Tuesday, June 16, 2015

இட ஒதுக்கீடும் பார்ப்பனர்களின் அங்கலாய்ப்பும்


  • இட ஒதுக்கீடு என்றால் என்ன? 
  • ஏன் இட ஒதுக்கீடு?
  • யாருக்காக இட ஒதுக்கீடு? 
  • எதுவரையில் இட ஒதுக்கீடு? 

இந்த கேள்விகளுக்கெல்லாம் முதலில் பதிலை அலசிவிட்டு பிறகு இந்த பதிவின் பிரதான கருத்தை தொடர்ந்தால் புரிதலுக்குகூடுதல் துணை புரியும் என்று கருதுகிறேன்.

ஒரு குறிப்பிட்ட பொருளை ஆண்டாண்டு காலமாக ஒரேபிரிவினரே முழுவதுமாக ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள்உண்மையிலேயே நடுநிலையாளர் என்றால் என்னசெய்வீர்கள்? அல்லது என்ன செய்ய வேண்டும்?

மற்றெவரும் அருகிலும் நெருங்கிவிடாதபடி எல்லோரையும் விரட்டியடித்து முழு அராஜகப் போக்கோடு அனைத்தையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற நிலைப்பாடுடைய பிரிவினரிடமிருந்து அந்த குறிப்பிட்ட பொருளை மீட்டு, எல்லோருக்கும் அந்த பொருள் கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்துவீர்கள் அல்லவா? 

இத்தனை காலமும் தங்களுக்கும் முழு உரிமையான ஒரு பொருளை தூர நின்றுபார்த்து ஏக்க பெருமூச்சுவிடவும் மீறி அந்தப்பொருளை கைக்கொள்ள முனைந்தோரின் உயிரும் பறிக்கப்பட்டதையும் கருத்தில் கொண்டு நீங்கள் ஒருவிதிமுறையை உருவாக்குகிறீர்கள். 

அதன்படி ஒருபிரிவினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த பொருளைமுழு சொந்தம் கொண்டாடி அனுபவித்ததையும் மற்றொரு பிரிவினர் ஒடுக்கி நசுக்கப்பட்டதையும் கண்ணுறும் நீங்கள் இனியும் இவ்வாறு இவர்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுதல் மனிதத்தன்மைக்கு உகந்தவிஷயமல்ல என்று கருதி, இனிஅந்த பொருளின் குறிப்பிட்ட சதவீதத்தை இப்படியாக ஒடுக்கி ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு முதலில் வழங்கிவிட்டு மீதமுள்ளதை பொதுவில் அனைவரும் பங்கீட்டுக்கொள்ளலாம் என்ற நியாயமான ஏற்பாட்டைமுன்வைக்கிறீர்கள்.

இந்த ஏற்பாட்டின் மூலம் இத்தனை காலமாய் முற்றிலுமாய் அந்த பொருளை அடைவதற்கே தகுதியற்றவர்கள் என்று விரட்டப்பட்ட பிரிவினரில் சிலருக்கேனும் அந்த பொருளை அடைவதற்கான வழி பிறக்கிறது. அதே சமயம் தாங்களே முழுதுமாய் அனுபவித்த ஒரு பிரிவினரில் வெகு சிலருக்கு இந்த பொருள் இப்போது கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படுகிறது. இதுதான் இன்று இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பலருடைய ஆதங்கமும் ஆவேசமுமாக இருக்கிறது. 

இந்த பதிவில் இவ்வளவு நேரமாய் நான் குறிப்பிட்ட அந்த பொருள் என்ன தெரியுமா? மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஜனநாயக நாட்டின் அரசு வழங்கியுள்ள உரிமைகளும் வாய்ப்புகளும் தான். அந்தஉரிமைகளும் வாய்ப்புகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டியதற்கான தளத்தை உருவாக்குகிற ஏற்பாடே இடஒதுக்கீடு. தொடக்கத்தில் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை தேடவில்லையே? மனதுக்குள் மீண்டுமொரு முறை அந்த கேள்விகளை படித்துப் பாருங்கள். தொடர்ந்துபேசலாம்..

இட ஒதுக்கீடு என்பது அனைவருக்கும் சம உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைப்பதற்கான தளத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஏற்பாடாகும். அறிவு கொண்டு சிந்திக்கும் எவரும் பிறப்பினாலேயே ஒருவன் உயர்ந்தவன் என்றும் அதன் பொருட்டு பல சிறப்புரிமைகளையும் வாய்ப்புகளையும் பெறுவதற்கு தகுதியானவன் என்றும், மற்றொருவன் அதே பிறப்பின் பொருட்டு தாழ்ந்தவன் என்றும் எத்தகைய உரிமைகளும் வாய்ப்புகளும் பெறுவதற்கு அருகதையற்றவன் என்றும் யாரேனும் சொல்வாராகில் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? 

அல்லது அதை நாங்கள் ஏற்படுத்தவில்லை, அதுமுன்னோர்களின் ஏற்பாடு, கடவுளின் சித்தப்படியான செயல், அதை மாற்றுவதோ, எதிர்ப்பதோ கடவுளுக்கும் மதத்திற்கும் நமது பாரம்பரியத்திற்கும் முற்றிலும் முரணான செயல் என்று சாக்குப்போக்கு சொல்பவர்களைத்தான் சகித்துக்கொள்ள முடியுமா? 

ஆக, மனிதனாகப்பட்டவர்கள் அனைவரும் சமமே, எனவே அனைவரும் சம உரிமையும் வாய்ப்பும் பெறுவதற்கான தளத்தை அமைத்து தருவதே அறிவுடைய செயலாகுமல்லவா? அதற்காகவே இடஒதுக்கீடு.

சரி, அது என்ன அனைவரும் சம உரிமையும் வாய்ப்பும் பெறவதற்கான 'தளத்தை' உருவாக்குவது? அது என்னதளம்? 

நீங்கள் எல்லோரும் அல்லது பெரும்பாலானவர்கள் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த மைதானத்தை வடிவமைப்பவர் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தை வடிவமைத்துவிட்டு பந்து வீச்சாளர்களின் செயல்பாடு திருப்திகரமாகவே இல்லை என்று மற்றவர்கள் குற்றம் சாட்டினால் அது எப்படி தகு செயலாக இருக்கமுடியும்? 

முதலில் பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் என இரு தரப்பினரும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஆடுகளன் அமைக்கப்பட வேண்டுமில்லையா? இதில் ஏதேனும் ஒருபிரிவினருக்கு மட்டும் ஆடுகளத்தை சாதகமாக அமைத்துவிட்டு ஆட்டத்தை நடத்தினால், ஒருவேளை பார்ப்பதற்கு சுவராஸ்யமாக இருக்கலாம், ஆனால்ஒருபோதும் அது நியாயமான ஏற்பாடாகாது என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் தானே?

ஒவ்வொரு தனிமனிதனும் விரும்புவது 

  • சமூகத்தில் தனக்கு சமஅந்தஸ்து, 
  • பொருளாதார நிறைவு 
  • மற்றும் நட்புடன் கூடிய சமூக கூட்டுறவு தான். 

இந்த சமூக அந்தஸ்தை, பொருளாதார நிறைவை அடைய வேண்டுமெனில் ஒருவனுக்கு வேலை அவசியம். அந்த வேலையை யாரும் இலவசமாக தருவார்களா? அதற்கு தக்க கல்வி அவசியம். ஆக மற்ற யாவரையும் போல ஒருவன் பொருளாதார நிறைவை அடைய வேண்டுமானால் அவனுக்கு வேலை அவசியம். அதுவும் அவன் பிறப்பின் பொருட்டு ஒதுக்கப்படுகிற கீழ்நிலை தொழில்களாக மட்டுமல்லாமல் சமூக அந்தஸ்தை பெற்று தரக்கூடிய பணியாகவும் இருக்கவேண்டும். 

ஆனால் இந்த கல்வியும் வேலைவாய்ப்பும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு பிரிவினருக்கு மட்டுமே பாத்தியப்பட்ட பொருளாகி, மற்றெவருக்கும் கைக்கூடாத பொருளாக மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆக ஒருவன் மற்றவர்களைப் போலவே சம உரிமையும் வாய்ப்பும் பெறுவதற்கான அடிப்படைத் தளங்களான கல்விமற்றும் வேலைவாய்ப்பில் எல்லோருக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதே இட ஒதுக்கீட்டின் நோக்கமாகும்.

அப்படி எனில் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இடஒதுக்கீடு? இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கும்மேலாகிவிட்டதே, இப்போது தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட எவ்வளவோ பேர் பொருளாதார நிலையில்உயர்ந்துவிட்டார்கள், அரசு பதவிகளை பெற்றுவிட்டார்கள்.இப்போது எல்லோருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது.எல்லோரும் கல்வியடைய வாய்ப்பிருக்கிறது. ஆனால்இன்னும் எத்தனை காலம் இட ஒதுக்கீடு என்ற பெயரில்பார்ப்பனர்களை வஞ்சிக்கப்போகிறீர்கள்? இதுவும் சாதிஆதிக்கம் தானே என்பவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த ஒதுக்கீடு நீடிக்கவேண்டும் என்பதை பார்ப்பதற்கு முன் இந்த பதிவின்பிரதான நோக்கத்திற்கு வருகிறேன். இன்று இட ஒதுக்கீட்டைஎதிர்ப்பவர்கள் ஓயாமல் சில கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

  • பின்தங்கியவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்குத்தான் இடஒதுக்கீடு எனில் பார்ப்பனர்களில் ஏழைகளில்லையா? எத்தனையோ பேர் நன்கு படித்தும்கூட உயர்கல்வியில், வேலைவாய்ப்பில் இடம் கிடைக்காமல் அல்லலுறுகிறார்களே, இது அநீதி இல்லையா? இப்படி இடஒதுக்கீட்டினால் பார்ப்பனர்கள் பாதிக்கப்படுவதற்கு உங்கள் பதில் என்ன? 
  • பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு எவ்வகையில் சரியில்லையென மறுக்கிறீர்கள்? அது உண்மையிலேயே சமூகத்தில் பின்தங்கிய அனைவருக்கும் முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கிறதல்லவா? அதை நீங்கள் மறுப்பதன் மூலம் பார்ப்பன விரோதத்தையல்லவா வெளிப்படுத்துகிறீர்கள்?
  • இட ஒதுக்கீடு என்ற பெயரில் மதிப்பெண்களை குறைத்து தேர்ந்தெடுப்பதால் தகுதியற்றவர்கள் பதவிக்கு வரக்கூடிய ஆபத்து உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? மருத்துவம், கல்வி, நிர்வாகம் போன்றவற்றில் இட ஒதுக்கீடை பின்பற்றுவதால் தகுதியற்றவர்கள் அந்த பொறுப்பிற்கு வரக்கூடிய சூழல் ஏற்படுகிறதென்பதை ஏற்கிறீர்களா, மறுக்கிறீர்களா?

சரி, கேள்விகள் போதும். இனி விடைகளை அலசலாம்.

முதல் கேள்வி பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி. உண்மையாகவே பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுகிறார்களா? இன்றும் அரசின் பெரும்பாலான பதவிகளை பார்ப்பனர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். 2012 ஆம் ஆண்டு வெளியான தேசிய புள்ளி விவரப்பட்டியலின் படி மத்திய அரசின் செயலாளர் பதவிகளில் ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட இல்லை. 

அரசின் அதிகாரமிக்க பதவிகள் அனைத்தும் பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்க இடைநிலைச் சாதியினராலேயே ஆக்கிரமிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களோ இடஒதுக்கீடு இருந்தும் இன்னும் அதிஉயர் பதவிகள் ஏதும் அடையப்படாமலே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்?

இன்று அரசு பணியில் ஆசிரியனாக இருக்கும் நான் என் ஊரிலேயே முதல் நபராய் கல்லூரிப் படிகளில் காலெடுத்து வைத்தவன். அப்படியானால் எனக்கு முன் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? எனக்கே இரண்டு அண்ணன்கள் உண்டு. அவர்களின் கதி? முறையான வழிகாட்டுதலும் பயிற்சியும் பொருளாதார பின்புலமும் இல்லாமல், உங்களுக்கெல்லாம் படிப்பு ஒரு கேடா என்று பெங்களூர், சென்னை, மும்பை என கூலித் தொழிலாளிகளாகி கண்ணீரோடு வாழ்வை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

ஏனென்றால் எங்கள் பெற்றோர்கள் படிப்பு வாசமே அறியாதவர்கள், ஆண்டைகளின் அடிமைகளாகவே தங்கள் ஆயுளை கரைத்தவர்கள். தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவோ, கல்வியை கண்காணிக்கவோ, மேல்படிப்பு குறித்த விவரமேதும் அறியாதவர்களாகவே இருந்தார்கள். 

ஆனால் பார்ப்பனர்கள் மற்றும் ஆதிக்க இடைநிலை சாதிகளின் நிலை அப்படியில்லை. அவர்களின் பெற்றோர்கள் படித்தவர்களாக, பொருளாதார பின்புலம் உடையவர்களாக, மேற்படிப்புகள் குறித்த உலக அறிவு உடையவர்களாக இருந்தார்கள். அதனால்தான் அவர்களின் பிள்ளைகள் எளிதில் வேலைவாய்ப்புகளை கைப்பற்றுகிறார்கள். 

ஆனால் மறுபுறமோ கல்லூரியை எட்டிப்பிடிக்கவே சுதந்திர ஜனநாயக நாட்டில் என் போன்றோருக்கு அறுபது ஆண்டுகள் தேவைப்படுகிறது. காரணம் வாய்ப்புகளும் உரிமைகளும் மறுக்கப்பட்ட பின்னனியுடைய தலைமுறைதான் காரணம். ஆனால் என்போன்று ஒன்றிரண்டு பேர் இன்று அரசுப் பணியில் இருப்பதாலேயே, தாழ்த்த்தப்பட்டவர்கள் முன்னேறிவிட்டார்கள், பார்ப்பனர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. 

உண்மைதான், பார்ப்பனர்களிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டின் நோக்கம் பொருளாதார ஏற்ற தாழ்வை சமன்படுத்துவது மட்டுமல்லவே! இப்போதுதான் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து என்னைப் போன்று துளிர்விடவே ஆரம்பிக்கிறோம். ஆனால் ஒன்றிரண்டு பார்ப்பனர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக உங்கள் ரத்தம் கொதிக்கிறதே! ஓ, இதற்கு பெயர்தான் மனுநீதியா?

பார்ப்பனர்களில் ஏழைகளில்லையா, அவர்கள் இடஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதானே நிஜம் என்ற வாதம் இங்கே முன்வைக்கப்படுகிறது. ஆனால் 3 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் இன்று பெற்றுள்ள வேலைவாய்ப்பு சதவிகிதத்தையும் மற்ற பிரிவினர்களின் வேலைவாய்ப்பு சதவீதத்தையும் உற்று நோக்கினாலே உண்மை விளங்கிவிடும். ஆனால் இதையெல்லாம் கவனமாக மூடி மறைத்துவிட்டு எங்கள் ஏழைப் பார்ப்பனர்களை காக்க யாருமேயில்லையா என்று குடம்குடமாய் கண்ணீர் வடிக்கிறார்கள். 

இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதே எல்லாவற்றையும் நீயே அபகரித்துக் கொள்ளாதே, மற்றவர்களுக்கும் கொஞ்சம் கொடுப்பதே முறை என்று பகிர்ந்தளிப்பதற்காகத்தானே. அப்படி உரிமைகளும் வாய்ப்புகளும் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் போது, ஏற்கனவே அதை முழுபோகமாய் அனுபவித்தவர்களில் ஒரு சிலர் பாதிக்கப்படலாம். ஆனால் இந்த இட ஒதுக்கீட்டினால்தான் இதுகாறும் வாய்ப்புகளே மறுக்கப்பட்ட தலைமுறைகளில் ஒரு சிலர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் வாசத்தையே நுகர ஆரம்பித்திருக்கிறார்கள் எனும்போது இந்த மீச்சிறுபாதிப்பின் அளவு கண்டுகொள்ள தக்கது அல்ல.

அப்படியே நோக்கினும் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதற்காக பாதிக்கப்படுகிறார்கள் என்பது பொய்யினும் கீழான பொய். அவர்கள் பொதுப் பிரிவினராக வைக்கப் பட்டிருக்கிறார்கள், அவ்வளவே. இன்று தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்ட சதவிகிதம் 18+1 என்ற அளவிலிருக்கிறது. 100 சதவீதத்தில் அவர்களின் மக்கள்தொகை அளவைவிட குறைந்த அளவான 19 சதவிகித இடஒதுக்கீட்டினால் மற்ற பிரிவினர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் எந்தளவு உண்மையிருக்கிறது? 

ஆனால் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, ஆதிக்க இடைநிலைச் சாதியினரும் ஒரு கருத்தை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இட ஒதுக்கீட்டின் மொத்தபலனையும் அனுபவிப்பவர்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்தான் என்ற பிம்பமானது வலிய திணிக்கப்படுகிறது. ஆனால் மொத்த விழுக்காட்டில் 19 சதவீதமே இப்பிரிவினருக்கு ஒதுக்கப்படுகிறது என்பதை கூர்நோக்கவேண்டும்.

அடுத்ததாக, இட ஒதுக்கீட்டினால் 'தரமற்றவர்கள்' உருவாகிறார்கள் என்பது பற்றி. ஒரு ஓட்டப்பந்தயப் போட்டி நடக்கிறதென வைத்துக்கொள்வோம். அங்கே தொழில்முறை பயிற்சிப் பெற்ற பலர் போட்டியில் பங்கேற்கிறார்கள். அவர்கள் மிகுந்த தெம்போடு காணப்படுகிறார்கள். காரணம் அந்த போட்டியில் ஏற்கனவே அவர்களின் மூதாதையர்கள் பலர் பட்டம் வென்றவர்கள். எனவே வெல்வோமா, மாட்டோமா என்ற அச்சமேயில்லை.

இந்த போட்டியை ஒரு மாற்று திறனாளி அருகே நின்று வேடிக்கைப் பார்க்கிறான். அவனுக்கும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள ஆசை. ஆனால் நீயெல்லாம் இதற்கு தகுதியானவனல்ல, இந்த பக்கமே வரக்கூடாது என்று ஒவ்வொரு போட்டியின் போதும் விரட்டியடிக்கப்படுகிறான். 

காலங்கள் கடந்தோடுகின்றன. இனி குறிப்பிட்ட பிரிவினர் மட்டும்தான் போட்டியில் பங்கேற்கலாம் என்பது மாறி எல்லோரும் போட்டியில் பங்கேற்கலாம் என விதிகள் திருத்தியமைக்கப்படுகின்றன. இதுகாறும் வேடிக்கைப் பார்த்துக் கிடந்தவர்களில் சிலர் நல்லஉடல்நிலையோடும் முழு உடல் தகுதியோடுமிருந்தார்கள். அவர்கள் இனி ஏற்கனவே போட்டியில் பங்கேற்பவர்களுடன் சேர்ந்து தகுதி ஓட்டப் போட்டியில் பங்கேற்கலாம் என முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் சில மாற்றுத் திறனாளிகளும் இருந்தார்களல்லவா? அவர்கள் இந்த போட்டியாளர்களால் விரட்டியடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தங்கள் உடல் உறுப்புகளை இழந்தவர்கள். அவர்களையும் மற்றெல்லாரையும் போல ஓடி, முடிந்தால் வெற்றிப் பெறுங்கள் என தட்டிக்கழிப்பது அறிவுடைய செயலாகுமா? ஆகாதல்லவா, அதனால்தான் இந்த தகுதி ஓட்டப்பந்தயத்தில் சிறப்புவிதியொன்று உருவாக்கப்படுகிறது. 

அதன்படி இவர்களின் உடல்அங்க இழப்புகளுக்கேற்ப சில பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள். நீங்கள் முழு தூரத்தையும் ஓடி கடக்க வேண்டாம், இந்தளவிற்கான தூரத்தை கடந்தாலே போதுமென பிரிவினருக்கு ஏற்றபடி கடக்க வேண்டிய தூரத்தில் சில சலூகைகள் காட்டப்படுகின்றன. இது முழு உடல்நலன் மற்றும் தகுதியோடிருப்பவரும் மாற்றுத் திறனாளியும் ஒரே அளவுகோலில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல என்று அறிவுடையோர் சிந்தித்து எடுத்த முடிவு. இதில் என்ன தவறிருக்கிறது?

சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, முடக்கப்பட்டவர்களுக்கு அரசியல் சட்டப்படி தகுதி மதிப்பெண்கள் மற்றும் வயதுவரம்பில் சில சலூகைகள் காட்டப்படுகின்றன. அவர்களின் முடக்கப்பட்ட நிலையையும் அவர்களால் மற்ற பிரிவினரோடு பொதுப் பிரிவில் போட்டியிட்டு வெற்றிப்பெறுவது இயலாத விஷய மென்பதால் அவர்களும் போட்டியில் பங்கேற்க ஏற்ற வகையில் இந்த ஏற்பாடு துணை செய்கிறது. 

ஆனால் இதை தவறு என்பவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இன்று தகுதியான, திறமையான அனைவரும் பொதுப் பிரிவில் தேர்வெழுதி வென்றவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்கு ஏதேனும் சான்று இருக்கிறதா? அப்படி ஏதேனும் இதுவரை நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? ஓரிரு மதிப்பெண்களில் சலூகை காட்டப் படுவதாலேயே தகுதி காணாமல் போய்விடுமெனில் அரசு இடஒதுக்கீட்டின்படி உயர் கல்வியில் இடம் கிடைக்காமல் பணக்கட்டுகளை வீசி நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெற்று படிப்பவர்களின் தகுதியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தகுதி பற்றி கொதித்தெழும் பலரும் இப்படியான பண தகுதியினால் தான்இடம் பெற்று படித்தவர்களாக இருக்கிறார்கள், என்ன ஒருமுரண் இது!

உண்மை தெளிவோம்.

http://dleojoseph.blogspot.in/2014/12/blog-post_90.html

No comments:

Post a Comment