Wednesday, June 17, 2015

வாஞ்சிநாதனுக்கா அல்லது ஆஷ்துரைக்கா?


வீர வணக்கம் யாருக்கு?

இந்த 21-ம் நூற்றாண்டிலே இந்துத்துவ சக்திகள் இந்தியத் திருநாட்டை ஆட்சி செய்யும் தருவாயிலே மத்தியப் பிரதேசத்திலே ஒரு உயர்சாதி இந்து ஒருவரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதற்காக அவள் அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கிறாள்.

அரசியல்,அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த தருணத்திலே கூட இப்படிப்பட்ட இழிவுகளைக் காண முடிகிறது என்றால் நூறாண்டுகளுக்கு முன்னர் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலே ஆஷ் எனும் கயவன் திருநெல்வேலி கலெக்டராக இருந்த போது இந்தியர்கள் மீது மேற்கொண்ட கொடிய அடக்குமுறை கண்டு வெகுண்டெழுந்த வாஞ்சிநாதன் எனும் தேசபக்தி மிகுந்த பார்ப்பன இளைஞன் மணியாச்சி ர்யில் நிலையத்தில் அந்த ஆஷ் கயவனை சுட்டுக் கொன்று விட்டு தானும் சுட்டுக் கொண்டு இறந்து போனான்,அந்த இளைஞனின் வீரத்தை மெச்சி இன்று அவனுடைய நினைவு தினத்திலே பத்திரிக்கைகள் எல்லாம் அவனை பெருமையுடன் நினைவு கூர்வதைக் கண்டு அந்த வீர வாஞ்சியைப் பற்றி தெரிந்து கொள்ள பழைய சேதிகளை எல்லாம் புரட்டி தேடிப் பார்த்தால் அவை வேறு ஒன்றைத் தெரிவிக்கின்றனவே!

பிரிட்டிஷ் ஆட்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை, அம்மாவட்டத்தில் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட அருந்ததி சமூகத்தினரை சமமாக மதித்தார். தனது அலுவலகத்தில் நிலவிய தீண்டாமையை ஒழித்தார்.

அலுவலகத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும். ஒரே குடத்தில் தண்ணீர் எடுத்து குடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். குற்றால அருவிகளில் தெய்வங்களும், அவருக்கு பூசை நடத்தும் “பிராமணர்களும்” மட்டும் தான் குளிக்க வேண்டும் என்ற சாதித் தடையை நீக்கி அருந்ததியினர் உட்பட அனைவரும் குளிக்க ஆணையிட்டார். தானும் அதே அருவியில் குளித்தார்.

அது ஒரு மழைக் கால இரவு, ஆஷ் என்னும் வெள்ளை துரையின் குதிரை பூட்டிய வண்டி, சேரியைக் கடந்து பறக்கிறது. ஆஷ் ஒரு மனித நேயம் மிகுந்த மனிதன் என்பதால், இருள் விலகி கொஞ்சம் அவனுக்கு வழி விடுகிறது, மனிதர்களில் இருந்து விலக்கப்பட்டு மிருகங்களின் நிலையில் இருந்த ” தலித்” மக்களின் பகுதியை கடந்து ஆஷ் செல்லுகின்ற போது, அங்கே ஒரு அழுகுரல் இருளின் அமைதியை விலக்கி வருகிறது.

ஆஷ் தன் சாரதியிடம் சொல்கிறான், வண்டியை அந்த அழுகுரல் வரும் திசை நோக்கி செலுத்து என்று, சாரதி சொல்கிறான், அது தாழ்த்தப் பட்ட மனிதர்கள் வாழும் இடம், அங்கு நாம் செல்லக் கூடாது என்று, ஆஷ், கேட்கிறான், மனிதர்களில் தாழ்ந்தவர்களா, அவர்கள், திருடும் இனமா? என்றான்? இல்லை அய்யா பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றான்? வியப்பின் எல்லைக்கு சென்ற ஆஷ், கட்டளை இடுகிறான், ” அந்த அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்” - அதிகாரத் தோணி கேட்டு அடங்கிய சாரதி, மறுக்காமல் விரைகிறான்.

அவர்கள் சென்ற இடம், அந்த மனிதர்களைப் போலவே இற்றுப் போன ஒரு குடிசை, அங்கே, ஒரு மகவினைப் பெற்றெடுக்கும், வலி வேதனையில் ஒரு பெண் கதறுகிறாள், சுற்றிலும் நான்கைந்து பெண்களும் , தூரத்தில் சில ஆண்களும், ஆஷ் அருகில் சென்று கேட்கிறான், என்ன ஆனது என்று? பிரசவ வேதனையில் இருக்கும் இந்தத் பெண்ணுக்கு, ஒரு சிக்கல், அவளை மருத்துவமனை கொண்டு சென்றால், இரண்டு உயிர்களை காப்பாற்றலாம் என்று…….அவர்கள் சொன்னவுடன், ஆஷ் கேட்கிறான், பிறகென்ன கொண்டு செல்ல வேண்டியது தானே என்று, அதற்கு, அவர்களில் ஒருவன் சொன்னான், அய்யா, அக்ரகாரம் கடந்து இந்த இருளில் செல்வது என்பது, எம்மை நாங்களே அழித்துக் கொள்வது போலாகும்.

வண்டி கட்டிச் செல்ல வேண்டும் என்றால், அக்ரகாரம் கடக்க வேண்டும், ஆனால், அது இயலாத் காரியம், அந்தப் பகுதிகளுக்கு நாங்கள் செல்லத் தடை செய்யப் பட்டு இருக்கிறோம். ஆஷ், அந்தப் பெண்களை பார்த்துச் சொல்கிறான், ” இந்த ஜில்லா அதிகாரி சொல்கிறேன், உடன், என்னுடைய வண்டியில் அந்தப் பெண்ணை ஏற்றுங்கள், நான் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்கிறேன், சொன்னது போல் செய்தான், ஆஷ். அக்ரகாரத்தை ஒரு தலித் பெண் கடந்து விட்டால் என்ற செய்தி அப்போது ஒரு தலைப்புச் செய்தி, வாஞ்சிநாதன் ஒரு மேல்தட்டுத் தீவிர வாதி, எப்பாடு பட்டாவது வர்ணங்களையும், குல தர்மங்களையும் காப்பாற்ற முயலும் ஒரு குலக் கொழுந்து. அக்ரகாரத்தின், புனிதம் கெடுத்த ஆஷ் துரையின் ஆயுளுக்கு அன்று தான் முடிவு கட்டப்பட்டது.

சரி வாஞ்சி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தானே,அது என்ன கூறுகிறது என்று பார்த்தால்.......

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலில் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கி லேயர்களைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜுனன் முதலிய வர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோ(பசு) மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனுக்கு முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது.
அவன் (ஜார்ஜ்) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு, 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வரும் செய்ய வேண் டிய கடமை.
இப்படிக்கு
ஆர். வாஞ்சி அய்யர்”


ஆக இந்தக் கடிதம் ஆஷ் துரை கொல்லப்பட்டது தேசபக்தியின் பொருட்டு அல்ல,இந்து மதத்தின் வர்ணாசிரமத்துக்கு ஆஷ்துரையால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்தைப் போக்கவே என்று உணர்த்துகிறது,

மேற்படி செய்திகள் உண்மையாக இருப்பின் ஆஷ்துரை சமதர்மத்தை காக்க முனைந்திட்ட மனிதநேயம் போற்றிய மாமனிதராகவே என் கண்ணுக்குத் தெரிகிறார்,மேற்படி செய்திகளை அயோத்திதாச பண்டிதரும் தன்னுடைய பத்திரிக்கையில் அப்போது எழுதி இருக்கிறார்.

ஆஷ் எனும் மாமனிதருக்கு வீர வணக்கங்கள்.

https://www.facebook.com/Beemarao/posts/915052021895046:0

No comments:

Post a Comment