Sunday, February 25, 2018

பெண்களும் குடிக்க ஆரம்பித்து இருப்பது ஏற்று கொள்ள முடியாததாக இருக்கிறது.

Dr.ChandraLeka

இதுக்கு தான் நாங்க அப்போவே சொன்னோம்:

வேலைக்கு செல்லும் பெண்கள் வேசிகள் என்பதில் ஆரம்பித்து பிறகு செவிலியர், ரிசப்ஷனிஸ்ட், டைபிஸ்ட் பணியில் இருப்போர் மோசம் என்று மாறி இப்போது ஐ.டி தான் இருப்பதிலேயே கேடு என்று பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறது, சுதந்திரமாக வாழும் பெண்களின் மீதான தாக்குதல்.

தமக்கு சமமாக பெண்கள் படிப்பதும் பணம் சம்பாதிப்பதையும் பொறுத்து கொள்ள முடியாத சமூகம் பிறகு பல்வேறு காரணங்களுக்காக சிலவற்றில் சமரசம் செய்து கொண்டுள்ளது.

ஒரு பெண் தன்னை முந்தி வண்டி ஓட்டுவதையே தாங்காத 'ஆண்மை'யால் இப்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்து இருப்பது ஏற்று கொள்ள முடியாததாக இருக்கிறது.

பெண் குடிப்பதை மட்டுமே தவறு என்னும் சொல்லும் போது தான் இந்த கலாசார காவலர்களின் சாயம் வெளுக்கிறது. இவர்கள் யாரும் குடிப்பதே தவறு என்று எப்போதும் சொல்வதே இல்லை.

ஒரே துறையில் பணிபுரியும் ஆண்களுக்கு இருக்கும் மன உளைச்சல் அதை போக்க அவர்கள் நாடும் சிகரெட், மது அதே மாதிரி வேலை செய்யும் பெண்களுக்கு மட்டும் கூடாது என்பது பண்பாட்டை பற்றிய கவலையாக தெரியவில்லை.

கழனி வேலை செய்யும் பெண்கள் சுருட்டு / பீடி புகைப்பதும் கள் /சாராயம் குடிப்பதும் நமது சமூகத்தில் உண்டு என்னும் போது பகல் இரவு பாராமல் உழைத்து கொட்டும் ஐ.டி பெண்களை மட்டும் நோக்கி கை காட்டுவது ஏற்க முடியாதது.

இந்த கலாச்சார சீரழிவு கவலை எல்லாம் பதின் பருவ குழந்தைகளைக் கட்டிப்பிடித்து கெமிஸ்ட்ரி உண்டாகும் நிகழ்ச்சிகள் மீதோ (பெற்றோர் ஆசியுடன் ) உள்ளாடை தெரிய புட்டத்தின் கீழ் பேன்ட் அணியும் ஆண்கள் மீதோ ஒருபோதும் தோன்றுவதில்லை. ஆனால், லெகிங்க் அணியும் பெண்கள் மீது கரிசனம் வந்து விடுகிறது.

நாங்கள் மாற மாட்டோம். ஒழுக்கமாக இருக்க மாட்டோம். எங்களுக்கு ஏற்றபடி தான் பெண்கள் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை இன்னும் நீடிக்கிறது.

இது இன்னும் மோசமடைய காரணம் பெண்ணியவாதிகள் என்று பொது வெளியில் நடமாடும் பெண் எதிரிகள் தான். இவர்கள் நடவடிக்கைகளால் பெண் உரிமை என்று பேசுவதே ஒரு மேல் தட்டு கலாச்சாரம் போலவும், நகைச்சுவை போலவும் ஆகி விட்டது.

இந்த ஐ.டி பெண் கொலை போன்று ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் 'இதுக்கு தான் நாங்க அப்போவே சொன்னோம்' என்று பழமைவாதிகள் பேசுவதற்கு எதுவாகவே பெண்ணியவாதிகளின் பிற்போக்கான முற்போக்கு இருக்கிறது.

-Dr.ChandraLeka

No comments:

Post a Comment