Saturday, February 10, 2018

இந்து அறநிலையத்துறை - பகுதி 4

Muralidharan Kasi Viswanathan
Via facebook
2018-02-09

கோவில் சட்டங்கள் தொடர்பான பொய்ப் பிரச்சாரங்கள், பக்தாள்களின் பரவசம் - பகுதி நான்கு
-----------------------------------------------------------------------------------------------------
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட பிறகு, ஒரு தரப்பிலிருந்து வேகமாக பொய்ப் பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப்பட்டன. அந்தப் பிரச்சாரங்களின் தொனி இதுதான்: அறநிலையத் துறை வருவதற்கு முன்பாக மடாதிபதிகளும் தர்ம சிந்தை உடையவர்களும் கோவிலை நிர்வகித்து வந்தார்கள்; அறநிலையத் துறை வந்த பிறகு கோவில்களை கைப்பற்றி, அதற்கு உரிய நிலங்களை விற்று, சொத்துக்களை விற்றுவிட்டது. இதில் அரசியல்வாதிகள் லாபம் பெறுகிறார்கள். இது முழுக்க முழுக்கப் பொய் என்பது எழுதுபவர்களுக்கே தெரியும். இருந்தபோதும் இந்தப் பிரச்சாரம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதில் சில நாளிதழ்களும் ஈடுபட்டுவருகின்றன.

மீனாட்சி  அம்மன் கோவில் தீ விபத்து ஏற்பட்ட சில நாட்களில் நாளிதழ் ஒன்றில், கட்டுரை ஒன்று வெளிவந்தது. "தீயில் என்ன ஆச்சரியம்: அனைத்தும் சட்டவிரோதம்" என்ற அந்தக் கட்டுரைப் படித்த பக்தாள் அனைவரும், அதில் உள்ள தகவல்களைச் சரிபார்க்காமல், சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்துடன் பகிர்ந்துவருகிறார்கள்.

அதற்கு அடுத்த நாள் அதே நாளிதழில் ஒரு குறிப்பு. அதாவது 1965லேயே மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட 45 கோவில்களிலிருந்து அரசு வெளியேற வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் ஆனால், அந்தத் தீர்ப்பு ரகசியமாக இருப்பதாகவும் அந்தக் குறிப்பு கூறியது. அந்த 45 கோவில்களின் பட்டியல் வேறு. இதுவும் வேக வேகமாக பரப்பப்பட்டது.

இதில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் எப்படிப் பொய்யானவை என்று பார்க்கலாம்.

1. மீனாட்சியம்மன் கோவிலை தனியார் வசம் அரசென்ன மாற்றுவது, அதை அரசு நிர்வகிப்பதே செல்லாது.

உண்மை: மீனாட்சி அம்மன் கோவில் ஒருபோதும் தனியாரால், தனி நபரால் நிர்வகிக்கப்பட்ட கோவில் அல்ல. குலசேகர பாண்டியன் காலத்திலிருந்தே மதுரை மன்னர்களால், கிழக்கிந்தியக் கம்பனி நிர்வாகிகளால், பிரிட்ஷ் அரசால், குறுகிய காலத்திற்கு மதுரை ஆதீனத்தால், மாநில அரசால் நிர்வகிக்கப்பட்ட கோவில். எப்போதுமே அரசின் வசமே இருந்த கோவில் அது. தனியார் வசம் மாற்றுவதென்றால், யார் அந்த தனியார்?

2. 1920 முதல் 1937 வரை பதிமூன்று ஆண்டுகள் பிரிட்டிஷ் அரசுடன் இணைந்து தமிழகத்தை ஆண்ட நீதிக் கட்சி, கொள்கைகளுக்காக இந்து சமய அறக்கட்டளைச் சட்டத்தை நிறைவேற்றியது.

உண்மை: 1927ஆம் வருடச் சட்டத்திற்கு முன்பாக 1817ல் துவங்கி பல கட்டங்களாக இது தொடர்பான சட்டங்கள் அப்போதைய கிழக்கிந்தியக் கம்பனி நிர்வாகத்தாலும் பிரிட்டிஷ் அரசாலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த உண்மையை மறைத்து, ஏதோ நீதிக் கட்சி ஆட்சி சதி செய்து கோவில் நிர்வாகத்தை பிடுங்குவதற்காக இந்தச் சட்டத்தை கொண்டுவந்ததாக நம்ப வைக்கவே இந்தப் பொய்த் தகவல்.

3. இதன் மூலம் தெப்பக்குளங்களின் மீன் குத்தகைக்கு விடப்பட்டது. கோவில் நிலங்கள் கேள்விக்குறியாகத் துவங்கின. சிலர் மட்டும் வருமானம் பார்க்கும் இடங்களாக கோவில்கள் மாறின.

உண்மை: கோவில் தொடர்பாக வருவாய் அளிக்கக் கூடிய இடங்களை குத்தகைக்கு விடுவதற்கு சட்டத்தில் இடம் இல்லாததது போலவும், திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இம்மாதிரி குத்தகைக்கு விட்டு, வருமானம் பார்ப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் தகவல் இது. ஆனால், உண்மை வேறு மாதிரியானது. கோவில்கள் முறைப்படி அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ்வந்த பிறகுதான், ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பது முறைப்படி கணக்கிடப்பட்டு பட்டியலிடப்பட்டது.

இதற்காக அறநிலையத் துறை அலுவலர்கள் பட்டபாடு சொல்லிமாளாது. ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திற்கும் சென்று மணிக்கணக்கில் அமர்ந்து, அங்குள்ள மூலப் பத்திரங்களைப் பார்த்து, அவை கோவிலுக்குச் சொந்தமானவையாக இருந்தால் வழக்குத் தொடர்ந்து அந்த நிலங்களை மீட்டனர். அதற்கு முன்பாக எந்தக் கோவிலுக்கு எங்கே நிலங்கள் இருந்தன என்பது குறித்து எந்தத் தகவலும் முறைப்படி இருந்ததில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிய திராவிடக் கட்சிகளின் ஆட்சியே இந்த நிலங்களை மீட்டது. தற்போது அறநிலையறையின் கீழ் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இது அறநிலையத் துறையின் மகத்தான சாதனைகளில் ஒன்று.

இது தவிர, இந்து சமய நிறுவனங்களுக்குச் சொந்தமாக 22,600 கட்டடங்களும் 33665 மனைகளும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை யார் கட்டியது? மன்னர்கள் கட்டினார்களா, இவர்கள் தனியார் தனியார் என்று சொல்பவர்கள் கட்டியதா? இவை அனைத்தும் அறநிலையத் துறையால் கட்டப்பட்டவை. இதன் மூலம் இந்தத் துறைக்கு 2017-18ல் மட்டும் 141 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த மனைகளிலும் கட்டடங்களிலும் குடியிருப்பவர்களை வெளியேற்றி, அந்த இடங்களை பாழடைந்த இடங்களாகப் போட்டுவைத்தால், இவ்வளவு பணத்தையும் "தனியார்" கொடுப்பார்களா?

4. 1950ல் அரசியல் சாஸனம் அமலுக்கு வந்த பிறகு, எல்லா மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. மத உரிமை என்றால் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக உரிமையும் அடங்கும்.

உண்மை: அரசியல் சாஸனத்தின் பிரிவு இருபத்தியாறு, மத நிறுவங்களை நிர்வகிப்பது பற்றிக் கூறுகிறது. அதாவது, 
Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right to establish and maintain institutions for religious and charitable purposes;
a) to manage its own affairs in matters of religion;
b) to own and acquire movable and immovable property; and
c) to administer such property in accordance with law.
இதில் எங்கேயாவது அரசு நிர்வகித்துவரும் சமய நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்க வேண்டுமெனவோ, அரசு நிர்வகிக்கக்கூடாது எனவோ இருக்கிறதா?  பிரிவு  26ன் படி, சமய நிறுவங்களை உருவாக்கி ஒருவர் நிர்வகிக்க உரிமை இருக்கிறது. அவ்வளவுதான்.

5. 1951ஆம் வருட சட்டத்தின் மூலம் கோவில்களை எல்லாம் அரசு ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டது. இதை எதிர்த்து தருமபுர ஆதீனம் உச்ச நீதிமன்றத்தில் போராடி 1965 பிப்ரவரி 10ஆம் தேதி ஒரு தீர்ப்பைப் பெற்றார். அதன்படி, மதுரை, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட45 கோவில்கள் மீதான அரசின் உரிமை ரத்தானது.

உண்மை: திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் சுவாமி கோவிலை அரசாணைகள் மூலம் நிர்வகித்துவந்தது. அந்த அரசாணைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டன. 1951ல் வெளியிடப்பட்ட அரசாணையின் காலம் 1956ல் முடிவுக்கு வரவே, புதிய அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு 1961ஆம் ஆண்டுவரை கோவிலை தங்கள் வசம் வைத்திருக்கப்போவதாகத் தெரிவித்தது. இதனை எதிர்த்து தருமபுர ஆதீனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவரது வாதம், தங்களைக் கேட்காமல் இந்த அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது; ஆகவே இது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதுதான். இதனை உயர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும்போது 1961 ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. இந்த அரசாணையின் காலமே 1961 செப்டம்பரில் முடியும் நிலையில், இதில் தீர்ப்பளிப்பது தேவையில்லாதது என்று கூறி அந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து, ஆதினகர்த்தர் உச்ச நீதிமன்றம் சென்றார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதீனகர்த்தாவின் முறையீட்டை ஏற்றது. அவரது தரப்பையும் கேட்டே அரசு அதனைச் செய்திருக்க வேண்டும் என்று கூறியது. இந்தத் தீர்ப்புதான் 1965 பிப்ரவி 10ல் வெளியானது. இதில் எங்கே மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 45 கோவில்கள் வருகின்றன? (உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பின்னூட்டப் பகுதியில் இணைத்திருக்கிறேன். )

6. இதுதான் இருப்பதிலேயே காமெடி. "இந்த உண்மை, தமிழக மக்களுக்கும் இந்து அமைப்புகளுக்கும் தமிழக வழக்கறிஞர்களுக்கும் தெரியாத ரகசியமாக இன்றளவும் இருந்துவருவது பேராச்சரியம்."

உண்மை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை யாராவது ரகசியமாக வைத்திருக்க முடியுமா? யாருக்கும் தெரியாத ரகசியம் இவருக்கு மட்டும் எப்படித் தெரிந்ததாம்? அப்படியே யாருக்கும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம், வழக்கில் ஜெயித்த ஆதீனகர்த்தரும் தனக்கு சாதகமாக வந்த தீர்ப்பை ரகசியமாக வைத்துக்கொண்டாரா?

7. நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்க 1965ல் புதிய சட்டங்களை உருவாக்கி கோவில்களின் கட்டுப்பாட்டை தானே வைத்துக்கொண்டது.

உண்மை: தனக்குத் தேவையான சட்டங்களை இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு உண்டு அல்லவா? அதில் என்ன தவறு?

8. 3 மாதங்களுக்கு மேல் இருக்க முடியாத தக்கார் பதவியில் நிரந்தமாக ஆட்களை வைத்துள்ளனர்.

உண்மை: அறங்காவலர்கள் இல்லாத காலகட்டத்தில், தக்கார் என்பவர் நியமிக்கப்பட்டு கோவில்கள் நிர்வகிக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை விதிகள் கூறுகின்றன. அறங்காவலர் குழு இருப்பதுதான் சரியானது. அப்போதுதான் பொதுமக்களுடன் பேச முடியும். தி.மு.க. ஆட்சியில் இருந்த 2011 வரை எல்லாக் கோவில்களிலும் அறங்காவலர் குழுக்கள் இருந்தன. 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கோவில்களுக்கு தக்கார்களை நியமித்ததோடு நிறுத்திக்கொண்டார். கடைசிவரை அறங்காவலர் குழுக்களை நியமிக்கவில்லை. உடனடியாக அதைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் விதிப்படி, தாழ்த்தப்பட்டவர்களை நியமித்து கோவில்களை நிர்வகிக்க வேண்டும். அப்போதுதான் நிலைமை மேம்படும்.

ஒரு பொய் கட்டுரைக்கு பதில் சொல்லவே மூச்சு வாங்குது.. மீதம் நாளை..

(தொடரும்)

https://m.facebook.com/story.php?story_fbid=1185137891617936&id=100003652096964

No comments:

Post a Comment