Tuesday, June 16, 2015

புலிகள் இயக்க ஆதரவாளர்கள் - நன்றிகெட்டப் பண்பு

Prabhakar Valli:

ஈழப்போர் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த நாட்கள் மிகவும் மன வலி ஏற்படுத்திய நாட்கள்..
ஈழ ஆதரவாளர்களாகிய நாங்கள் எப்பொழுதும் கணிணி முன்பாகவே அமர்ந்திருந்தோம்..
நிமிடத்திற்கொருதரம் இணையதளங்களுக்குச் சென்று போர் செய்தியை பார்த்தபடி இருந்தோம்..
ஒவ்வொரு செய்தியும் எங்களது கனவை நம்பிக்கையை முற்றாக கலைத்தபடி இருந்தது.
சாப்பிடாமல் தேனீரைக் குடித்தபடி நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தோம்..
இன்னும் பல ஈழ ஆதரவு நண்பர்கள் பல ஊர்களில் இருந்தும் எங்களை தொலைபேசியில் அழைத்து போர் நிலவரங்களை கேட்டுக் கொண்டிருப்பார்கள்..
நாங்கள் எவ்வளவு சோர்வுற்றிருந்த போதிலும் அவர்களுக்கு சில நம்பிக்கையான செய்திகளை சொல்லுவோம்..
நாள் நெருங்க நெருங்க எங்களுக்கு மனப்பதட்டம் அதிகரித்தது..
ஒரு நாள் நள்ளிரவில் நான் அறிவுமதி அண்ணனுக்கு ஃபோன் பண்ணி அழுதிருக்கிறேன்.. அண்ணன், நாம் எல்லோரும் ஒரு இடத்தில் இருப்போம்.. ஈழத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்.. அங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இப்படி தனித்தனியே இருப்பது மிகவும் மனப்பதட்டத்தை உண்டாக்குகிறது.. என்னால் தூங்கவே முடியவில்லை அண்ணன் என்று கெஞ்சிக் கேட்டிருக்கிறேன்..
என்னைப் போலவே இந்த பதட்டத்திற்கு ஆளான சில ஆயிரம் ஈழ நண்பர்கள் அன்று தமிழகம் முழுவதும் இருந்தார்கள்..
கலைஞரும் கனிமொழியும் கூட அப்படி இருந்தவர்கள்தான்..
கனிமொழி யார் யாரையெல்லாம் சந்தித்தார், யார் யாரிடமெல்லாம் போர் நிறுத்தத்திற்காக மன்றாடினார் என்பது கனிமொழி வட்டத்தில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்..
கலைஞர் யார் யாரிடமெல்லாம் பேச முடியுமோ அத்தனை பேரிடமும் பேசவே செய்தார்..
விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியை கொன்று விட்டு அதே குடும்பத்திடம் இருந்து கருணையை பெற்றுத் தரும்படி கலைஞரை நிர்பந்தித்தார்கள்..
கலைஞரும் முயற்சி செய்தார்..
‘அவர்கள் ராஜீவ் காந்தியை கொலை செய்தது உங்களுக்கு ஒரு விசயமாகவேப் படவில்லையா?’ என்று மத்திய அரசைச் சார்ந்த பலரும் கலைஞரைக் கேட்டது நடக்கவே செய்தது.
இன்றும் ராகுல்காந்தி கலைஞரை சந்திக்காமலே இருப்பதற்கு ராகுல்காந்தி கலைஞரை பிரபாகரன் ஆதரவாளர் என்று தீர்மானமாக நம்புவதே காரணம்..
அன்று கலைஞரால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை..
விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது அமெரிக்கா உட்பட்ட சர்வதேசநாடுகள் சேர்ந்தெடுத்த முடிவு.. அந்த முடிவில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.
கலைஞரும் கனிமொழியும் என்ன செய்து விட முடியும்..
கலைஞரும் கனிமொழியும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்த்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை அந்த நாட்களில் செய்தார்கள்!
போர் முடிவுக்கு வந்து கனிமொழி ஈழத்திற்கு செல்லும் சூழல் ஏற்பட்ட போது, ஈழமக்களுக்கு மிகவும் அதியவசியமாக என்ன தேவைப்படும் என்று தனக்குத் தெரிந்த ஈழ நண்பர்களிடம் எல்லாம் விசாரித்து பொருட்கள் வாங்கி சேகரித்து கொண்டு சென்றார்.. அன்று கனிமொழியிடம் மிளிர்ந்தது ஒரு தாயன்பு.
இன்று விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கலைஞரையும் கனிமொழியையும் தூற்றுகிறார்கள்..
துரோகப் பட்டம் சூட்டுகிறார்கள்.
பிரபாகரன் விரும்பிய வண்ணம் ஆயுதக்கடத்தல் செய்வது, பிரபாகரன் விரும்பிய வண்ணம் படுகொலைகளுக்கு உளவு பார்த்து சொல்வது, பிரபாகரன் செய்த படுகொலைகளை நியாயப்படுத்துவது , இன்னும் இது போன்ற இழிவான காரியங்களில் புலிகளுக்கு அனுகூலமாக செயல்படுகிறவர்களை போற்றுவதும், அவ்வாறு செய்யாதவர்களை தூற்றுவதும் விடுதலைப் புலிகளின் இயல்பு..
விடுதலைப் புலிகளின் இயக்கம் அழிந்து போனதற்கு அவர்களின் இந்த நன்றி கெட்டப் பண்பு மிக முக்கிய காரணிகளில் ஒன்று..
கனிமொழியைப் பழிப்பதன் மூலம் இன்னும் அந்த நன்றிகெட்டப் பண்பை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள் இயக்க ஆதரவாளர்கள்!

https://www.facebook.com/prabhakar.valli/posts/10205807129850750

No comments:

Post a Comment