட்கும் போராட்டங்களை இந்த அலுவலர்கள் நடத்திவருகின்றனர். குறிப்பாக, பரம்பரை அறங்காவலர்கள் நிர்வகிக்கும் கோவில்களில், அறங்காவலர்கள் துணையோடு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால், அவற்றை மீட்பது என்பது கிட்டத்தட்ட நடக்காத காரியம்தான். 

இது தவிர, திருக்கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள், தங்களுக்கென சங்கம் அமைத்துக்கொண்டு வழக்குகளைத் தொடுப்பது, அவற்றை மொத்தமாக நிதி திரட்டி நடத்துவது என செயல்பட்டுவருகின்றனர். கோவில்களை அறநிலையத் துறையிடமிருந்து மீட்க வேண்டும் என்று கோருபவர்கள், இந்தச் சங்கம் குறித்து பேச்சே எடுப்பதில்லை.

செயல் அலுவலர் பணியிடங்கள் மிகக் குறைவாகவே உள்ளதால், ஒரு செயல் அலுவலர் 20க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்வாகம் செய்யும் நிலையே இப்போது நீடிக்கிறது. இதனால், கோவில் நிர்வாகத்தையும் வழக்குகளையும் கவனிப்பது பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது.  கோவில்களை ஒட்டியோ, அருகிலோ உள்ள கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களைக் காலிசெய்ய நடவடிக்கை எடுத்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிக்கு பகையாளியாக மாறிவிடுவர். இது தினசரி நடவடிக்கையைக் கடுமையாக பாதிக்கும். 

அறநிலையத் துறை மீது முன்வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, பக்தர்கள் இறைவனுக்கு என்று அளிக்கும் காணிக்கையை அறநிலையத் துறை ஊழியர்கள் எடுத்து, அதை வைத்து கார்களில் பயணிக்கிறார்கள் என்பது. 20 கோவில்களை கவனிக்கும் ஒரு செயல் அலுவலர், காரில் பயணிக்காமல் வேறு எப்படிச் செல்வார்? சில தனியார் கோவில்களை தங்கள் பொறுப்பில் வைத்திருக்கும் மடாதிபதிகள், காரில் செல்வதில்லையா? ஏன் ஹெலிகாப்டர்களில்கூடச் செல்கிறார்கள். விமானங்களில் செல்கிறார்கள். அவர்களைப் பார்த்து, பக்தர்களின் காணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்படுவதில்லை ஏன்?

மற்றொரு புறம், திருக்கோவில்களின் வருவாயில் பெரும் பகுதி வங்கிகளில் புதிய முதலீடாக செய்யப்படுகிறது. அந்த முதலீடும்கூட, எப்படிச் செய்யப்பட வேண்டும், எம்மாதிரி வங்கிகளில் செய்யப்பட வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இந்துசமய அறநிலையத் துறைச் சட்டம் இந்த வருவாய், மற்றும் செலவுகளைக் கண்காணிப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது.  அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் புதிதாகக் கொண்டுவரப்படும் கோவில்களின் வருவாய், முன்பிருந்ததைவிட பல மடங்கு உயர்வதை யாரும் கண்கூடாகக் காணமுடியும். அதற்குக் காரணம், பக்தர்கள் வருகை அதிகரிப்பதல்ல. மாறாக, அந்தக் கோவில்களுக்கு வரும் வருவாய், முறையான கணக்குடன் ஒப்படைக்கப்படுவதுதான். 

கோவில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் அல்ல என்பதைப் பல முறை இங்கே சொல்லப்பட்டுவிட்டது. கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றுபவர்கள், வெறும் கோவிலை மட்டுமல்லாமல், அதன் சொத்துக்கள், பக்தர்கள், அவர்களது நம்பிக்கைகள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆகவே, கோவிலை நிர்வகிப்பது அரசாக இருந்தால் மட்டுமே, கோவிலை, அதன் சொத்துக்களை நிர்வகிப்பது என்று செல்லும். மாறாக, தனியார் அமைப்புகளோ, தனி நபர்களோ நிர்வகிக்க ஆரம்பித்தால், அவர்களை வளைக்கும் பிற்போக்கு சக்திகள், தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். நிலைமை அப்படி மாறினால், தமிழகத்தின் அமைதி என்னவாகும்?

இப்போது உலகம் முழுவதுமே பிற்போக்கு சக்திகளுக்கு ஆதரவான ஒரு போக்கு நிலவிவருகிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும்கூட அந்த நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் தாங்கள் வலுவடைந்திருப்பதாக நினைக்கும் பிற்போக்கு சக்திகள், கோவில்களைக் கைப்பற்றி தாங்கள் விரும்பியதை சாதிக்க நினைக்கின்றன.

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1191171527681239&id=100003652096964

No comments:

Post a Comment