Monday, June 22, 2015

கல்வியில் தனியார்மய ஒழிப்பு மாநாடு

கல்வியில் தனியார்மய ஒழிப்பு மாநாடு - தீர்மானங்கள்!
.
1. மாணவர்களிடையே சமத்துவத்தைப் பேணும் வகையிலான ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட பொதுப்பள்ளி- அருகமைப்பள்ளி முறைக்காக அனைவரும் போராட வேண்டுமென இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.
.
2. அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் ஆரம்பிக்கவும், அனைத்து அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்க தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும், அரசு மாணவர் விடுதிகளில் சுத்திகரிக்கபட்ட குடிநீர், சுகாதாரமான உணவு என்பதை கண்காணித்து உத்திரவாதபடுத்தவும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு மாநில அரசு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களை நிர்ப்பந்திக்கும் வண்ணம் போராட வேண்டுமென்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் பெற்றோரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
.
3. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென இம்மாநாடு ஒரு மனதாக வலியுறுத்துகிறது.
.
4. கல்வியை மட்டுமின்றி மாணவர்களையும் பண்டமாக்கும் கல்வி வியாபாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதற்கு அரசைப் பொறுப்பாக்கு வதற்கும் போராட வேண்டுமென மாநாடு அறை கூவுகிறது.
.
5. ஆசிரியர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் தனியார்பள்ளிகளை புறக்கணித்து அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக்கொள்கிறது.
.
6. அனைவருக்கும் கல்வியளிப்பதாக தானே ஏற்றுக்கொண்ட பொறுப்பைக் கைகழுவியது மட்டுமின்றி, தாய்மொழிக் கல்வியையும், அரசுப் பள்ளிகளையும் ஒழித்துக்கட்டுவதற்கும், தனியார் கல்விக் கொள்ளையை பாதுகாத்து ஊக்குவிப்பதற்கும் இந்த அரசாங்கம், அதிகாரிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட மொத்த அரசமைப்பும் முன்நின்று வேலை செய்கின்றன. இந்தஅரசு, ஆளும் தகுதியிழந்து விட்டதால், இதனிடம் மனுக்கொடுப்பதும் மன்றாடுவதும், பயனற்றது என்றும், மக்கள் தமது கல்வி உரிமையை நிலை நாட்டிக்கொள்ளும் வகையிலான போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும், பள்ளிகள் அனைத்தையும் ஆசிரியர், மாணவர், பெற்றோர் தமது கண்காணிப்பின் கீழ்கொண்டு வரவேண்டும் என்றும் இம்மாநாடு அறைகூவுகிறது.
.
7. ஆசிரியர்களை கற்றல், கற்பித்தல் அல்லாத டி.என்.பி.சி, யு.பி.எஸ்.சி,தேர்வு பணி, தேர்தல் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி, மதுவின் தீமை விளக்க பேரணி, மழை நீர் சேகரிப்பு ஊர்வலம், இது போன்ற எண்ணற்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை வலியுறுத்துகிறது.
.
8.அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களை அரசு நிதி உதவி கொடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி தரகு வேலை பார்க்கும் கல்வி துறையை, மாவட்ட நிர்வாகத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
.
- மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
- மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

No comments:

Post a Comment