Tuesday, June 16, 2015

கூட்டணி ஆட்சியே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படை

Leo Joseph D:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை தமிக அரசியல் களத்தில் சில நாட்களாக ஒலித்து வருகிறார். சிலர் இதனை தோற்றுப் போன சித்தாந்தம் என்கிறார்கள். அண்ணா காலத்திலும் மூப்பனார் காலத்திலும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு அது தோல்வியுற்றதை உதாரணமாக அதற்கு சுட்டிக் காட்டுகிறார்கள். மற்றும் சிலரோ, இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் சாத்தியப்படாத ஒன்று என்றரீதியில் வாதம் செய்கின்றனர்.
  • கூட்டணி ஆட்சி என்பதன் அவசியம் என்ன? 
  • ஜனநாயகம் என்றால் என்ன?
  •  அரசியல் பெரும்பான்மை, அரசியல் சிறுபான்மை இவை மக்களை எந்தளவிற்கு பாதிக்கிறது? 
  • திருமாவளவன் அவர்களின் கூட்டணி கோரிக்கை வெறுமனே திராவிட கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எழுப்பப்பட்ட ஒன்றா? 
  • இதனால் தனிப்பட்ட வகையில் திருமாவளவனுக்கோ , விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கோ பயனிருக்கிறதா? 
  • கூட்டணி ஆட்சியின் சாதக பாதக அம்சங்கள் என்ன? 
  • தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர கட்சிகள் செய்ய வேண்டியது என்ன?

இன்னும் இது தொடர்பான வேறு அம்சங்களையும் குறுக்குவெட்டு கோணத்தில் அலசிப் பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூட்டணி ஆட்சி என்ற கோட்பாட்டைக் கையிலெடுத்ததுமே இங்கிருக்கும் அடிவருடி ஊடகங்கள் பல்வேறான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட தொடங்கின. 

திருமாவளவன் அவர்கள் அதிமுக கூட்டணிக்கு மாற தயாராகிவிட்டார் , கருணாநிதிக்கு நெருக்கடி கொடுக்கவே திருமாவளவன் இந்த கோரிக்கையை முன்வைக்கிறார், இரண்டு திராவிட கட்சிகளுக்கும் அரசியல் நெருக்கடியை உண்டு பண்ணி வரும் தேர்தலில் அதிக சீட்டுகளை பெற முயற்சிக்கிறார், தனி அணியை உருவாக்க கூட்டணி ஆட்சி என்பதை ஒரு சாக்காக பயன்படுத்துகிறார்... 

இன்னும் இன்னும் ஏதேதோ வரிந்துகட்டி எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மேலே முன் வைக்கப்படும் கூற்றுகளில் ஏதேனும் நம்பகத் தன்மையோ, அல்லது சாத்தியக்கூறோ இருக்கிறதா என அலசிப் பார்ப்பதற்கு முன் திருமாவளவன் அவர்கள் இவைகளைக் குறித்து வெளியிட்ட சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

" கூட்டணி ஆட்சி என்பதனை ஒரு கோரிக்கையாக அல்லாமல் ஒரு அரசியல் கோட்பாடாகவே முன்னெடுக்கிறோம். கூட்டணி ஆட்சி என்ற கோட்பாட்டினை முன்னெடுப்பதால் அரசியல் களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிமைப்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் உணர்ந்தேதான் இருக்கிறோம். 

நான் இதற்காக என் தலையை கொடுக்கவும் துணிந்துவிட்டேன். இதனால் நாளையே நான் முதல்வராகிவிடப்போவதில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் கோட்டையில் ஒரு தலித் கொடியேற்றவேண்டும் என்பதே எங்கள் லட்சியம்"
----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆதிக்க சாதிகளிடம் தட்டியெழுப்ப முடிகிற சாதிவெறி உணர்வை ஒருபோதும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் உருவாக்க முடிவதில்லை. அதனாலேயே பாமக, கொமுச போன்ற சாதிய கட்சிகளெல்லாம் பெற முடிகின்ற சட்டமன்ற அங்கீகாரத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்துபவர்களால் எட்ட முடிவதில்லை. அதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.


முதலாவதும் முதன்மையானதுமான காரணியாக நான் கருதுவது அக்கட்சிகளுக்கிடையேயான அடிப்படை நோக்கத்தில் உள்ள வித்தியாசம் தான். சாதி வளர்ப்பு மற்றும் சாதி ஒழிப்பு என அவை முற்றிலுமாய் முரண்பட்டு நிற்கின்றன. இடைநிலை மற்றும் ஆதிக்க சாதிகளை சேர்ந்த கட்சிகள் தாம் சார்ந்த மக்களிடையே சாதியுணர்வை தட்டியெழுப்பி அதன்வழி தங்களது ஓட்டரசியல் பிழைப்பை நடத்துகின்றன.

ஆனால் பறையர், பள்ளர், அருந்ததியர், தேவேந்திரர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியை நடத்துபவர்களின் நோக்கம் சாதி ஒழிப்பாக இருக்கிறது. ஆனால் ஊடகங்கள் பொத்தாம்பொதுவாக அனைத்தையுமே சாதியக்கட்சிகள் என்று முத்திரையிடும் சூழ்ச்சியைத்தான் மேற்கொள்கின்றன.

இடைநிலை சாதியைச் சேர்ந்த ஒருவர் தனது சாதியை பறைசாற்றிக் கொள்வதில் அளவில்லா பெருமிதமும் ஆனந்தமும் அடைகிறார். ஆனால் சாதி எனும் இழிவை தங்கள் மேல் தாளா சுமையாக தாங்கி கிடக்கிற தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களது சாதி அடையாளத்தை மற்றவர்களிடமிருந்து மறைக்கவே பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவரால் தன் சாதி அறிவிப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களிடமும் கூட , தான் உயர்சாதியைச் சேர்ந்தவன் என்ற அங்கீகாரத்தை பெற முடிகிற சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களோ தங்கள் சாதி வெளிப்பட்டால் தாங்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தோடே வாழ்வை நகர்த்த வேண்டியிருக்கிறது.

இதனாலேயே சாதியக் கட்சிகள் மக்களிடையே திரட்ட முடிகின்ற ஆதரவை, சாதி ஒழிப்பு கட்சிகளால் பெற முடிவதில்லை. தாழ்த்தப்பட்ட சமூகமாகவே இருந்தபோதும் தன்னை ஒரு தாழ்த்தப்பட்ட கட்சியின் அங்கமாக வெளிக்காட்டுவதை விட, திராவிட, கம்யூனிஸ்ட் போன்ற பரந்த அடையாளமுடைய கட்சியின் உறுப்பினராக தன்னை வெளிக்காட்டுவதிலேயே பெரும்பாலானவர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment